.அளக்க ரேழுமொன் றாமெனும் பெருமையெவ் வுலகும் விளக்கு மாமண விழாவுடன் விரைந்துசெல் வனபோற் றுளக்கில் வேதிய ராகுதி தொடங்கிடா முன்னம் வளர்க்கும் வேதியில் வலஞ்சுழித் தெழுந்தது வன்னி. | 1193
| (இ-ள்.) அளக்கர்...பெருமை - ஏழு கடல்களும் ஒன்றாய்க் கூடி எழுந்தன என்னும் பெருமைகொண்டு; எவ்வுலகும்...விழாவுடன் - எல்லாவுலகங்களையும் விளங்கச் செய்யும் திருமண எழுச்சியாகயி விழாவுடனே; விரைந்து செல்வனபோல் - தாமும் கூடிப் பயன்பெறும் பொருட்டு விரைவாகச் செல்ல ஒருப்பட் டெழுவனபோன்று; துளக்கில்...முன்னம் - அசைதலில்லாத ஒழுக்கத்தையுடைய வேதியர்கள் ஆகுதிகளைத் தொடங்குதற்கு முன்னமே; வளர்க்கும்...வன்னி - முத்தீ வளர்தற்கிடமாகிய வேதிகைகளில் தீயானது வலம்சுழித்து எழுந்தது. (வி-ரை.) இப்பாட்டினால் ஐம்பூதங்களுள் தீயானது திருமண எழுச்சியில் மேற்கொண்டசிறப்புக்கூறப்பட்டது. அளக்கர் - கடல். அளக்கர் ஏழு - உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், கட்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நன்னீர்க்கடல் என்பவை; சப்தசாகரம் என்பது வடமொழி. அளக்கர்...பெருமை - ஏழு கடல்களும் ஒன்றுகூடி அலைபுரண்டு பெருகிச் சென்றாற் போன்ற பெருமை; வினையும் உருவும்பற்றி வந்து உவமம்; இல்பொருளுவமை. ஏழும் - உம்மை முற்றும்மை. எவ்வுலகும் விளக்கும் மாமண விழா - விளக்கும் - மெய்ப்பொரு ளிது வென்று காட்டி விளங்கச் செய்யும்; பிற்சரித விளைவுக் குறிப்பு. விழா - மண எழுச்சி. விழாவுடன் விரைந்து செல்வனபோல் - எழுச்சியுடன் கூடித் தொடர்ந்து தாமும் செல்ல எண்ணி எழுவனபோல. செல்வன - செல்ல ஒருப்பட்டு எழுவன; வேதியர் பலரும் அவ்வவர் வேதியில் தனித்தனி இயற்றும் வேள்வித்தீ பலவாதலின் செல்வன என்று பன்மையாற் கூறினார். எழுந்தது வன்னி - வேட்போரின் தொகையாலும் வேட்கும் இடங்களாலும் தீப் பலவாயினும் தீ என்ற பொருட்டன்மையால் ஒன்றேயாதலின் வன்னி எழுந்தது என்று ஒருமையாற் கூறினார். அங்கங்கும் வன்னி எழுந்தது என்க. ஆகுதி - நெய் - சமிதை முதலியவற்றால் உரிய மந்திரம் பாவனைகளுடன் செய்யப்படும் ஓமம். வளர்க்கும் வேதி - தீ வளர்க்கும் வேதிகை - (திண்ணை); தீ வளர்க்கும் என்பது மரபு. என்றும் அவியாது காத்து வளர்க்கப்படுதலும், மேலோங்கி வளரச் செய்தலும், அறங்கள் வளர்த்தற் பயனாதலும் குறிப்பு. ஆகுதி தொடங்கிடா முன்னம் வலஞ்சுழித் தெழுந்தது - என்றும் அவியாது வளர்க்கப்படுதலின் ஆகுதி தொடங்கும் முன்பே தீத் தன்னியல்பான் எழுந்தது; "ஆங்கு வேதியி லறாதசெந் தீவலஞ் சுழிவுற், றோங்கி முன்னையி னொருபடித் தன்றியே யொளிர" (1858) என்ற வரலாறும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. தீ வலஞ்சுழித் தெழுதல், நன்மணத்துடன் எழுதல், முதலியவை நன்மையின் அறிகுறி என்பர். ஆகுதியானன்றி மந்திரத்தினால் வரும் தீ என்பது கருதுக. துளக்கில் வேதியர் - துளக்கம் - நிலையழிதல் - அசைதல் - பிறழ்தல்; இங்கு ஒழுக்கத்திற் பிறழாமையும் சிந்தை நிலையழியாமையும் முதலியவை குறித்தது. "விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலந் தானுங், கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்வாழ் கழுமலமே" (தேவா) என்று இவர் தன்மைகளைப் பிள்ளையார் அருளியமை காண்க. செல்வன போல் - "புகைவிடும் வேள்விச் செந்தீ யில்லுடன் கொண்டு போவார்" (3100) என்று பின்னர்க் கூறும் நிலைக்கு முயல்வனபோல என்ற குறிப்பும் காண்க. மாமணி - என்பதும் பாடம். |
|
|