பாடல் எண் :3058
திருஞான சம்பந்தர் திருவுள்ளஞ் செய்ததற்குச்
தருவாய்மை மறையவருந் தாதையருந் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப் "பிஞ்ஞகனா ரரு"ளென்றே
உருகாநின் றின்பமுறு முள்மகிழ்சசி யெய்துவார்;
1160
(இ-ள்) திருஞான சம்பந்தர்....செய்ததற்கு - திருஞான சம்பந்தர் இவ்வாறு திருமணம் உடன்பட்டுத் திருவுள்ளஞ் செய்ததற்காக; பெருவாய்மை...பெற்றாராய் - பெரிய வாய்மை மறையவர்களும் தாதையாராகிய சிவபாதவிருதயரும் அளவிட்டுத் தரித்தற்கரிய பெரிய வாழ்வினைப் பெற்றவர்களாகி; பிஞ்ஞகனார்...எய்துவார் - இஃது இறைவரது திருவருளேயாம் என்றே துணிந்து மனமுருகி இன்பம் பொருந்திய மனமகிழ்ச்சி யடைவாராகி;
(வி-ரை) திருஞான சம்பந்தர் திருவுள்ளஞ் செய்ததற்கு - உலகிறந்த சிவஞான முணரப்பெற்றவரா யிருந்தும் உலகியல்வழி ஒழுக இவ்வாறு இசைவு தந்தமைக்கு என்பார் திருஞான சம்பந்தர் என்ற பெயராற் கூறினார். மேலும் (3060) இவ்வாறே காண்க. திருஞான சம்பந்தர் ஆயினும் என்க.
வாய்மை - மறைக்கு அடைமொழி; இறைவர் வாக்கு ஆதலின். மறையவர்க்காக்கி யுரைப்பினுமாம்.
தாங்கரிய பெருவாழ்வு - தரித்தற்கரிய - அடங்காத - மட்டற்ற - பெரிய வாழ்வு.
பிஞ்ஞகனார் அருள் என்றே உருகா நின்று - இஃது இறைவர் தம்பாற் செய்த பேரருளேயாம் என்றே துணிந்து கொண்டதனால் மனமுருகினார்; முன் "கண்டத்தார் தமைத்தொழுது" (3057) என்றதனை விரித்தபடி; தொழுத பின்னர் மேலும் எண்ணி எண்ணி மனமுருகினார் என்றலுமாம்.
எய்துவார் - எண்ணினார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.