வேத வாய்மையின் விதியுளி வினையினால் விளங்க ஒத நீருல கியன்முறை யொழுக்கமும் பெருகக் காத னீடிருத் தொண்டர்கண் மறையவர் கவினார் மாதர் மைந்தர்பொற் காப்புநா ணகர்வலஞ் செய்தார். | 1183
| (இ-ள்.) வேத வாய்மையின்....விளங்க - வேத வாய்மையிற் கூறும் விதிகள் இச்செயலால் விளங்கவும்; ஒத...பெருக - கடல் சூழ்ந்த உலக நடையின்முறையான வொழுக்கங்களும் பெருகவும்; காதல்....வலஞ் செய்தார் - அன்புமிக்க திருத்தொண்டர்களும் மறையோர்களும் அழகிய மகளிர்களும் ஆடவரும் கூடிப் பொன்னாலாகிய காப்பு நாணினை நகர்வலஞ் செய்வித்தார்கள். (வி-ரை.) விதியுளி - விதித்த நெறிகளின் வழக்கு. வேத வாய்மையின் - வேதங்களின் சத்தியவாக்காக விதித்த. வினையினால் விளங்க - இவர்கள் இயற்றும் சடங்குகளால் விளக்கம் பெற. உலகியன்முறை யொழுக்கமும் பெருக - வேதங்களின் விதிமுறை என்பது மட்டுமேயன்ற உலகியலிலும் அவை முறைப்பட்டு வரும் சீல ஒழுக்கமுமாம் என்பது. "உலகியல் வேதநூ லொழுக்கம்" (2718); சிவஞானப் பிள்ளையாரது திருமணத்துக்கு இச்சடங்குகளினாலாய பயன் ஒன்றுமில்லை எனவும், இவை இவை ஈண்டு வேண்டப்படுவனவல்ல வெனவும் குறிப்பார், வேததியுளி வினையினால் விளங்கவும் உலகியல் முறை ஒழுக்கம் பெருகவும் இதனைச் செய்தார் என்றார். "சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிது மணுகாமை அறிந்தாராயினும் ஆன்றோராசாரம் பாதுகாத்தற் பொருட்டும், மாணாக்கர்க் கறிவுறுத்தற் பொருட்டும் முதற்கண் இடையூறு நீக்குதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்ததுவதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்" என்று மெய்கண்டதேவர் தாம் அருளிய சிவஞானபோத நூலின் மங்கல வாழ்த்துக் கூறியதனைப்பற்றி எமது மாதவச் சிவஞான முனிவர் (சிற்றுரை) விளக்கஞ் செய்தமை ஈண்டு நினைவுகூர்தற்பாலது. மறை வழக்கம் விளங்கி ஓங்க அவதரித்த பிள்ளையார் அந்த வேத ஒழுக்கம் நிலைபெறற் பொருட்டே திருமணஞ் செய்தருள உடன்பட்டருளினா ராதலின் (3056 - 3057) தமது மணத்தில் மறைச் சடங்குகளுக் குடன்படவேண்டியதாயிற்று; இன்றேல் உலகம் மயங்கி மறைவிதிச் சடங்குகளை விட்டு உலகியல் ஒழுக்கங் குன்றக் காரணமாகும் என்க. கவினார் மாதர் மைந்தர்கள் - மங்கல முறையில் சதிபதிகளாக வருவோர். காப்புநாண் நகர்வலஞ் செய்தார் - இஃது இச்சடங்கின் மரபு. செய்தார் - செய்வித்தார்; விவ்விகுதி; தொக்குநின்ற பிறவினை. இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
|
|
|