பாடல் எண் :3093
எண்டி சைத்திறத் தியாவரும் புகலிவந் தெய்தி
மண்டு மெய்த்திரு மணவெழுச் சியினணி வாய்ப்பக்
கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க் கொண்டலக ளென்னும்
வெண்டு கிற்கொடிநிரைத்தது போன்றது விசும்பு.
1195
(இ-ள்.) எண்திசை....வாய்ப்ப - எட்டுத் திக்குக்களின் பகுதிகளில் வாழும் எல்லாத் திறத்தினரும் சீகாழியில் வந்து நெருங்கி எழுந்த அத்திருமண எழுச்சியின்கண் அழகு பொந்தும்படி; கொண்ட....விசும்பு - மேற்கொண்டு தூக்கியெடுத்த வெள்ளிய நிறைத்தையுடைய ஒளிபொருந்திய பெரு வெண்மேகளாகிய வெண்டுகிலினாலாகிய கொடிகளை வரிசைபெற அமைத்ததுபோன்று இருந்தது வானம்.
(வி-ரை.) எண்திசைத் திறத்து யாவரும் - எண்திசையிலும் எத்திறத்திலும் யாவரும் என்க. மண்டுதல் - நெருங்குதல்.மண எழுச்சியின் அணி வாய்ப்ப - எழுச்சியிலே அதற்கேற்றவாறு அழகு பொருந்தும்படி; வாய்த்தலாவது முன்கூறிய சிறப்புக்களை எல்லாம் தொகுத்து முடித்துக் காட்டுதல்போலப் பொருந்துதல்.
கொண்ட வெண்ணிறக் - குரூஉச் சுடர்க் - கொண்டல்கள் - "ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மா மழை" (தேவா -நம்பி - புன்கூர்).கொண்ட - நீரை மேற்கொண்ட; சுடர்க் குரூஉக் கொண்டல் - என்க. குரு - பருமை; நிறமுமாம். சுடர் - ஒளி; வெள்ளைமேகத்தி னியல்பாலும், அவற்றில் உண்டாகும் மின்னல்களினாலும் வரும் ஒளி.
வெண்ணிறக் கொண்டல்கள் என்னும் வெண்துகிற் கொடி என்க; வெண்மேங்கள் என்னும் வெண்கொடி; உருவகம். நிறத்தானும் செறிவானும் புடை பெயர்ச்சியானும் மேகங்கள் துகிற் கொடிபோலாயின என்பது; வெண்கொடி மங்கலப் பொருள்; வெற்றிக் கொடியுமாம். "விதானமும் வெண்கொடியும்" (தேவா); வெண்கொடிகள் தூக்கி மணஎழுச்சியில் கலந்து விசும்பு பயன்பெற்றது போன்றது என்பதாம். நிரைத்தது - வரிசையாக உயர்த்தியது; கார்மேகாயின் நன்மைக்குறியாகா; ஆதலின் வெண்மேகமும் அதுபற்றியே வெண்கொடியும் கூறினார்.
எண்டிசைத் தலத்து - மண்டுமத்திரு - என்பனவும் பாடங்கள்.