பாடல் எண் :3109
தண்சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக் கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்டிரு வரையி னீடு வனப்பொளி வளரச் சாத்தி,
1211
(இ-ள்) தண்சுடர்....கடி சூத்திரத்தை - குளிர்ந்த ஒளி வீசுகின்ற பருமுத்துக்களைப் பொற்கயிற்றிலே கோத்த, கண்டாரது கண்ணைக் கவரத்தக்க, கோவை வரிசைகளையுடைய, ஒளியுடைய அரைஞாணை; வெண்சுடர்...மீது வெள்ளிய ஒளி வீசும் முத்து மாலை விரிந்த சுடர்விடும் கச்சத்தின் மேலே; வண்...வளரச் சாத்தி வளம் பொருந்திய திருவரையினிடத்து மிகுந்த அழகுடனே ஒளி விளங்க அணிந்து,
(வி-ரை) பரிய முத்து - பருமுத்துக்கள் பரிய முத்து...கடி சூத்திரம் - கடி சூத்திரம் - அரைஞாண்; இங்குக் கூறியது உடையின்மேல் அணியும் அணியாகிய அரைஞாண்; இது பொற்கயிற்றில் பருமுத்துககளைக் கோத்தது.
வெண்சுடர்...கொடுக்கின் மீது - கொடுக்கு - பின் கச்சம்; தாளமாலை விரிசுடர்க் கொடுக்கு - உடையின் கரையில் முத்துப் பந்திகள் இழைக்கப்பட்டு விளங்கம் பின் கச்சம்; அந்தக் கரை கச்சமாக அமையும்படி உடை சாத்துதல் வழக்கு; கடி சூத்திரத்தைக் கொடுக்கின்மீது சாத்தி என்று கூட்டுக.