குங்குமத்தின் கொழுஞ்சேற்றின் கூட்டமைப்போ ரினங்குழுமப் பொங்குவிரைப் புதுக்கலவைப் புகையெடுப்போர் தொகைவிரவத் துங்கநறுங் கற்பூரச் சுண்ணமிடிப் போர்நெருங்க வெங்குமலர்ப் பிணைபுனைவோ ரீட்டங்கண் மிகப்பெருக, | 1180
| (இ-ள்.) குங்குமத்தின்...குழும் - குங்குமப்பூவின் கொழுவிய சேறாகிய சந்தனக் குழம்பினை அமைப்பவர்களுடைய இனங்கள் கூட; பொங்குவிரை....தொகை விரவ - மிக்க மணமுடைய புதிய வாசனைப்பண்டங்கள் கூட்டிய கலவையின் தூபப் புகை எடுப்பவர்களின் கூட்டம் பொருந்த; துங்க நறும்...நெருங்க - உயர்வுடைய நறுமணமுள்ள கற்புரச் சுண்ணத்தை யிடிப்போர்கள் நெருங்க; எங்கும்...பெருக - எவ்விடத்தும் மலர்களாலாகிய பிணையல் முதலிய பலவேறு மாலைகளைத் தொடுப்பவர்களின் கூட்டங்கள் மிகப் பெருக; (வி-ரை.) குங்குமத்தின்....கூட்டு - குங்குமப்பூவினைப் பனிநீர் பெய்து பச்சைக்கருப்பூரம், கோரோசனை, புழுகு, கத்தூரி இவை கூட்டிக் குழம்பாக அரைத்த சந்தனம். பொங்கு விரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் - மணமுடைய அகில் தேவதாரு சந்தனம் குங்கிலியம் முதலிய பண்டங்களைப் புதிதின் அமைத்து விதிப்படி கூட்டிய தசாங்கம் என்னும் தூள், இங்குக் கலவை எனப்பட்டது. எடுப்போர் - புகைக் கலயங்களில் ஏந்துவோர். கற்பூரச் சுண்ணம் - இது திருமஞ்சனத்துக்காகும் பொற்சுண்ணம் எனப்படும். இடிப்போர் - இதனுள் உரிய பண்டங்களை இடித்துக் கூட்டுதல் வழக்கு. "ஆடப்பொற்சுண்ண மிடித்து நாமே" (திருவா); நெருங்க - இத்தொழில் செய்வோர் பலர் கூடிநெருங்கி வினை செய்தல் குறிப்பு; கர்ப்பூரம் - பச்சைக் கற்பூரம். மலர்ப்பிணை புனைவோர் - பிணை - பிணையல், தாமம், கண்ணி, இண்டை முதலிய பல வேறுவகை மாலைகளையும் குறித்தது. ஈட்டங்கள் பெருக - பலவேறு இத்துப் பலப்பலராக இத்தொழில் செய்யவேண்டுதல் குறிப்பு. எங்கும் என்றதுமிது. செழுஞ்சேற்றின் - என்பதும் பாடம்.
|
|
|