நங்கள் வாழ்வென வருந்திரு ஞானசம் பந்தர் மங்க லத்திரு மணவெழுச் சியின்முழக் கென்னத் துங்க வெண்டிரைச் சுரிவளை யார்ப்பொடு சூழ்ந்து பொங்கு பேரொலி முழக்குட னெழுந்தது புணரி. | 1192
| (இ-ள்.) நங்கள்...முழக்கென்ன - அடியோங்களாய் வந்தணையும் நமது வாழ்வே உருவெடுத்து வந்தாற்போல வரும் திருஞான சம்பந்தரது மங்கலமாகிய திருமண எழுச்சியில் எழுகின்ற மங்கல இயங்கின் முழக்கம்போல; துங்க...சூழ்ந்து - பெரிய வெள்ளியஅலைகளோடு சுரிவளைகளின் சத்தத்துடனே சூழ்ந்து; பொங்கு....புணரி - மேன்மேல் எழும் பெரியஒலியாகிய முழக்கத்துடனே கடல் எழுந்தது. (வி-ரை.) இப்பாட்டினால் ஐம்பூதங்களுள் நீர் என்ற பூதம் பெருங் கடலாகிய உருவுடன் மணத்தின்மேற்கொண்ட சிறப்புக் கூறப்பட்டது. நங்கள் வாழ்வென - இறப்பு நிகழ்வெதிர்வாகிய முக்காலத்திலும் அணைவுற வந்ததெழுமறிவு தொடங்கிய அடியார்களாகிய நம் எல்லாருடைய வாழ்வெல்லாம் திரண்டு ஒரு உருப்பெற்றாற் போல; "எங்களை வாழ" (3128) என்பதும் காண்க. மங்கலத் திருமண எழுச்சி - மங்கலம் - இங்குச் சிவத்தன்மை குறித்தது. "சிவத் திருமணம்" (3088) என்றதும், அதுமுதல் ஆறு பாட்டுக்களினும் மணத்தின் பெருமையினை ஓரோர் அடைமொழிகளால் விளக்குதலும், இவை சுத்தமாகிய பகம் எனப்படும் அறுகுணங்களையும் குறிப்பா லுணர்த்திநின்றலும் காண்க. திருக்கல்லியாணம் (3089); மாமண விழா (3091); திருமணம் (3092); மெய்த் திருமணம் (3093). மண எழுச்சி - மணம் எழுந்து செல்லும் நிகழ்ச்சி; மணமகனும் சுற்றமும் பிளரும் விதிமுறையிற் குழாமாக மங்கல முழக்கொடு சென்று மணமகளிருக்கும் மணமனைக்குச் செல்லும் சடங்கு எழுச்சி எனப்படும். "அருங்கடி மணம்வந் தெய்த" (169); "வள்ளலார் மணமவ்வூர் மருங்கணையா முன்" (886). எழுச்சியின் முழக்கு - எழுச்சியின்பொருட்டு இசைக்கு மங்கல இயங்களின் முழக்கம். திரை ஆர்ப்பு - வளை ஆர்ப்பு - என்று தனித்தனிக் கூட்டுக. வளை - சங்கு; இங்குச் சங்குகளில் வாழும் உயிர்களின் ஒசை வளைஆர்ப்பு எனப்பட்டது. சங்கு - மங்கல முழக்குக்களுள் ஒன்று. "விருப்போடு வெண்சங்கமூதாவூரும்" (தேவா); "சங்க மிரைப்ப" (திருவா); " தூரியஞ் சங்க மேங்க" (திருவிளை - திருமண 185). வெண்டிரை - ஆர்ப்பு - மண முரசம்போலும் என்பது "மாடெ லாமண முரசெனக்கடலின தொலிகவர்" (தேவா - திருக்கேதீச்சரம் - 11) என்ற திருவாக்கானுமறிக. சுரிசங்கு - சுழித்தலையுடைய சங்கு. சூழ்ந்து - வளைந்து; சீகாழிக் கணிமையில் நெய்தனிலமும் கடற்கரையும் உள்ளமை குறிப்பு. பொங்கு பேரொலி - பெரிய ஒலி மேன்மேலும் ஒங்கியது என்பதாம்; ஒலி - என்றார் மண எழுச்சியின் முழக்கு எனஓர் மங்கலப் பொருள் குறித்தெழுதலால். முழக்குடன் எழுந்தது புணரி - பிள்ளையாரது திருமணச் சிறப்பினை மேற்கொண்டு ஒலித்துப் பயன்பெறக் கருதியது போலும் என்றது குறிப்பு. புணரி - எல்லா நீரும் வந்து கூடுதற்கு - சேர்தற்கு - இடமாவது; கடல் புணரி - இங்கு நீர் என்ற பூதக்கூட்டங் குறித்து நின்று சீகாழியின் திருமண எழுச்சியில் ஒலித்த கடலின் மேலதாய் நின்றது. முன்னர்க் கூறியதும் மேலும் வருவனவும் காண்க.
|
|
|