பாடல் எண் :3088
அஞ்சி றைச்சுரும் பறைபொழிற் சண்பையாண் டகையார்
தஞ்சி வத்திரு மணஞ்செயத் தவஞ்செய்நா ளென்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்க்கதிர்ப் பேரணி யணிந்தன திசைகள்.
1190
(இ-ள்.) அஞ்சிறைச் சுரும்பு....என்று - அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில்கள் சூழ்ந்த சீகாழியின் ஆண்டகையாராகிய பிள்ளையார்தம் சிவத் திருமணம் செய்தற்கிடமாகத் தவஞ் செய்யப்பெறும் நாள் இது என்று உட்கொண்டு; மஞ்சனத் தொழில் புரிந்தென - திருமஞ்சனத் தொழிலினைச் செய்தல் போல்; மாசு இருள்...திசைகள் - மாசு இருளைக் கழுவிப் போக்கிப் பகலோனது செஞ்சுடராகிய கதிர்களின் பேரணியினைத் திசைகள் அணிந்துகொண்டன.
(வி-ரை.) இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி கொண்டது.
சிவத் திருமணம் செயத் தவஞ்செய் நாள் என்று - சிவத் திருமணம் - சிவபெருமானாகிய நாயகனகை் கூடும் மணம். தவஞ்செய் நாள் - அந்நாளானது தனதெல்லையிற் பிள்ளையாரது சிவத்திருமணம் நிகழத் தவம் செய்து அப்பேறு பெற்றது.
மஞ்சனத் தொழில் - புறத்தூய்மை செய்யும்படி குளித்தல்; (இருள்) கழுவி என்றது காண்க; "கழுவா வுடலங் கழுவின வாக்கிய கற்பகமே" (ஆளு. பிள் - திருவந்தாதி).
மாசு இருள் - இருளாகிய மாசு = (அழுக்கு); திசைகளுக்கு மாசாவது கங்குலின் இருளே என்பது.
திசைகள் - இதனுள் உயிர்களையும் மதி (சந்திரன்)யினையும் அடக்கிக் கூற நிற்பதால், உயிர்களுக்கு உண்மாசு (மலம்) என்றும், மதிக்குப் புறஇருள் என்றும் பெறவைத்து மாசு - இருள் என்று கூறிய குறிப்பும் காண்க.
செஞ்சுடர்க் கதிர்ப் பேரணி - செஞ்சுடர் - சூரியன்; கதிராகிய அணி. செஞ்சுடர் - உதய சூரியனது கதிர்கள் செம்பொன்னிறங் காட்டி தருதலின் பேர் அணி என்றார். அணிந்தன - அணியாகப் பூண்டுகொண்டன.