சிகையொடு மான்றோ றாங்குங் கிடையுமா சானுஞ் செல்வார், புகைவிடும் வேள்விச் செந்தீ யில்லுடன் கொண்டு போவார், தகைவிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார், வகையறு பகையுஞ் செற்ற மாதவ ரியல்பின்மல்க. | 1202
| (இ-ள்.) சிகையொடு...செல்வார் - பஞ்ச சிகைகொண்ட கோலத்துடன் கரு மான்தோலைப் பூணூலில் தரித்த வேதம் ஓதும் சிறுவர்களும் உபாத்தியாயருமாகக் கூடிச் செல்லவும்; புகைவிடும்.... கொண்டுபோவார் - ஓமப்புகை விடுகின்ற வேள்விச் செந்தீயினைத் தத்தம் மனைவியர்களுடனே கொண்டு மறையவர் போகவும்; தகை விலா...சார்வார் -தடுக்கலாகாத விருப்பத்துடனே பெருமையாற் சிறந்த திருப்பதிகங்களை ஓதிக்கொண்டு ஓதுபவர் செல்லவும்; வகையறு......மல்க - ஆறு வகையான பகைகளையும் அறுத்த மாதவர்கள் தத்தம் இயல்புடனே நெருங்கவும்; (வி-ரை.) சிகையொடு....ஆசானும் - வேதமோதும் சிறுவரும் அவர்களை ஓதுவிக்கும் ஆசானும் கூடி ஒரு தொகுதியாக; கிடை - ஒது கிடை; மறை பயிலிடத்திற்றங்கிக் கிடத்தலின் கிடை எனப்படும். இங்குக் கிடை அவ்வாறு தங்கிக்கிடந்து பயிலும் மாணவர் கூட்டத்துக்கு வந்தது; "ஓது கிடைசூழ் சிறுவர்களும் முதவும் பெருமை யாசானும்" (1208). புகைவிடும்....கொண்டுபோவார் - வேள்விச் செந்தீ - இஃது அம்மறையவர் வளர்க்கும் நித்தியாக்கினி; மறையவருள் இல்வாழ்வார் நித்தியமும் தீவளர்த்து வேட்கக் கடவர் என்பது வேதவிதிஆதலின் அத்தீயினைத் தாம் மனைவியருடன் செல்லுமிடங்களிலும் தவிராது வளர்த்தற்பொருட்டுக் கொண்டுசெல்லக் கடவர்; இல்லுடன் - இவ்வேள்வி மனையாளோடன்றிச் செய்யப்படாமை குறிப்பு. புகைவிடும் - மண வேள்வியிற் றொடங்கிய நித்தியாக்கினி சாங்காறும் அவியாது காக்கப்படுவது என்பது குறிப்பு; தீயின் அவியாதநிலை என்பது பொருள். தகைவிலா விருப்பின் - தடுக்கலாகாத பெருவிருப்பினாலே; பதிகங்கள் - பிள்ளையாரது திருப்பதிகங்கள்;அவற்றின் பெருமையும், இறைவரருளிய மறையேபோன்று "மெய்த்திருவாக்" காகும் வாய்மையும் நேரிற் கண்டுணர்ந்தோர்க ளாதலின் வேதம் பயிலும் இம்மறையவர்கள் தடுக்கமுடியாத பெருவிருப்புக் கொண்டு ஓதினர்; தகைதல் - தடுத்தல்; விலக்குதல். மிக்க - மிகுந்த அருட்பெருமையுடைய. வகை அறு பகை - பகை ஆறாவன - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பன; இவை வெளித்தோற்றாது உண்ணின்றே மக்களை வீழ்த்தலின் பகை என்றார்; வகை என்றது உட்பகை, புறப்பகைஎன்ற இரண்டனுள் வலிமையுடையது உட்பகை என்றதும் குறிப்பு; உம்மை முற்றும்மை. செற்றமையால் மாதவர் என்று காரணக் குறிப்புப்பட வந்த அடைமொழி; மாதவர் - மேம்பட்ட அந்தணர்களைக் குறித்தது; இயல்பின் - தத்தமக் கியல்பாகிய சிறப்பினாலே.
|
|
|