பாடல் எண் :3062
ஒப்பரிய பேருவகை யோங்கியெழு முள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு மறுகெல்லா மணிபெருக்கிச்
செப்பரிய வார்வமிகு பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
"யெப்பொருளு மெய்தினே"னெனத்தொழுதங் கெதிர்கொண்டார்.
1164
(இ-ள்.) ஒப்பரிய....உள்ளத்தால் - ஒப்பில்லாத பெருமகிழ்ச்சி ஓங்கி மேலெழும் மனத்தினோடு; அப்பு நிறை...அணிபெருக்கி - நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து வீதியை யெங்கும் மிக அலங்கரித்து; செப்பரிய....சென்றே - சொல்லுதற்கரிய ஆசை மிகுகின்ற பெருஞ் சுற்றத்தாருடன் சென்றே; எப்பொருளும்...எதிர்கொண்டார் - "உறுதிப்பொருள்க ளெல்லாவற்றையும் நான் அடைந்தவனாயினேன்" என்று கூறித் தொழுது அங்கு அவர்களை எதிர்கொண்டனர்.
(வி-ரை.) அப்புநிறை குடம்.....அணி பெருக்கி - நிறை குடமும் விளக்கும் வைத்து வீதியலங்கரித்து எதிர்கொள்ளுதல் திருத்தொண்டர்களையும் ஆளுடைய பிள்ளையாரது தொடர்பு மேற்கொண்டு வரும் மறையவர்களையும் எதிரேற்கும் முறையாகும். "போதுமவர் பெருந்தன்மை" (3059) என்ற குறிப்பின் உண்மை ஈண்டும் மேலும் வைத்துக் காண்க.
மறுகெல்லாம் - வீதியெங்கும்; அப்பு - வாச நன்னீர். நிறை குடமும் விளக்கும் வைத்து என்க. அணி - வாழை - தோரணம் முதலிய பிற அலங்காரங்கள்.
பெருஞ் சுற்றம் - பெருமையாவது அணிமையிற் சிவனடி சாரப் பெறும் பேறு வாய்ப்புள்ளமை குறிப்பு. பின்னரும் "பார்நிலவு கிளை" (3148) என்பார்.
எப்பொருளும் எய்தினேன் - உம்மை - முற்றுமை. எப்பொருளும் என்றது பதமுத்தியும் பரமுத்தியும் படிமுறையால் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என நூன்முடிபு கூறும் உறுதிப்பொருள்கள் எல்லாமும். உண்மையாகவே ஈண்டு எல்லாவற்றுள்ளும் சிறந்த வீடுபேறு எய்தி முடிந்தது காண்க.
எய்தினேன் - தெளிவுப்பொருட்டு. "வாராக் காலத்து வினைச்சொற் கிளவி, சிறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும், இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை" (தொல். சொல். வினையி - 48) என்பதிலக்கணம்; எய்தினவ னாயினேன்; எனது பிறவி பயன்பெற்றது என்பது.
தொழுது - பிள்ளையார் சார்பினரும் திருத்தொண்டரும் ஆதலின் தொழுதல் முறை என்க. அங்கு - நல்லூர் சார்கின்ற அவ்விடத்து.
விளக்கால் - என்பதும் பாடம்.
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.