பாடல் எண் :3079
இனையபல வேறுதொழி லெம்மருங்கு நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லா மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்க ணெருங்குதலா னிதிக்கோமான்
றனையிறைவர் தாமேவச் சமைத்ததுபோ லமைந்துளதால்.
1181
(இ-ள்.) இனைய பல...மறைமூதூர் - இவ்வாறாகிய பலவகைப்பட்ட வெவ்வேறு தொழில்களை எல்லாப் பக்கத்தும் ஒழுங்குபடச் செய்கின்ற மனைகள் வளரும் வீதிகளிளெல்லாம் மணவணியை விளங்கக் காட்டும் மறையவர்கள் வாழும் அவ்வூர்; நினைவரிய...நெருங்குதலால் - நினைத்தற்குமரிய பெரிய வளங்கள் நெருங்கியஅதனாலே; நிதிக் கோமான்....அமைந்துளதால் - குபேரனை இறைவர் ஏவியதனால் அவனே வகுத்ததுபோல அமைந்துள்ளதாம்.
(வி-ரை.) மறுகெல்லாம் மன அணிசெய் மறைமூதூர் - பிள்ளையரது திருமண முயற்சிகளும் தொழில்களும் அவரது திருமாளிகையின் மட்டுமன்றிச், சுற்றத்தார் மட்டுமன்றி, நகரெங்கும் இயன்றன; பிள்ளையாரது திருவவதாரச் சிறப்புப்பற்றிக் கூறியவை ஈண்டு நினைவு கூர்தற்பாலன.நினைவரிய....அமைந்துளதால் - நினைவரிய -நினைத்தற்குமரிய எனச் சிறப்பும்மை விரிக்க. நெருங்குதலால் - தூர் - அமைந்துளது என்று கூட்டுக. பெருவளங்கள் நெருங்குதலாலே இது உலக மக்களாற் செய்தற்கரிது; நிதிக்கோமான் சமைக்கவே அமையும்; அவனும் சிவபெருமானுடைய ஏவலின்றிச் செய்யானாதலின் இறைவர் ஏவ அவன் சமைத்ததுபோலும் என அமைந்தது என்பதாம். தமது ஞானப் பிள்ளையாரது திருமணமாதலானும், தமதுலகு பெறுவிக்கும் சிவமணமாதலானும் இவ்வமைப்புக்களை இறைவரே ஏவி அமைப்பித்தனர் என்பது குறிப்பு. "இருநிதிக் கிழவன் றானே - மொழிவழி யேவல்கேட்ப" (465); "நம்ப ரருளினா லளகை வேந்தன், றன்பெரு நிதியந் தூர்த்துத் தரணிமேல் நெருங்க....மன்பெருஞ் செல்வ மாக்கி வைத்தனன்" (844) என்றவற்றை இங்கு நினைவுகூர்க.
மனை வளரும் மறுகு எல்லாம் - எவ்வெவ்வகை மக்கள் வாழும் எவ்வெவ் வீதிகள் யாவையும்.
நிறைந்துளதால் - என்பதும் பாடம்.இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.