பாடல் எண் :3104
தவவர சாள வுய்க்குந் தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார் பாதமுள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த் திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.
1206
(இ-ள்.) தவஅரசு....நிழற்ற - தவ அரசாங்கத்தை ஆட்சிபுரிதற்கும் பிடித்தல்போல ஒப்பற்ற முத்துக்குடைமேல் நிழற்ற; சாரும்....கொண்டு - சார்கின்ற பிறவியை அறுத்து ஆட்கொள்ள வல்ல இறைவரது திருவடிகளைத் தமது திருவுள்ளத்துக் கொண்டவராய்; புவனங்கள்......போந்து - புவனங்களெல்லாம் வாழ்வடையும் பொருட்டு வந்தவதரித்த சீகாழி வேந்தராகிய பிள்ளையார் சென்றருளி; சிவன்...சேர்ந்தார் - சிவபெருமான் விரும்பி எழுந்தருளிய திருநல்லூர்ப் பெருமணத்தினைச் சேர்ந்தருளினர்.
(வி-ரை.) தவஅரசு ஆளஉய்க்குந் தனிக்குடை - தனிக்குடை - "வெண் கொற்றக் குடையும் நவமணி முடியும் சிங்காதமும் மன்னவர்க்கே யுரிய சிறப்படையாளங்கள்." அவற்றுள் சிறப்புப்பற்றிக் குடையினைச் சொல்லவே இனம்பற்றி ஏனையிரண்டும் கொள்ளப்படும்."பிரபஞ்ச மெல்லவாற்றுக்கும் மூலகாரணமாகிய ஒரு பெரு வெண்கொற்றக்குடையும், எவற்றையும் ஒருங்கே ஓரியல்பான் அறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்சுடர்முடியும், எவற்றினையும் அங்கங்கே உயிர்க்குயிராய் நின்று செலுத்துமியல்பாகிய ஒரு பெருஞ் சிங்காதனமும் பிறர்க்கின்றித் தனக்கே உரிமையாகச் சிறந்தமைபற்றிப் பசுக்களுக்குப் பாசங்களை அரித்தலான் அரனென்னும் திருப்பெயருடைய முதல்வனாகிய இறைவனை மன்னவனாகவும், அம்முதல்வனது பேரானந்தப் பெருஞ்செல்வ முழுதுந் தனதேயாகக்கொண்டு அநுபவிக்கும் சுதந்தரமுடைமையும் சித்தெனப்படும் சாதியொப்புமையும்பற்றி ஆன்மாவை மன்னவ குமாரனாகவும்..." உருவகஞ்செய்து எடுத்துக்காட்டும் "தம்முதல் குருவுமாய்த் தவத்தினிலுணர்த்த" (8-சூ.) என்ற சிவஞானபோதம் ஈண்டு நினைவுகூர்தற்பாலது; தனிக்குடை - என்ற குறிப்புமது. "தானே தனிமன்றுட் டன்னந் தனிநித்தம்" (திருமந்), "தாந்த முணர்வின்றமி" (போதம் - 5 - சூத்) என்றபடி தனியாகிய இறைவரால் அருளப்பட்ட குடை என்றும், தனியினது குடை என்றும் உரைக்க நின்றது.
இனி எண்ணரிய சிவஞானம் தந்து இறைவர் பிள்ளையாருக்குத் தாம் செய்யும் தன்மைகளை இவருக்கு ஆக்கியிட்டபடியினாலே இங்குச் சார்ந்தார் எல்லார்க்கும் பிள்ளையார் முத்திதரும் தன்மையும் குறிக்கொள்க.
தவ அரசாளவுய்க்கும் - தவம் - முற்செய் தவங்காரணத்தினாலே; - தவத்தினால் உணர்த்தி அவ்வான்மாக்களை எல்லாம் தத்தமதுரிமையின்படி பேரானந்தப் பெருக்காகிய சிவலோக வாழ்வுபெற்று மீளாநெறி யடையும்படி செலுத்தும்; "தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த" - என்றபடி பிள்ளையார் குருவாக எழுந்தருளி இங்குத் திருமணங்கான முன்னைத் தவத்தினால் அணைந்தோர்க்கெல்லாம் "ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம்" என்று பதிகம் பாடி உணர்த்தியருளும் நிலையும் கருதுக. புவனங்கள் வாழவந்த என்ற கருத்துமிது.
சாரும் பவமறுத் தாள வல்லார் பாத முள்ளத்துக்கொண்டு - சேர்ந்தார் - என்க. ஆசாரியன் பக்குவப்பட்டடைந்த மாணவனுக்குத் தீக்கை செய்து நெறி அருளும் முன்பு இறைவரை நினைந்து "இறைவரே! இம்மாணவகன் பக்குவ நோக்கித் தீக்கை செய்து நன்னெறி செலுத்த அருள்புரிவீராக!" என்று விண்ணப்பித்து மேற்செல்லும் சிவாகமவிதி காண்க.
சிவன் - இறைவரது திருநாமங்களுள் பவன் - சிவன் என்பன சிறந்தவை என்பது.
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.