பாடல் எண் :3107
பொற்குட நிறைந்த வாசப் புனிதமஞ் சனநீ ராட்டி,
விற்பொலி வெண்பட் டாடை மேதக விளங்கச் சாத்தி,
நற்றிரு வுத்த ரீய நறுந்துகில் சாத்தி, நானப்
பற்பல கலவைச் சாந்தம் பான்மையி னணிந்த பின்னர்,
1209
(இ-ள்) பொற்குடம்...ஆட்டி - பொன்னின் குடத்தில் நிறைந்த மணமுடைய தூய திருமஞ்சனநீரினாலே பிள்ளையாரை நீராட்டுவித்து; விற்பொலி..சாத்தி - ஒளி விளங்கும் வெண்பட்டாடையினை மேன்மை பெற விளங்கும்படி சாத்தி; நற்றிரு...சாத்தி - நல்ல திருவுத்தரீயமாகிய நறுந் துகிலினைச் சாத்தி - நானம்...பின்னர் -மணங் கமழும் கத்தூரியுடன் பல பொருள்களைக் கூட்டியமைத்த சாந்தத்தினைப் பண்புபெற அணிவித்த பின்பு,
(வி-ரை) பொற்குடம்...நீராட்டி - பொற்குடம் - பொன்னாலாகிய குடம்; வாசப் புனித மஞ்சனம் - நீராட்டுதற்கென்று அமைத்த தூயதாய்ப் புதிய மலர்களும் வாசனைப் பண்டங்களுமிட்ட நன்னீர்; நீராட்டி - இது திருமணக் கோலங்கொள்வதன் முன் செய்யப்படுவது. முன்னர்க் "காலை செய்வினை முற்றிய" (3094) என்றவிடத் துரைத்தது நித்திய நெறியில் செய்வது; "மஞ்சன சாலை புக்கான்" (160); "தூநீர்ப் பாசனம்" (161).
வெண் பட்டாடை - வெண்மை - புகழ் - தூய்மை - முதலியவற்றின் குறி.
உத்தரீய நறுந்துகில் - மேலாடை; இஃது இல்வாழ்க்கை நிலையினர்க்குரியது; பிரமசரியர் ஒற்றையாடை பூண்பர்.
நானம் - கத்தூரி; பற்பல - புழுகு - குங்குமப்பூ முதலியவை; கலவைச் சாந்தம் - இவை கலந்து கூட்டி அமைத்த சந்தனக் குழம்பு; பான்மை - அணியும் முறை.