பாடல் எண் :3120
முற்றுமெய்ஞ் ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்றி
நற்பெருந் தவத்தி னீர்மை நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார் தம்மையுங் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப் புரிவுடன் செய்த வேலை,
1222
(இ-ள்) முற்று மெய்ஞ்ஞானம்....பற்றி - முற்றிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற பிள்ளையாரது சிவந்த திருக்கையினைப் பிடிக்க; நற்பெரும்...எழுந்த - நல்ல பெரிய தவத்தின் தன்மையாலாகிய நலங்களையெல்லாம் கொண்டு எழுந்த; தெய்வ...காப்புச் சேர்த்து - தெய்வக் கற்பகப் பூங்கொம்பு போன்ற அம்மையாரையும்காப்புப் பூட்டி; பொற்புறு...வேலை - அழகிய சங்கற்ப முதலிய சடங்குகளை முன்னர் விருப்பத்துடனே செய்தபொழுது,
(வி-ரை) முற்றும்...மூர்த்தியார் - பிள்ளையார்.
முற்றும் மெய்ஞ்ஞானம் - நிறைவாகிய சிவஞானம். முற்றுதல் - எல்லாக் கலைஞானங்களுமுட்பட முழுது நிறைவாகுதல். "உணர்வரிய மெய்ஞ்ஞானம்" (1968); "எண்ணிரிய சிவஞானம்"(1966); பெற்ற - சிவஞானங் குழைத்த பாலமுதூட்டப் பெற்றதனால் அடைந்த. மூர்த்தியார் - பெருமையுடையார்.
செங்கை பற்ற - கை பற்றுதல் - மணம் செய்தல். பாணிக் கிரகணம் என்பது வடமொழி.
நற்பெரும்...பூங்கொம்பன்னார் - நற்பெரும் தவம் - "நற்றவக் கொழுந்தன்னார்"(3135); நலம் - முன்னை நிலையில் செய்த நல்ல பெரிய தவத்தின் பயனாக இவ்வம்மையார் பிள்ளையாரது தேவியாராகப் பேறு பெற்றனர் என்பது குறிப்பு; இஃது அன்ற சிவப்பேறு பெறும் நிலைபெற நின்றமையால் இவ்வாறு சிறப்பித்தார். தவத்தின் நீர்மை நலம் - என்றமையும் காண்க. "நற்றவக் கன்னியார் கை" (3134).
தெய்வக் கற்பகப் பூங்கொம்பன்னார் - கற்பகம் - வேண்டியதெல்லாம் தருவதாய்த் தேவலோகத்தில் உள்ளதென்பர்; ஆனால் அது முத்தி தரவல்லதன்று; முத்தியும் தரவல்லதொரு கற்பகமுண்டாயின் அதன் பூங்கொம்பு போல்வார் என்பது தெய்வக் கற்பகம் என்றதன் குறிப்பு. இங்குத் தெய்வம் என்றது தெய்வத்தன்மை குறித்தது; ஈண்டுப் பிள்ளையார் இனிச் செய்யும் முத்தி தானத்தில் தேவியாருக்கும் பங்குண்டாமாதல் குறிப்பாலுணர்த்தியபடி.
நற்பெருந் தவத்தின்....கொம்பன்னார் - மேல் "பவளமென் கொடியொப்பார்"(3121); "அம்பொன்செய் தீபம்" (3121); "நற்றவக் கன்னியார்" (3134); "நற்றவக் கொழுந்தன்னார்"(3135); முதலியவை காண்க. இவைகள் தாயாரைப் போற்றும் நிலையில் அமைந்தமை கருதுக; கந்தபுராணத்துள் நாரத முனிவர் வள்ளிநாயகியாரைப் பற்றி முருகப்பெருமானிடம் அறிவிக்குங்காலையில் "தாயதாகும்" என்று கூறிச்செல்லும் நிலை இங்குக் கருதற்பாலது.
காப்புச் சேர்த்துப் பொற்புறு சடங்கு - முன்னர்ச் செய்த - காப்பணிதல் மணமகளுக்கும் உரிய சடங்குடன் செய்தல் மரபு; முன்னர் - மணமகள் மணமனைக்கு வரு முன்னரே; புரிவுடன் - இடைவிடாது முயன்ற எண்ணத்துடனே.
செய்த வேலை - செய்தபோதின் அதன் தொடர்ச்சியாக - அலங்கரித்து வைத்தார் - என வரும்பாட்டுடன் முடிக்க.
பொலிவுடன் - பரிவுடன் - போதுடன் - என்பனவும் பாடங்கள்.