பாடல் எண் :3067
திருமணஞ்செய் கலியாணத் திருநாளுந் திகழ்சிறப்பின்
மருவியவோ ரையுங்கணித மங்கலநு லவர்வகுப்பப்
பெருகுமண நாளோலை பெருஞ்சிறப்பி னுடன்போக்கி
அருள்புரிந்த நன்னாளி லணிளைப்பா லிகைவிதைத்தார்.
1169
(இ-ள்.) திருமணம் செய்....வகுப்ப - திருமணஞ் செய்ய நின்ற கலியாணத் திருநாளினையும் விளங்கும் சிறப்பினுடன் கூடியி ஓரையினையும் கணித மங்கல நூலுணர்ந்த பெரியோர்கள் வகுத்துக் கூற; பெருகு......போக்கி - பெருகும் மணத் திருநாளோலையினைப் பெரிய சிறப்பினோடு மணமகள் வீட்டாருக்கும் ஏனைச் சுற்றத்தார் முதலியோர்க்கும் போக்கி; அருள் புரிந்த....விதைத்தார் - திருவருள் புரிந்து கொடுத்த நல்ல நாளிலே அழகிய பாலிகைகளில் அழகிய முளையை விதைத்தார்கள்.
(வி-ரை.) திருமணஞ் செய் கலியாணத் திருநாள் - கலியாணம் - நன்மை - சுபம் - மேன்மை என்ற பொதுமை குறித்து நின்றது; இது வடமொழி வழக்கு. தமிழிற்போலக் கல்யாணம் என்ற சொல் வடமொழியில் மணம் என்ற பொருள் தருவதில்லை என்ப; திருநாள் - நல்லநாள்.
திகழ் சிறப்பின் மருவிய ஓரை - அந்நன்னாளின் நல்ல பகுதி; ஓரை - இலக்கினம் என்பர். 21/2 நாழிகைகொண்ட நாட்கூறு; ஆங்கிலரது Hour = மணி என்பது இப்பகுதியினின்றும் போந்தது போலும்; ஓர்ந்து பெறுவதனால் ஓரை என வந்த தென்பாருமுளர்; அது பொருந்தாது.
கணித மங்கல நூலவர் - சோதிடர்; கணிதம் - கணக்குச்செய்து கோள்களின் நிலையும் பயனும் முதலியவற்றைக் காண்போர்; நூல் - சோதிட நூல். மங்கல நூலவர் - மறையின் ஆறு அங்கங்களுள் ஒன்றாதலின் இப்பெயராற் கூறினார். கணித நூலவர் - என்றலே அமையுமாயினும் இங்கு மங்கல நல்வினைபற்றித் தொழிற்பட வருதலான் மங்கல நூல் என்றார். இனி இச்சோதிடர் ஏனை உலகினர் பக்கல் வரும் நன்மைகளுக்கு வகுக்கும் நாளும் ஓரையும் மங்கலமென்ற பெயராறசொல்லினும் அஃது உபசாரமாத்திரையானன்றி உண்மையிற் பொருந்தா; என்னை? அந்த மங்கலமெனப்படுவன வெல்லாம் ஒருகாலத்து அழிவுபட்டு அமங்கலங்களாக முடிவ தொருதலையாதலின் என்க; ஆயின் இங்குக் கணித மங்கலநூலவர் வகுத்த நாளும் ஓரையும் அத் திருமணத்தைச் சார்ந்த எல்லாருக்கும் நித்திய மங்கலமாகிய அழிவில்லாத சிவத்திருமண மங்கால நிலையைப் பயப்பித்தன. அக்குறிப்புப்பட மங்கலச்சொற் புணர்த்திக் கூறினார் என்றலுமாம். இராமனது முடிசூட்டடுக்காக வகுத்த நாளே அவன் முடிதுறந்து காட்டுக்குப் போகும் நாளாக ஆயினமையால் அதனை வகுத்த கணிதர்களைக் "கணித மாக்கள்" என்றும், அந்நாளினை "முடிபுனை கடிகை நாள்" என்றும் கூறிய கம்பனது குறிப்பு இங்கு வைத்துக் காணத்தக்கது.
பெருகு மணநாளோலை - மணத்தின் நன்னாளும் ஓரையும் குறித்தெழுதிய வோலை; "நாளோலை விட்டார்" (156); ஓலை ஏந்திக்.....குறுகினார்; எதிரே வந்து....கொண்டார் (157) என்றதும் பிறவும் காண்க.1
போக்கி - மணமகள் வீட்டாருக்கு உரியவாறு நாள்ஓலை ஏந்திக்கொண்டு சேர்த்தலும், ஏனை சுற்றத்தார்பால் போக்கிச் சேர்க்கலும் ஆம்.
அருள் புரிந்த நன்னாள்- அருள் புரிந்த - கணித மங்கல நூலவர் வகுத்துத்தந்த. திருமணச் சார்புகொண்ட யாவரும் சிவனடி சார்ந்து வீடுபெற்றுய்யும் நன்னாளாக இஃது ஆகிவிடும்படி முன்னரே இறைவர் கருணை செய்தளித்த என்ற குறிப்பும் காண்க. "திருமணஞ்செய் திருநாளுக் கெழுநாளா நன்னாள்" என்றபடி முன் எழா நாளில்பாலிகைகளில் முளை தெளித்தல் மரபு. இஃது நூல்விதியாதலின் அருள்புரிந்த என்றார் என்றலுமாம். பாலிகைக்குரிய விதையை விதைத்தார் என்க. இவை முளைத்த பின்னர்ப் பாலிகைக்குரிய விதையை விதைத்தார் என்க. இவை முளைத்த பின்னர்ப் பாலிகைகளில் முளைபூரித்தல் திருமணநாளுக் கெழுநாளா நன்னாளில் நிகழுமென்பது பின்னர்க் கூறப்படும் (3070). இவ்வாறு நாட்குறித்துத் திருமணத்துக்குரிய பகுதிகளைத் தொடங்குதல் முன்னாளில் நமது பெரியோர் வழக்கும், நூல் விதியுமாம்.
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.