பாடல் எண் :3108
திருவடி மலர்மேற் பூத்த செழுநகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை மணிச்சரி யணையச் சாத்தி,
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்குபொற் சரட்டிற் கோத்த
பெருகொளி முத்தின் றாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி,
1210
(இ-ள்) திருஅடி....சாத்தி - திருவடி மலர்கள் மேலே பூத்த செவ்விய விளக்கத்தின்ஒளிபோலப் பொருந்திய முத்துக் கோவைகளையுடைய இரத்தின வளையை அங்கு அணையும்படி சாத்தி; விரிசுடர்...சாத்தி - விரியும் ஒளியுடைய பரடுகளின்மேல் விளங்கிய பொற்கம்பியில் கோத்த பெருகும் ஒளியுடைய முத்துமாலை வடத்தில் விளங்கிய குஞ்சம் சாத்தி,
(வி-ரை) இதுமுதல் ஆறு பாட்டுக்களாலும் அடிமுதல் முடிவரை செய்த கோலங் கூறப்பட்டது. இதனைப் பாதாதிகேச மென்பது வடமொழி வழக்கு; பிள்ளையாரது திருமணக் கோலத்தினை முழுதும் அவர்தம் திருவடி தொழுது அத்துணைகொண்டு கண்டு தரிசித்து உய்யும் காரணம் நமக்கருள்வதும் ஆசிரியரது திருவுள்ளக்குறிப்பு. பிள்ளையாரது திருவடிச் சார்பே முத்திசாதனமாவதும் குறிப்பு. இதுபோலவே முடிமுதல் அடிவரை சிறப்பித்து எழுதிக்காட்டும் மரபும் உண்டு; அது கேசாதிபாதம் என்பர். அம்மரபு கண்ணப்பநாயனார் புராணத்திலும் (705 - 711), ஆனாயநாயனார் புராணத்திலும் (940 - 943) ஆசிரியர் காட்டியருளியமை ஈண்டு நினைவுகூர்தற்பாலது; இதுபற்றி 712-ம் பாட்டின்கீழ் முன் உரைத்தவை பார்க்க (II - பக்கம் 906). பாதாதிகேசம் என்ற கோயில் - திருவாலியமுதனார் - திருவிசைப்பாவிலும் இம்மரபு காட்டப்படுதல் காண்க. "யானெனதென் றற்ற விடமே திருவடியா, மோனபரா னந்த முடியாக - ஞானந், திருவுருவா விச்சை செயலறிவு கண்ணா, வருளதுவே செங்கை யலரா - விருநிலமே, சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே" (34-36 கண்ணிகள்) என்று, அடிமுதல் முடிவரையும்; "மின்னுருவந்,தோய்ந்த நவரத்னச் சுடர்மணியாற் செய்தபைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும்..." (37) என்பதுமுதல் "பாதத் தணிந்த பரிபுரமுஞ் - சோதி, யிளம்பரிதி நூறா யிரங்கோடி யென்ன, வளந்தருதெய் வீக வடிவும்" (57) என்பது வரையும் முடிமுதல் அடிவரையுமாக இவ்விரு மரபும் வைத்துக் கண்டு காட்டி முருகப்பெருமானை அடியவர்கள் கண்டு வழிபட அருளிய குமரகுருபர அடிகளாரின் அருள்வாக்கும் கருதுக. ஈண்டு அடிமுதல் முடிவரை கூறியது ஒடுக்கமுறைக் குறிப்பாவதும் காண்க.
கண்ணப்ப நாயனார் - ஆனாய நாயனார் - ஆளுடைய பிள்ளையார் என்ற இம்மூவரையும் இவ்வாறு எழுதிக்காட்டியது இம்மூவரும் அவ்வக்கோலங்களுடனே நேரே இறைவனடி சேர்கின்றா ரென்பதும் குறிப்பு.
இனித், திருவடி முதல் திருமுடிவரை அணியும் அணிகள் யாவையும் முத்துக்களாலாகிய அணிகளேயாதலும் குறிக்கற்பாலது. முத்து - விடுபடுவது என்பது காரணமாகப் போந்த பெயர்; முத்தி என்பதும் அக்காரணம் பற்றியே வந்தது. இங்கு யாவர்க்கும் முத்தி தரும் குருமூர்த்திகளாக மணமகனாகிய பிள்ளையார் நிற்பராதலின் அக்குறிப்புப் பெற அணிவகையும் நிற்றல் காண்க. இது பற்றியே பின்னர் "நம்மையாளும் ஏர் வளர்தெய்வக் கோலம்"(3114) என்பதும் காண்க. இதுபற்றி விறன்மிண்ட நாயனார் புராணத்துள் (492-ம் பாட்டின் கீழ்) உரைத்தவையும் பார்க்க(I - பக்கம் 615).
திருவடிமலர்....சோதி என்ன - திருவடியாகிய மலர் பூத்தலின் மேலே அலர்ந்து விரியும் வெண்சோதிபோலச் - சரி அணைய என்பது மலர் அலர்தலால் அவ்வகைச் சோதி(ஒளி) அதற்கேற்றவாறு மேலே அலர்ந்து வீசுதல் போல; இங்குத் திருவடி மலரின் அலர்ந்த சோதியே அவர் அணிந்த சரி என்க. செழுநகை - நகை போன்ற ஒளிப் பிரபை.
சரி - வளை; மணிச்சரி - முத்துக் கோவையினையுடைய இரத்தின வளை.
பரடு - கணைக்காலின் பகுதி; "பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்".
தொங்கல் - குஞ்சம்; முத்தின்...தொங்கல் - முத்து மாலைகளைக் குஞ்சமாகத் திரட்டிய கோவை. செழுந்தகை - மணிச்சிலம்பணைய - என்பனவும் பாடங்கள்.