பாடல் எண் :3102
விஞ்சைய ரியக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சன நாட்ட வீட்டத் தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமான மேறித் தழைத்தவா தரவி னோடு
மங்சுறை விசும்பின்மீது மணவணி காணச் சொன்றார்.
1204
(இ-ள்.) விஞ்சையர்....தேவர் - வித்தியாதரர்களும், இயக்கர்களும், சித்தர்களும், கின்னரர்களும், நெருங்கிய தேவர்களும்; அஞ்சன...உடனாயுள்ளோர் - மைதீட்டிய கண்களையுடைய கூட்டமாகிய அரம்பையர் என்னும் தேவமாதர்களுடனாகவுள்ளவர்களும்; தம்சுடர்.... சென்றார் - தங்கள் தங்களுடைய ஒளி பொருந்திய ஆகாய விமானங்களில் ஏறிக்கொண்டு மேன்மேல் மிகுந்த ஆசையுடனே மேகங்கள் தவழும் ஆகாயத்தின் வழியாகத் திருமண அழகினைக் காணும்பொருட்டுச் சென்றனர்.
(வி-ரை.) விஞ்சையர், இயக்கர், கின்னரர் - இவர்கள் இசைவல்ல தேவச் சாதியர். சித்தர் - வேண்டியவாறு சரிக்கும் வல்லமை பெற்றவர்கள். "வித்தகச் சித்தர் கணமே" (தாயுமா). அரம்பையர் உடனாயுள்ளோர் - தேவப் பெண்களுடன் கூடிய தேவர்கள்; அரம்பையர் - தேவப்பெண்கள் என்ற பொருளில் வந்தது.
_________________________________________________
1 பாடியம் - 2 - 1 பார்க்க.
சுடர் விமானம் - ஒளியுடைய ஆகாய விமானங்கள்.
மஞ்சுறை விசும்பு - மேகமண்டலம் அளவும் உயர்ந்தஆகாயம். தேவர்களின் விமானங்கள் செல்லும் உயரம் குறித்து.
ஆதரவு - ஆசை; தழைத்தல் - பெருகுதல்; மண அணிகாண - மண அணிகள் தேவருலகத்தும் காணவொண்ணாதபடி அற்புதமாயிருத்தல் குறிப்பு; நிலவுலகத்தில் மண எழுச்சியிற் கலந்துசென்ற பேறுபெற்ற மக்கட் கூட்டம் முழுதும் பின்னர்ப் பிள்ளையார்அருளால் முத்திபெற்று மீளாநெறி யடையவுள்ளாராக; இத்தேவக் கூட்டம் அப்பேறு பெறும் தகுதியில்லாதவராகி மணவணி காண்பதில்மட்டும் அமைவுபடுவர் என்பது காண என்றதன்குறிப்பு. பின்னர்த், "தூரத்தே கண்டு நணுகப் பெறா, விண்ணவருமுனிவர்களும் விரிஞ்சனே முதலோரும், எண்ணிலவ ரேசறவு தீரவெடுத் தேத்தினார்" (3153) என்பது காண்க; தேவர்கள்தமது அனுபவநாள் எல்லையில் புவனியில் வந்து பிறந்து சிவதருமங்கள் புரிந்த பின்னலே நாளடைவில்முத்தியடையத்தக்கார் என்பது நூற்றுணிபு; "புவனியிற் போய்ப்பிற வாமையினாணாம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கிற வாறு" (திருவா).
இவ்வவைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.