நிரந்த கங்குலி னிதிமழை விதிமுறை யெவர்க்கும் புரந்த ஞானசம் பந்தர்தாம் புன்னெறிச் சமய அரந்தை வல்லிரு ளகலவந் தவதரித் தாற்போற் பரந்த பேரிருள் துரந்துவந் தெழுந்தனன் பகலோன். | 1189
| (இ-ள்.) நிரந்த...புரந்த - பரவிய இரவிலே மறைவிதி முறைப்படி நிதி மழையாக எல்லாருக்கும் பொழிந்து அருளிய; ஞானசம்பந்தர் தாம்...போல் - திருஞானசம்பந்த நாயனார் முன்னர்ப் புன்னெறிகளாகிய புறச்சமயங்களின் துன்பந் தரும் வலிய இருள் நீங்க வந்து அவதரித்ததுபோல; பரந்த....பகலோன் - பரவிய பெரிய இருளை நீக்கி வந்து சூரியன் எழுந்தனன். (வி-ரை.) இப்பாட்டு முதல் ஏழு திருப்பாட்டுக்கள் சூரியனும், திசைகளும், ஐம்பூதங்களும், பிள்ளையாரது திருமணச் சிறப்பினுட் கலந்து மேற்கொண்ட நிலைகளைமுறையே எடுத்துரைக்கின்றன; இவற்றை அவ்வகையே ஒரு தொடர்புபடுத்தி உரைக்கலாமாயினும், தனித்தனி அவ்வவற்றின் செயல்கள்பற்றி வெவ்வேறு வினைகள் தந்து ஆசிரியர் முடித்துக் கூறியருளியமையால் அவ்வாறே தனித்தனி முடிபாக உரைக்கப்பட்டன; ஆயினும் தொடர்ந்த கருத்துப்பற்றி உய்த்துணர்ந்துகொள்க; திசைகள் (3088) என்றதனாலும் செஞ்சுடரினால் விளக்கம்பெறுதலானும் உயிர்களும் மதியமும் அடக்கிப், பகலோன், மதியம், உயிர், வையம் (நிலம்), புணரி (நீர்), வன்னி (நெருப்பு), மருத்து (காற்று), விசும்பு (ஆகாயம்) என எண்வகையாய்ப் புணர்ந்து இறைவன் நின்ற திருமேனி நிலைகளும் கொண்ட சிறப்புக்காட்சி உணர்த்தப்பட்டதென்ற குறிப்பும் காண்க. "நிலனீ் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்" (திருவா) என்ற மணிவாசகம் ஈண்டு நினைவு கூர்தற்பாலது; ஈண்டு ஒடுக்க முறையில்வைத் தோதியது பிள்ளையார் உடன் நின்றவர்களுடனே இறைவரது திருவருள் நிறைவினுள்ளே புக்கொன்றிடனாகும் குறிப்புணர்த்தியதும் காண்க. நிரந்த கங்குலின் - நிரந்த - தொடர்ந்து வந்தஇரவில்; காப்புநா ணணிந்த பகலைத் தொடர்ந்த இரவு; அன்றிரவு. விதிமுறை நிதிமழை - எவர்க்கும் புரந்த - சுருதிகளின் விதிப்படி தானங்கள் மழைபோலச் சொரிந்து இயற்றிய; இவை திருமணத்தின் பொருட்டுப் புறப்படுமுன் இயற்றவேண்டிய விதிமுறைகளாம் என்ப. இதற்கு இவ்வாறன்றிப் பரந்த சமண இருளினிடத்து வேத விதிகளை மழைபோலப் பெய்தீந்தருளிய என்ற பொருள்பட உரைத்தனர் முன் உரைகாரர்கள். புன்னெறிச் சமய அரந்தை வல்லிருள் அகல என மேலும் வருதலால் அதன் பொருத்தம் ஆராயத்தக்கது. அவதரித்தாற்போல் - பகலோன் எழுந்தனன் - என்று கூட்டுக; வினைபற்றி உவமம். முன்னாளில் (பதினாறாண்டுகளின் முன்) பிள்ளையார் அவதரித்ததுபோல் அன்று பகலோன் எழுந்தனன். பிள்ளையார் புன்னெறிச் சமய வல்லிருள் அகல வந்து அவதரித்தருளினர்; அன்று பகலோன் பரந்த பேரிருள் துரந்துவந் தெழுந்தனன். "சேம வுதயப் பரிதியிற் றிகழ்பிரானை" (1939) என இக்கருத்தினை முன்னர் ஒரு வகையால் உவமானமாகக் குறிப்பிட்ட பரிதி, ஈண்டு உவமேயமாக வைக்கப்பட்ட நிலைக் குறிப்பும் கருதுக. பரந்த பேரிருள் - உலகிற் பரவிய பெரிய புறவிருள்.
|
|
|