பாடல் எண் :3099
விண்ணினை விழுங்க மிக்க வெண்டுகிற் பதாகை வெள்ளங்
கண்வெறி படைப்ப மிக்க கதிர்விரி கவரிக் கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூ ணீடு மரிசன மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின் பொதிப்பரப் பெங்கு நண்ண,
1201
(இ-ள்.) மிக்க....வெள்ளம் - மிகுந்த வெண்துகிற்கொடிகளின் கூட்டம்; விண்ணினை விழுங்க -ஆகாயவெளியை மறைக்கவும்; மிக்க கதிர்...கானம் - மிகுந்த ஒளி விரியும் சாமரைகளின் கூட்டம் கண்வெறி செய்யவும்; மண்ணிய மணிப்பூண் - விளக்கம் செய்த மணிகளையுடைய அணிகளும்; நீடும்...பொதிப்பரப்பு - நீடுகின்ற மஞ்சனிற மிகுந்த அழகிய அளவில்லாத வண்ணங்களையுடைய துணிப்பொதிகளின் கூட்டமும்; எங்கும்நண்ண - எங்கும் பொருந்த;
(வி-ரை.) விழுங்குதல் - மறைத்தல்; பதாகை - கொடி; வெள்ளம் - மிகுதி; விண்ணினை விழுங்குதல் - ஆகாயவெளியை மறைக்கும்படி மிகுந்து செறிதல்; வெண்துகிற் கொடி - வெள்ளைத் துணைகளாலான கொடிகள். வெள்ளைக் கொடிகள் இந்நாளிலும் போர் முகத்துச் சமாதானக் குறிகளாக வழங்குதல் காண்க.
வெண்மை - சாந்தம், உண்மை முதலிய சத்துவ குணங்களின் அறிகுறி. வெள்ளம் - விழுங்க என்று கூட்டுக.
கவரிக்கானம் - கவரி - சாமரைகள்; கானம் - காடுபோல்வதனைக் காடு என்றதுபசாரம். கதிர்விரிதலாவது கவரிகள் வீசுந்தோறும் ஒளி விரிந்து காட்டுதல்.
கண்வெறி படைத்தல் - அசைவினாலும் விரியும் சுழலலினாலும் பார்ப்போர் கண்கள் சுழன்று மயக்கமடைதல். கானம் - வெறிபடைப்ப என்று கூட்டுக.
மண்ணிய மணிப்பூண் - மணிகளை மண்ணுதல் - கடைதல் விளக்குதல் முதலிய செயல்களால் மணிகளை ஒளிமிகச் செய்தல்; "மாமணிச் சோதியான் - உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" (தேவா).பூணும் - தூசின் பொதிப்பரப்பு நண்ண என்க. எண் உம்மைகள் விரிக்க. மணத்தின் எழுச்சியில் ஆடையாபரணங்கள் மிகவும் கொண்டு செல்லும் வழக்குக் குறித்தது.
அரிசனம்...தூசின்பொதி - அரிசனம் - மஞ்சள்; அரிசனம் மலிந்த பொற்பின் - தூசு - மஞ்சல் தோய்த்த துணிகளும் மஞ்சட்பட்டு வகைகளும். மஞ்சல் நிறம் - சுபக்குறி காட்டுதற் கெடுத்தது.
எண்ணிலா வண்ணம் - மஞ்சல் முதன்மையாகப் பல வன்னங்களும் கலந்த அழகு. தூசின் பொதிப்பரப்பு - துணி மூட்டைகளின் மிகுதி.