திருக்கழுத் தாரந் தெய்வக் கண்டிகை மாலை சேரப் பருத்தமுத் தொழுங்கு கோத்த படரொளி வடமுஞ் சாத்திப், பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திருவார் காதில் வருக்கவெண் டரளக் கொத்தின் வடிக்குழை விளங்கச் சாத்தி, | 1214
| (இ-ள்) தெய்வக் கண்டிகை மாலை சேர - தெய்வத் தன்மையுடைய உருத்திராக்கக்கண்டிகை மாலையுடன் சேரும்படி; திருக்கழுத்தாரம் - திருக்கழுத்தில் அணியும் ஆரமாக; பருத்த..வடமும் சாத்தி - பருமுத்துக்களை ஒழுங்கபடக் கோத்த படரும் ஒளியினையுடைய வடத்தினையும் சாத்தி; பெருக்கிய..காதில் - மிக்க அழகோடும் உரிய இலக்கணமமைந்த திருப் பொருந்திய காதுகளில்; வருக்கவெண்...விளங்கச் சாத்தி - நல்ல தன்மைச் சாதியான வெள்ளிய முத்துக் கொத்துக்களாலாய வடித்தமைத்த மகரகுண்டலத்தை விளக்கமாகச் சாத்தி; (வி-ரை) திருக்கழுத்தாரம்....வடமும் சாத்தி - தெய்வக் கண்டிகை சேரத் திருக்கழுத்தாரமாக முத்து வடமும் சாத்தி என்று கூட்டுக; தெய்வக் கண்டிகை மாலை - உருத்திராக்க மாலை; முத்து மாலையின் மேம்பட்ட சிறப்புத் தோன்றத் தெய்வக் கண்டிகை என்று அடைமொழி புணர்த்தியோதினார். கண்டிகை மாலை சேர வடமும் சாத்தி - என்றதனாலும் அதன் உயர்வு காட்டப்பட்டது. இதற்கு இவ்வாறன்றித் தெய்வத் தன்மை பொருந்திய இரத்தின கண்டிகை மாலை என்றுரைத்தனர் முன்னுரைகாரர். "திருவடி மலர்மேற்பூத்த - சோதி" (3108) என்றும், "நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி மீது, மேற்பட விரிந்த சோதி வெண்சுடர்" (3113) என்றும், "அழகினுக் கணியாம் வெண்ணீற "(3115) என்றும் கூறுமாற்றால் சிவசாதனங்கள் முத்தினும் உயர்ந்தவை என்ற உண்மை காட்டப்படுதற்கேற்ப ஈண்டு இவ்வாறுரைத்தல் பொருத்தமுடைத்து காண்க. இனித், "திருவடை யாள மாலை" (3114) என்று மேலும் வருமாலோ? எனின், இங்குக் கூறிய "கண்டிகை" எப்பொழுதும் நித்தியமாகப் பிள்ளையார் தரித்ததென்றும், பின்வருவது திருமணக் கோலச் சிறப்பணியாகத் தரித்ததென்றும் கொள்க; "நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி" (3113) என்று கூறிய பின்னர், மேலும், "அழகினுக் கணியாம் வெண்ணீ றஞ்செழத் தோதிச் சாத்தி" என்று இக்கருத்தேபற்றி மற்றொரு சிவசாதனமாகிய திருநீற்றினைக் கூறுதலும் காண்க. பருத்தமுத் தொழுங்கு கோத்த - கண்டிகை மாலையுடன் சேர வைத்தலால் பருமுத்து வடம் என்றார்; கழுத்தில் அணியும் உருத்திராக்க வடம் பருமணிகளால் அமையும் விரிக்குறிப்புங் கண்டுகொள்க. பெருக்கிய வனப்பின்செவ்வி பிறங்கிய திருவார் காது - "அணைவுறவந் தெழுமறிவு தொடங்கிய அடியார்"களின் விண்ணப்பங்க ளெல்லாம் கேட்டு அருள் தரும் இடம் திருச்செவியே யாதலின் இவ்வாறு சிறப்பித்தார்; "மெய்த்தன்மை விளங்கு திருச் செவியிற் சார மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல், வைத்து" (2376) என்றதும், அவ்வாறு வந்த பிறவும் காண்க. காதுகள் பிரணவ வடிவாக அமைந்தமை "பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திருவார்" என்றதன் குறிப்பு; "தம் பாடல் பரமர்பாற், செல்லுமுரை பெறுவதற்குச் திருச்செவியைச் சிறப்பித்து" (1973) என்று, பிள்ளையார் தமது திருமுறையைத் "தோடுடைய செவியன்" என்ற தொடங்கியமை பற்றி ஆசிரியர் கருத்துக் கூறி எடுத்துக் காட்டியருளியதும் காண்க. சிவஞான நிறைவினாலார்ந்த திருமேனி யாதலின் பிள்ளையாரது காதுகளும் சிவன் றிருச்செவியின் தன்மை பெற்றன என்க. வருக்கவெண் தரளக் கொத்தின் வடிக்குழை - நல்ல வருக்கமாகத் தெரிந்த சிறு நன்முத்துக்கள் ஆறுசேரக் கட்டிய குழை; இது ஞானதேசிகர்க்குரிய அணி. வடிதல் - கீழ்த் தாழ்ந்து தொங்குதல். சென்னி பிறங்கிய - என்ற பாடம் சிறப்பிலது.
|
|
|