பாடல் எண் :3071
சேணுயரு மாடங்க டிருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைக ணிகரிலணி பெறவிளக்கிக்
காணவருங் கைவண்ணங் கவினோங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண் மங்கலக்கோ லம்புனைந்து,
1173
(இ-ள்.) சேணுயரும்...மாளிகைகள் - வானத்திலுயரும் மாடங்களையும், செல்வம் பெருகும் மண்டபங்களையும், நீண்ட நிலைகளையுடைய மாளிகைகளையும்; நிகரில்...விளக்கி - ஒப்பற்ற அழகு பெறும்படி விளக்கஞ் செய்து; காணவரும்.....எழுதி - காட்சி பொருந்தவரும் ஓவியத் திறம் அழகு மிகும்படிச் சித்திரித்து உருவங்களை அங்கங்கும் எழுதி; வாணிலவு...புனைந்து - ஒளி பொருந்திய அழகிய மணிகிளழுத்திய முதற்கடை வாயிலில் மங்கலக் கோலங்களைச் செய்து;
(வி-ரை.) சேணுயரும் - திருப் பெருகும் - நீணிலைய - இவை முறையே மாடங்கள் - மண்டபங்கள் -மாளிகைகள் என்ற இவற்றின் இயல்புகளை விளக்கி நின்றன; சேண் - விசும்பு; "மாடம், விண்டாங்குவபோலும்" (தேவா) என்றபடி விண்ணவர்களை உயர்த்தும் என்றதும் குறிப்பு. திரு - அருட் செல்வமும் பொருட் செல்வமும்; நீள் நிலைய - நீண்ட நிலைகளையுடைய; நிலைகள் - நிலவுகளும் மேன்மாடிகளும்.
விளக்கி - விளக்கம் செய்தலாவது புதிதாக விளங்கச் செய்தல்.
காணவரும்...எழுதி - ஓவியங்களைக் கைத்தொழில் விளங்க எழுதுவித்தல் முன்னாளில் மங்கல அணிவகைகளுள் முன்னரே திறம்பட அமைந்து சிறந்து விளங்கியது; "யாழுமெழுதி யெழின்முத் தெழுதி யிருளின்மென்பூச், சூழு மெழுதியொர் தொண்டையுந் தீட்டியென் றொல்பிறவி, யேழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம், போழு மெழுதிற்றோர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே" (திருக்கோவை - 79); "கன்னி யனநடைக்குப், படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே" (மேற்படி - 78); "கழிகின்ற வென்னையு நின்றநின் கார்மயி றன்னையும்யான், கிழியொன்ற நாடியெழுதி" (மேற்படி - 76). "அயைவ மெழுத லரிதென விலக்கல்" (சூத்திரம்); "படிச்சந்த மாகப்பண்ணப்படும் படங்கள் உளவே நுமது சித்திரச்சாலையின்கண்? = படிச்சந்தமென்பது ஒன்றன் வடிவையுடைத்தாய் அதுவென்றே கருதப்படுமியல்பை புடையது"; "முன்ன, மொருக ணெழுதிவிட் டொன்றெழுதா தோடித், தெருவம் புகுவார் திகைப்பார்"........."மணியார்த்த, தூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க், காம னுருவம் வரவெழுதிக் - காமன், கருப்புச் சிலையு மலரம்புந் தேரு, மொருப்பட்டுடனெழுதும் போழ்தில்......" (ஞானவுலா) முதலியவை காண்க. தமிழரிடை முன்னாளில் இவ்வா றுயர்நிலையிலிருந்த ஓவியக் கலைஞானம் அருகி இந்நாளிற் பிறர்பாற் புதிதிற் கற்கத் தொடங்கும் கலையாய் நிற்கின்றது காலக்கொடுமை!
காண வரும் - ஓவியங்களின் அழகினையும் கைத்திறத்தினையும் உண்மை நோக்கினையும் அதிசயித்துப் பிறர் காணவரும். காண்வரும் என்பதும் பாடம்; கைவண்ணம் - சித்திரத் தொழிற் கைத்திற மேம்பாடு; எழுதி - ஓவியங்களையும் பற்பல சித்திரங்களையும் என்று செயப்படுபொருள் வருவித்துரைக்க. எழுதுதல் - தீட்டுதல்; மரபுவழக்கு.
மணிக்கடை - மணிகளிழைத்த முன்கடைவாயில் முகப்பு. கண் - ஏழனுருபு.
நிகரிலொளி - கைவினைஞர் - என்பனவும் பாடங்கள்.