பாடல் எண் :3070
மன்னுபெருஞ் சுற்றத்தா ரெல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக் கெழுநாளா நன்னாளிற்
பன்மணிமங் கலமுரசம் பல்லியங்க ணிறைந்தார்ப்பப்
பொன்மணிப்பா லிகைமீது புனிதமுளை பூரித்தார்.
1172
(இ-ள்.) மன்னுபெரும்.....வந்தீண்டி - நிலைபெற்ற பெரிய சுற்றத்தார்கள் எல்லாரும் (சீகாழியின்கண்) வந்து கூடி; நன்னிலைமை....நன்னாளில் - திருமணமாகிய நன்னிலை பெறும் திருநாளுக்கு ஏழு நாட்களின் முன்னாகிய நல்ல நாளிலே; பன்மணி....ஆர்ப்ப - பல அழகிய மங்கல முரசும் பலவகை இயங்களும் நிறைந்து முழுங்க; பொன்....பூரித்தார் - பொன்னிட்ட அழகிய பாலிகைகளின்மீது தூய முளையை நிறைத்துத் தெளித்தார்கள்.
(வி-ரை.) வந்து ஈண்டி - சீகாழியில் வந்து நிறைந்து. நன்னிலைமைத் திருநாள் - மணஞ்செய் நாள்; மணத்தைச் சார்ந்தார்கள் எல்லாரும் நன்னிலையாகிய சிவானந்த பரிபூரண நிலையினை அடையும் திருநாள் என்றதும் குறிப்பு.
எழுநாள் - முன் ஏழாவது நாள்; பூரித்தல் - முன் (3067) கூறியபடி விதைத்து முளைத்த முளைகளை எடுத்துப் பாலிகைப் பாண்டில்களில் மண்ணிட்டுத் தெளித்து நீர் வார்த்தல். இது திருமணத் திருநாளின்ஏழாநாளிற் செய்வது மரபும் விதியுமாம்.
பன்மணி....ஆர்ப்ப - இச்சடங்கு மங்கல முழக்குக்களுடன் நிகழ்த்தப்படுவதொன்றாம்.இந்நாளில் நிகழும் ஒருநாள் அரைநாட் கல்யாண முறைகளுடன் இதனையும் ஒத்துக் காண்க; பாலிகை விதைத்தல், முளை பூரித்தல் இவை மணச் சடங்கின் சிறந்த அங்கமாவன. கோயிற் சிறப்புக்களிலும் திருமுளை (அங்குரார்ப்பணம்) என்பது சிறந்த அங்கமாகும் என்பது ஆகமவிதி; இது சிருட்டிநிலை குறிக்கும். திருமணங்களில் இந்த முளைகளின் செழுமை, வளர்ச்சி, செறிவு முதலியவற்றின் அளவே அவ்வம் மணங்களின் சிறப்பும் பயனு மாவன என் றறிகுறியாகக் காணும் வழக்கு முண்டு. புனித முளை என்றது சிவமணமாய் நிகழ்தற் குறிப்பு. பூரித்தல் - நிறைத்தல்.
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.