நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி மீது மேற்பட விரிந்த சோதி வெண்சுட ரெழுந்த தென்னப் பாற்படு முத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி, ஏற்பவைத் தணிந்த முத்தி னெழில்வளர் மகுடஞ் சேர்த்தார்; | 1215
| (இ-ள்) நீற்றொளி...மீது - திருநீற்றின் தெய்வவொளி தழைத்துப் பொங்கி நிறைந்த திருநெற்றியின்மேல்; மேற்பட...என்ன - அதன்மேலே விரிந்த சோதியினது வெள்ளிய சுடர் மேலெழந்ததுபோல; பாற்படு....சாத்தி - நற்பான்மை படுகின்ற முத்தினாலாய குளிர்ந்த ஒளிவிடுகின்ற திரணையினை அணிந்து; ஏற்ப வைத்து....சேர்த்தார் - பொருந்தும்படி வைத்து அழகுபடுத்திய முத்தினாலாகிய அழகு மிகுந்த மகுடத்தைச் சேர்த்தார்கள்; (வி-ரை) நீற்றொளி...எழுந்தது என்ன - திருநீற்றின் ஒளி முன்னரே தழைத்துப் பொங்கித் திருநெற்றியினின்றும் விளங்கிற்று; அதன்மேல் வெள்ளிதாகிய முத்துக் திரணை சாத்திய நிலை அத்திருநீற்றின் ஒளி மேலே விரித்து எழுந்ததுபோன்றிருந்தது. என்ன - உவமவுருபு; முன்னர்த் திருவடி மலர்மேற் பூத்த செழுநகைச் சோதி என்ன" (3108) என்ற கருத்தும் காண்க. அடிமுதல் முடிவரை அணிநலங் கூறுகின்றா ராதலின் திருவடியில் பூத்த சோதி திருமுடியின் மேற்பட விரிந்த சோதியாக விளங்கிற்றென்ற நயமும் கண்டுகொள்க. நீற்றொளி - மேற்பட விரிந்ததென்ன, முத்துத் திரணை விளங்கிற்று என ஈண்டு நீற்றொளியை முத்தின் சோதிக்கு உவமித்தார்; முன், முத்துச் சிவிகையின் ஒளி நீற்றொளி போன்றதென்று கருத்துடன் "நீற்றொளி போற்றிநின்று"(2114) என்றார். நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறை திருநெற்றி - பிள்ளையார் அவதரித்தபோது "வேறுபல காப்புமிகை யென்றவை விரும்பார், நீறுதிரு நெற்றியி னிறுத்திநிறைவித்தார்"(1941) என்ற அந்நாண்முத லின்றளவும் இடையறாது நீறு தழைத்துப் பொங்கி நிறைந்த திருநெற்றி என்ற குறிப்பும் காண்க; தழைத்தல் - முன்னை நிலையின் அமைந்ததுவே வேர்கொண்டது போலத் தொடர்ந்து மிகுதல்; முன் நிறுத்தி நிறைவித்த நீறு பின்னர் முறையே தழைத்துப் பொங்கி நிறைந்ததாம். திரணை - மகுடத்தின் கீழே சுருண்ட பெரிய விளிம்புபோலும் அமைப்பு. மகுடம் - ஈண்டு, முத்து வடங்கள் பலவற்றைப் பாகைபோல முறுக்கிப் பின் குஞ்சத்துடன் சேர்க்கும் அமைப்புக் குறித்தது; முத்துக்கிரீடம் என்றுமாம். ஏற்ப வைத்து - திரணையுடன் பொருந்தும்படி சார்த்தி.
|
|
|