பாடல் எண் :3098
கோதையர் குழல்சூழ் வண்டின் குழாத்தொலி யொருபாற்,கோல
வேதியர் வேத வாய்மை மிகுமொலி யொருபான் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை யாழொலி யொருபா, லேத்தும்
நாதமங் கலங்கள் கீத நயப்பொலி யொருபா லாக;
1200
(இ-ள்.) கோதையர்...ஒருபால் - பெண்களுடைய கூந்தலைச் சூழ்ந்த வண்டுக் கூட்டங்களின் ஒலி ஒருபக்கத்திலும்; கோல...ஒருபால் - கோலத்துடன் கூடிய மறையவர்கள் ஓதும் வேத வாய்மை மிகும் ஒலி ஒருபக்கத்திலும்; மிக்க...ஒருபால் - குற்றமில்லாத மிக்க வீணையும் யாழுமாகிய இவற்றின் ஒலி ஒருபக்கத்திலும்; ஏத்தும்...ஒருபாலாக - துதிக்கின்ற நாதத்துடன் கூடிய மங்கலங்களைக் கீதமாகப் பாடும் இனிய ஒலி ஒருபக்கத்திலுமாகச் சத்திக்க;
(வி-ரை.) குழல் சூழ் - குழலின் அணிந்த மலர்களிற் சூழும்; குழலின் இயற்கை மணத்தினால் வந்து சூழும் என்ற குறிப்புமாம்.கோலவேதியர் - மறையவர்க் குரியதாய் விதித்த கோலத்தின் விளங்கும் வேதியர்கள்; கோலம் - அழகு என்றலுமாம்.
வேத வாய்மை - வேதத்தைச் சொல்லுதலால்; வாய்மை - வாய்மொழியும் நிலை என்ற பொருளில் வந்தது. வாய்மை - உண்மைத் தன்மை என்று கொண்டு வேத வாய்மைகளைச் சொல்லும் என்றலுமாம். வாய்மை தேவஒலி என்றலுமாம்.
விபஞ்சி வீணை யாழ் - விபஞ்சி - இசைக்கு உயிர் கொடுக்கக்கூடியதான; குறிஞ்சியாழ்த் திறத்துள் ஒன்று என்றலுமாம் - விபஞ்சி - விபஞ்சி வேறு, வீணை வேறு; வீணைகள் மூவகைய; (1) சுரவித்தை - ஒரு தந்தி உடையது - கலைமகளுக்கு உரியது. (2) வீணை - ஐந்து தந்தி உடையது - நாமகளுக்கு உரியது. (3) விபஞ்சி - எழு தந்தி உடையது -- மலைமகளுக்கு உரியது. (இவை வ. சு. செ. குறிப்பு.) வீணையும் யாழும் என்று எண்ணும்மை விரிக்க.
ஏத்தும் நாதமங்கலங்கள் கீத நயப்பு - ஏத்துதல் - பலவாறு இறைவரது புகழ்களையும் பிள்ளையாரது புகழ்களையும் எடுத்துத் துதித்தல். நாதம் - உரிய இசைப் பகுதி; மங்கலங்கள் கீதம் - மங்கலங்களை இசைக்கும் கீதம்; நயப்பு -விருப்பந் தரும் இனிமை.
வண்டின் குழாத்தொலி - வண்டுகள் தம்மியறிகையாலே பண் பாடும் தன்மை பற்றி அவற்றின் ஒலி முதற்கண் வைக்கப்பட்டது; "செந்துருத்தி" யறைந்தளிகள் பயில்சாரற் றிருக்கழுக்குன்று" (3027); "சிவந்தவண்டு, வேறாய உருவாகிச் செவ்வழிநற் பண்பாடு மிழலை" (தேவா).
வேத வாய்மை - இயல்பாகவே சுர அமைப்புடன் இறைவனால் அருளப்பட்டு அவ்வாறே பயின்றுவருதலின் அடு வைக்கப்பட்டது.
விபஞ்சி வீணை யாழ் - வீணையும் யாழும் இசைக்கும் உயிர்கொடுக்கும் தன்மையாவது ஏனைய இசைக்கருவிகள் (சுரம்) இசைமட்டுமே இசைக்க, இவை இசைப் பாட்டினைப் பாடும் தன்மை; ஒலி என்ற கருத்துமிது. "குழுலினிது யாழினிது" (குறள்); இத்தன்மையில் மேம்பட்டது குழல். இக்கருத்தையும் மேன்மையினையும் விளக்குவன இறைவர் தம் கையில் வீணையினையும், அவர் தேவியாகிய விட்டுணு குழலினையும் கொண்டவரலாறுகள். "எம்மிறை நல்வீணை வாசிக்குமே"; "அரியலாற் றேவியில்லை யையனை யாற னார்க்கே"; "ஆயன்வாய்த் தீங்குழலும்" (11 - திருமுறை - கபிலர் - சிவபெருமான் திருவந்தாதி - 28).
இப்பாட்டினால் எழுச்சியில் எழுந்த ஒலி வகைகளும் மேல் அணிவகைகளும் கூறப்படுவன. அதன்மேல் வரும் பாட்டினால் (3100) வைதிகநிலை ஒழுக்கத்தினர்களாயும், அதன்மேல் வரும் பாட்டினால் (3101) ஆகமநிலை ஒழுக்கத்தினர்களாயும் உடன் சென்றவர்களும், அதன்மேல் தேவச்சாதியார்களும் கூறப்படும் முறையில் இவை தொடர்ந்து வருதல் கண்டுகொள்க. இவற்றுள்(3098 - 3101) முதனான்கு பாட்டுக்கள் மண்ணுலகில் நிலத்தின்கண் நிகழ்ச்சிகளும், ஐந்தாவ்தில் விண்ணவரது வானில் நிகழ்ச்சிகளும் கூறப்படுவதும் காண்க.
(நிலத்தில்) ஆக (3098), விழுங்க, படைப்ப, நண்ண(3099) - மல்க (3100) - ஏக (3101) - (வானில்) சென்றார் (3102) என்று இவ்வைந்து பாட்டுக்களையும் தொடர்புபடுத்திக்கொள்க.