பாடல் எண் :3080
மாறி லாநிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரு நிகரிலா தவருக்
காறு சூடினா ரருட்டிருக் காப்புநா ணணிவார்,
1182
(இ-ள்.) மாறிலா...புகலியின் - ஒப்பற்ற நிறைந்த வளம் தருகின்ற சீகாழிப் பதியில்; மண மீக்கூறு நாளின் முன்னாளினில் - திருமணத்தினை மேற்கொள்ளும் திருநாளின் முன்னாளிலே; வேதியர் குழாமும் நிறுசேர் திருத்தொண்டரும் - மறையோர் கூட்டமும் திருநீறு அணிந்த திருத்தொண்டர்களும் கூடி; நிகரிலாதவருக்கு...அணிவார் - ஒப்பற்றவராகிய பிள்ளையாருக்குக் கங்கையைத் தலையிற் சூடிய இறைவரது அருள் பொருந்திய திருக்காப்பு நாணினை அணிவார்களாகி,
(வி-ரை.) மாறிலா வளம் தரு - நிறைவளம் தரு - என்க. மாறிலா வளமாவது சராசரங்க ளெல்லாம் சிவம்பெருகத் தரும் தன்மை; நிறைவளமாவது திருமணத்தின் பொருட்டு வந்த எண்டிசையினுள்ளோரும் கொணர்ந்த ஈண்டு வளமும், சீகாழியின் இயல்பாயுள்ள உலகியல் வளமும் ஆம்; தருதல் - பெறுதற்கிடமாதல்.
மணமீக்கூறு நாள் - மணஞ்செய் திருநாள்; மீக்கூறும் - மேற்கொள்ளும்.
முன்னாளினில் - காப்பு நாண் அணிவார் - திருமண நாளின் முன்னாளில் காப்பு நாண் அணிதல் மரபு; மணவினைச் சடங்குகள் காப்புநா ணணிதலுடன் தொடங்குகின்றன; காப்புநாண் கட்டுதல் மணமகன், மணமகள் இருவர்பாலினும் நிகழ்வது. "கற்பகப் பூங்கொம் பன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப், பெற்புறு சடங்கு முன்னாப் புரிவுடன் செய்த வேலை" (3120); இவ்வாறு உரியபடி காப்புச் சேர்த்த பின்னர் அதனைப் பின்னர்ச் சடங்குடன் அவிழ்க்கின்ற அளவும் சிவனது காவல் சிறக்கப்பெற்றுள்ளார் என்றும், சிவமுஞ் சத்தியுமாகவே அவ்விருவரும் பாவிக்கப் பெறுவர் என்றும் உலகியலின் தொடக்குக்கள் ஒன்றும் அவரைச் சாரா என்றும் கொள்வது மரபு. காப்பு - காவல்பெறு நிலை; "கண்ணுதலான் றன்னுடைய காப்புக்களே" (தேவா); மேல் அருட்டிருக் காப்புநாண் - என்பதும் காண்க.
வேதியர் குழாமும் - திருத்தொண்டரும் - வேதியர் - பிள்ளயைரது உலகியல் நிலைச் சுற்றம்; திருத்தொண்டர் - சிவச்சார்பு பற்றிய அவரது சுற்றம்; "சுற்றம் மாசிலா வீச னன்பர்" (திருவிளை. புரா); முன்னவர் உலகத்துடன் விடும் சுற்றமும், பின்னவர் என்றும் விடாத சுற்றமுமாம் என்பது "பெருங்கிளைக்குத் தகுதியினாற் றலையளிசெய்து...அடியவர்க ளுடனமர்ந்து" (3050) என முன் குறித்ததும், பிறவும் காண்க. நீறுசேர் - வேதியர்களும் நீறு சேர்வோராயினும் தொண்டர்க்கு நீறு சிறப்புரிமை என்பார் நீறுசேர் திருத்தொண்டர் என்றார். திரு - என்றது சிவச் சார்பு.
நிகரிலாதவர் - பிள்ளையார். "தாவில்தனிச் சிவஞான" நிறைவு பெற்றாராதலின், சிவத்தன்மை பெற்றனர்; ஆதலின் ஓர் உவமனில்லியாகிய சிவம் போன்றார்.
அணிவார் நகர்வலஞ் செய்தார் என வரும்பாட்டுடன் முடிக்க. அணிவார் - அணிவாராய்; முற்றெச்சம். காப்புநாண் - கௌதுகபந்தனம் என்பர்.