பாடல் எண் :3110
ஒளிகதிர்த் தரளக் கோவை யுதரபந் தனத்தின் மீது
தளிரொளி துளும்பு முத்தின் சன்னவீ ரத்தைச் சாத்தி,
குளிர்நில வெறிக்கு முத்தின் பூணநூற் கோவை சாத்தி,
நளிர்கதிர் முத்து மாலை நகுசுட ராரஞ் சாத்தி,
1212
(இ-ள்) ஒளி...மீது - ஒளியுடைய கதிர்களை வீசும் முத்துக்கோவைகளாலாகிய அரைப்பட்டிகையின் மேல்; தளிரொளி...சன்னவீரத்தைச் சாத்தி - தளிர்க்கும் ஒளி ததும்பும் சன்னவீரத்தை அணிந்து; குளிர் நிலவு...கோவை சாத்தி - குளிர்ந்த ஒளிவீசும் முத்துக் கோவையாலாகிய பூணூலினை அணிந்து; நளிர் கதிர்...ஆரம் சாத்தி - குளிர்ந்த கதிர்களையுடைய முத்து மாலையாகிய ஒளி விளக்கமுடைய ஆரத்தை அணிந்து;
(வி-ரை) உதா பந்தனம் - அறையிற் கட்டும் பட்டிகை; Belt என்பர் நவீனர். ஆயின இது அரையின்மேல் வயிற்றினும் பொருந்த நாபிப்பிரதேசத்திற் கட்டப்படுவது; "அகட சக்கர வின்மணி" (கந்தபுராணம்).
சன்ன வீரம் - வெற்றிமாலை; வீரசங்கிலி என்றும் வழங்குவர். கழுத்தினின்று உந்திவரை தொங்கும்படி மேல் அகன்று திரண்ட வடிவாய் அமைக்கப்படும்; 708 பார்க்க. முத்துமாலை முதலியவற்றானமைந்த சன்னவீரத்தை அரசர் முதலாயினோர் அணிவது வழக்கு. உதர பந்தனத்தின் மேலே விளங்கச் சன்னவீரத்தை அணிந்து என்க. "சன்ன வீரம் திருமார்பில் வில்லிலக" - (ஞானவுலா).
ஒளி கதிர் - தளிர் ஒளி - குளிர் நிலவு - நளிர் கதிர் - இவை நன்முத்துக்களின் ஒளியில் சிறப்பாயமையும் தன்மைகள். தளிர் - தண்மை; நளிர் - தளிர்க்கும்; துளும்பும் - ததும்புகின்றதுபோல விளங்கும்.
முத்தின் பூணநூற் கோவை - பூணூல்போல அணியும் முத்துக் கோவை வடம்.
நகுசுடர் ஆரம் - கதிர் விரிதல் நகுதல்போல உள்ளதென்பது குறிப்பு; நகுதல் - மகிழ்ச்சிக் குறி; "நகைக்கும் பதத்தில்" (1073).
ஒளிர் கதிர் - என்பதும் பாடம்.