பாடல் எண் :3111
வாள்விடு வயிரக் கட்டு மணிவிர லாழி சாத்தித்,
தாளுறு தடக்கை முத்தின் றண்டையுஞ் சரியுஞ் சாத்தி,
நீளொளி முழங்கைப் பொட்டு நிரைசுடர் வடமுஞ் சாத்தித்,
தோள்வளைத் தரளப் பைம்பூண் சுந்தரத் தோண்மேற் சாத்தி,
1213
(இ-ள்) வாள்விடு...ஆழி சாத்தி - ஒளி விடுகின்ற வயிரக் கட்டுடைய அழகிய விரல்மோதிரத்தை அணிந்து; தாளுறு....சரியும் சாத்தி - முழந்தாள் வரையும் நீண்ட வலிய கையில் முத்தினாலாகிய தண்டைமையும் கைச்சரியினையும் அணிந்து; நீள் ஒளி...வடமும் சாத்தி - நீண்ட ஒளியுடைய முழங்கைப் பொட்டுடனே வரிகையின் ஒளிவீசும் மணி வடங்களையும் அணிந்து; தோள் வளை...தோண்மேற் சாத்தி - தோள் வளையாகிய முத்தாலாகிய அழகிய அணியினை அழகிய தோளின்மேல் அணிந்து;
(வி-ரை) வாள்...ஆழி - ஆழி - விரலாழி; மோதிரம். முத்தினை வயிரத்துடன் வைத்துக் கட்டிய மோதிரம் என்க. மணி - என்றதனால் அரதன முதலிய ஏனை மணிகளும் கொள்ளலாம்.
தாள் உறு தடக்கை - முழங்கால் வரையும் கைகள் நீண்டிருத்தல் உடற்கூற்றமைப்பின் உயர்ந்த தன்மை என்றும், இது கொடையிற் சிறந்தநிலை காட்டும் என்றும் கூறுவர்.
தடக்கை - பெரிய வலிய கைகள்; இங்கு வலிமையும் வண்மையுமாவன உலகை வாழ்விக்க அருளும் கைவண்மை; திருமருகலில் வணிகப் பெண்ணை வாழ்வித்தமை, மங்கையர்க்கரசியம்மையாரையும் குலச்சிறையாரையும் எடுத்து மன்னவர்க்கு நீறு நல்கியமை முதலியவையும், இனி இங்கு மணத்தில் விந்தோர் யாவருக்கும் முத்திநெறி காட்டுகின்றமையும் என்ற குறிப்பெல்லாமும் வைத்துக் கண்டுகொள்க. சரி - முன் கையில் அணியப்படும் வளை. "துயர்தீர்த்த கருணை வெள்ளப், புயலார் தருகையி னானென்னத் தோன்றிடும் புண்ணியமே"(ஆளு. பிள் - திருவந் - 49).
முழங்கைப் பொட்டு - முழங்கையில் அணியும் ஒருவகை அணி; கரமாலை என்னும் உருத்திராக்க மாலை அணியும் வழக்குக் காண்க. பொட்டு - பொட்டாக விளங்க; வடம் - முத்து வடம்.
தோள்வளைத் தரளப் பைம்பூண் - தோள் வளையாக அமைத்த முத்தணி.
சுந்தரத் தோன் - ஆண்மக்களுக்குத் தோள் அழகு மிகுதல் நல்லியல்புகளுள் ஒன்று; மணமகனது தோள் கண்டு அன்பு மிகுதல் அகப்பொருள் நூல்களுள் விதந்து பேசப்படும். "தமி ழாகரன் றன்பொற் சுடர்வரைத்தோள், கூடுதற் கேசற்ற கொம்பினை" (ஆளு. பிள் - அந் - 45); "தோள்வலி கூறுவோர்க்கே", "தோள் கண்டார் தோளே கண்டார்" என்று இக்கருத்தை வலியுறுத்திய கம்பன் பாட்டுக்களும் "தோள்வலி" என்பது பற்றிய சங்கோத்தர விருத்தியும் காண்க.
தண்டையு நாணும் - என்பதும் பாடம்.