பாடல் எண் :3097
சங்கொடு தாரை சின்னந் தனிப்பெருங் காளந் தாளம்
வங்கிய மேனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய வொலியி னோங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணு மெழுந்து மல்கத் திருமண மெழுந்தத தன்றே.
1199
(இ-ள்.) சங்கொடு....ஒங்கி - சங்கினோடும், தாரையும், சின்னமும், ஒப்பற்ற பெரிய எக்காளமும், தாளமும், குழலும் அதுபோன்ற ஏனைய நாதம் மலர்கின்ற துளைக் கருவிகள்எல்லாமும், மேலெழுந்த ஒலியினால் ஒங்கி; பூசுரர்...மல்க - மறையவர்களது வேதகீதங்களின் ஒலியினோடும் பொருந்தி எங்கும் எழுந்து பெருக. திருமணம் அன்றே எழுந்தது - திருமணமானது அன்றே எழுச்சி பெற்றுச் சென்றது.
(வி-ரை.) தாரை - சின்னம் - தனிப்பெருங் காளம் - தாளம் - இவை பிள்ளையாருக்கு இறைவர் அளித்தருளியவை; பெருங்காளம் உருவினாலும் ஒசையினாலும் பெரியதென்பது; தனி - இறைவர் தந்தருளியமையால் ஒப்பற்ற தன்மை; தனி - என்பதனைத் தாரை - சின்னம் என்பவற்றுடனும் கூட்டுக.
சங்கொடு - சங்கு, மங்கல இயங்களுள்ளே சிறந்தமைபற்றியும், ஏனையவைபோல மனிதர் செயற்கையானன்றி இயல்பாகவே உளதாகும் சிறப்புப்பற்றியும், பிரணவநாதம் நீங்காதொலித்தற் சிறப்புடைமையும் பிரணவ வடிவுடைமையும் பற்றியும் முன்வைக்கப்பட்டது; ஆனால் தாரை சின்னம்போல இறைவராற் றரப்படாமையின் ஒடுவுருபு தந்து பிரித்துமோதினார். "சங்கொலிப் பித்திடு மின்சிறு காலை" (தேவா); "இயம்பினசங்கம்" (திருவா) என்றபடி இங்கு மண எழுச்சியின் காலத்துக்குரியதாதலின் முன்வைத்ததுமாம்.
வங்கியம்....துளைக்கருவி யெல்லாம் - வங்கியம் - குழல்; ஆனாயர் புராணத்துள் "இன்னிசை வங்கியம்" (948) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. துளைக்கருவிகளும் முதன்மைபற்றி இதனை முன்வைத்தோதினார். ஏனை என்றதுமிக் குறிப்பு. "குழலினிது" (குறள்) என்ற சிறுப்பும் காண்க. முன்பாட்டில் இயங்கள் என்றது தோற்கருவிகள்.
ஒலியின் ஓங்கி - மல்க - எழுந்தது - என்க; ஒலியின் - ஒலியினால்; ஒலி - என்றார் மங்கலமாகிய பொருள் குறித்தலின்; வேத கீதத்துடன் சேர்த்துக் கூறியதும் இக்கருத்து. இன் - போல என்று கொண்டு இயங்களின் ஒலிபோல மறை முழங்கின என்றலுமாம். "வாச்சியமத்தள பேரிகைபோல் மறைவாழ்த்த......திருத்தணிமாமலை மேவிய பெருமாளே" திருப்புகழ். (வ.சு.செ.)
திருமணம் எழுந்தது - மரபு வழக்கு; மணம் - மணத்தின் பொருட்டு மணமகன் தன் சுற்றத்தாருடன் மணமகளிடன் மனைக்குச் செல்லும் எழுச்சி; "அருங்கடிமணம்வந் தெய்த" (169); அன்றே - அப்பொழுதே; திருமண நாளன்றே என்றலுமாம்.
வேதநாதம் - என்பதும் பாடம்.