பாடல் எண் :3103
மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்றவித் தலத்தி னுள்ளோர் மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி யெய்தவணைதலான் மணமேற் செல்லும்
பொற்பகை மணத்தின்சாயை போன்றுமுன் பொலியச் செல்ல;
1205
(இ-ள்.) மற்றிவர்...காட்சி - மற்று இத்தேவச்சாதியர் முதலினோர் நெருங்கி மேற்செல்லும் மங்க்லமாகிய அழகின் காட்சியானது; முற்ற...அணைதலான் - இந்நிலவுலகத்துள்ளோர் யாவரும்நெருங்கிக்கூடித் திருமண எழுச்சியிற் செல்லும் காலத்தில் - அற்புதமாகிய தன்மை பொருந்த மேலே உடன் அணைதலினாலே; மணமேல்....சாயைபோன்று - மண எழுச்சியின்மேலே செல்கின்ற அழகு பொருந்தியதொரு மண எழுச்சியினது சாயையினைப் போல; முன்பொலியச் செல்ல முன்னே விளங்கும்படி போக;
(வி-ரை.) மற்று...காட்சி - இவர் முன்பாட்டிற்கூறிய தேவச்சாதியர்; மிடைந்து - தம்முள் நெருங்கியும்; கீழே நிலத்தில் செல்லும் திருமண எழுச்சியினை அணுகியும்.
இத்தலத்தினுள்ளோர் - இந்நிலவுககத்தி லுள்ளவர்கள்; மக்கள்.
படரும்போதில் - அணைதலால் - என்று கூட்டுக.மக்கட் கூட்டம் நிலத்தில் அணையும்போதே அதனைக் காண மேலே தொடர்ந்து அணுகிச் சேர்வதனாலே.
அற்புத நிகழ்ச்சியை - அணைதலால் - சாயைபோன்றது என்றது, கீழே நிலத்தினும் மணங்காதணச் செல்லும் கூட்டம்; மேலே ஆகாயத்திலும் இவர்களைத் தொடர்ந்து அணுகிச் செல்லும் அழகிய கூட்டம்; ஒன்று போலவேகூடி உடன் அசைந்து செல்லுதலாலும், கீழும் மேலுமாக அணிமையில் செல்லுதலாலும், ஒன்று போன் றிருத்தலாலும் அது இதன் சாயைபோன் றிருந்தது என்றலுமாம்.
சாயை - பிரதிவிம்பம்; இங்குப் பின்னர் வரலாற்றினும், மண்ணிற் சென்ற மக்கட்கூட்டம் மணத்தில் மெய்ப்பொருளைப்பற்றுவாராதலும், ஏனை விண்ணவர் கூட்டம் கண்டமட்டி லமைந்து வேறு ஒன்றும் பெறாது பின்னின்றாராவதாலும் சாயையே போல்வதும் காண்க.
மண்ணவர் சாயை போன்றது விண்ணவர் மேற்செல்லும் கூட்டம் என்றதனால் விண்ணவரினும் மண்ணவரது சிறப்புக் குறித்தவாறும், அவர் நுண்ணுடலினராதல் குறித்தவாறும் கண்டுகொள்க. மற்றிவர் - மற்று - என்ற குறிப்புமிது.
மற்றவர் - என்பதும் பாடம்.