பாடல் எண் :3114
இவ்வகை நம்மை யாளு மேர்வளர் தெய்வக் கோலங்
கைவினை மறையோர் செய்யக், கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீ டாம மார்பர் திருவடை யாள மாலை
எவ்வுல கோரு மேத்தத் தொழுதுதா மெடுத்துப் பூண்டார்;
1216
(இ-ள்) இவ்வகை...செய்ய - இவ்வகையாக நம்மை ஆட்கொண்டருளும் அழகு மிகுந்த தெய்வத்தன்மை வாய்ந்த மணக் கோலத்தை அத்தொழில் கைவல்ல வேதியர்கள் செய்ய; கடிகொள்... மார்பர் - பணமுடைய செந்தாமரைத் தாதுக்களையுடைய புதிதின் அலர்ந்த நீண்ட மாலை மார்பராகிய பிள்ளையார்; திருஅடையாள மாலை...பூண்டார் - திருஅடையாள மாலையாகிய உருத்திராக்க மாலையினை எல்லா வுலகத்தவர்களும் துதிக்கும்படி தொழுது தாமே எடுத்து அணிந்து கொண்டனர்;
(வி-ரை) இவ்வகை - திருவடிமுதல் திருமுடிவரை முன் சொன்னபடி. நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வக்கோலம் - பரமாசாரிய மூர்த்திகளாய் முத்தி நெறி காட்டி உபதேசித்து "ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக" (3146) என்று ஆட்கொள்ளும் குருமூர்த்தமாகிய திருக்கோலம் என்பதாம்.
கைவினை மறையோர் - இவ்வகைக் - கோலம் செய்ய - என்று கூட்டுக. கைவினையாவது மணக்கோலம் செய்தலில் பழகிக் கைதேர்ந்த நிலை; இதுவரை மறையவர் செய்த கோலம். இனிக் கூறுவது பிள்ளையார் தாமே புனைந்து கொண்டது.
கடிகொள்...நீள் தாம மார்பர் - செந்தாமரை மாலை அந்தணர்க்குரியது; இது மரபுபற்றிக் கூறியது.
திருவடையாள மாலை - உருத்திராக்கக் கண்டிகை. இது சிவனுடைய அடையாளம் என்பதும், ஒரு பெண் அணியும் தாலி அவளது நாயகனுக்குரிய நிலை காட்டுதல்போல இதனைப் பூண்டோர் இவ்வடையாளத்தினால் ஆன்ம நாயகனாகிய சிவனதுடைமையாதலை அறிவிப்பதாகிய அடையாளம் என்பதும் குறிப்பு. இங்கு இவ்வாறன்றித், தாம மார்பர் என்றது மரபியல் குறித்ததென்றும், திருஅடையாள மாலை என்பது அந்தணர்க்குரிய அடையாள மாலையாகிய தாமரை மாலை குறித்ததென்றும் உரைப்பாருமுண்டு.
தொழுது - வேதியர் கைவினையாற் செய்த மணக் கோலத்தின்மேற் றாமே புனைந்ததனால் இறைவரை வணங்கி என்க. தொழுத்து, இங்கு இது உலக உபசாரமங்கலமா யொழியாது தெய்வ மங்கலக் கோலமாய் நிகழ்தற்பொருட்டு என்பது குறிப்பு. தெய்வக் கண்டிகையாதலின் றொழுதார் என்பதுமாம்.
தாம் எடுத்துப் பூண்டார் - தாமே; பிறர் செய்யாது தகுதிபற்றித் தாமே பூண்டனர்.