செம்பொன்செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனைபூண் செல்வப் பைம்பொனின் மாலை வேய்ந்த பவளமென் கொடியொப் பாரை நம்பன்ற னருளே வாழ்த்தி நல்லெழில் விளங்கச் சூட்டி அம்பொன்செய் தீப மென்ன வழகலங் கரித்து வைத்தார். | 1223
| (இ-ள்) செம்பொன் செய்...கொடி ஒப்பாரை - செம்பொன்னாலாகிய நுதலணி மாலையினையும், அழகிய இரத்தினங்கள் இழைத்த வேலைப்பாடுடைய அணிகளையும், செல்வம் பொருந்திய பசும்பொன் னரிமாலைகளையும் வரிசைபெறச் சூட்டிய பவளத்தின் மெல்லிய கொடிபோன்ற அம்மையாரை; நம்பன்றன்...சூட்டி - இறைவரது அருளினையே வாழ்த்தி நல்ல அழகு விளங்க அலங்கரித்து; அம்பொன் செய்..வைத்தார் - அழகிய பொன்னாலாகிய விளக்குப்போல அழகினையே அலங்கரித்தது போல அலங்கரித்து வைத்தார்கள். (வி-ரை) செம்பொன் செய்....வேய்ந்த - இவ்வளவும் வரும் அடைகள் பவள மென்கொடி யொப்பார் என்ற பெயரை விசேடித்து நின்றன. வாசிச் சூட்டு - நுதலணி மாலை; இது சுட்டி என்றும், நெற்றிப் பிறை என்றும் வழங்கப்படும்; மணமகளை இது சூட்டி அணி செய்தல் சிறப்பும் வழக்குமாம். திருமணிப்பூண் புனை - என்க; இவை இரத்தினமிழைத்த அணிகலங்கள். பைம்பொனின் மாலை - பொன்னரி மாலை; பொன்னாரங்கள். வேய்தல் - மிகுதியும் வரிசைபெறச் சூட்டுதல். பவள மென்கொடி - மேனி நிறம் - மென்மை - அவயவப் பிரிவு - கைபுனையாத இயற்கை வளம் - நீர்மை - முதலியவற்றால் உருப்பற்றி வந்த உவமம். நம்பன்ற னருளே வாழ்த்தி - மணவணி முதலிய உலகியல் நலங்கள் நிகழும்போது இறைவரது நினைவு வருதல் முற்செய் தவப்பயன். நல்லெழில் விளங்கச் சூட்டி - இயல்பாகிய நல்ல அழகினை மறைக்காதபடி அது மேலும் விளக்கமுறும்படி அணிகளைப் புனைந்து; சூட்டுதல் - அணிகலன் - பூமாலை முதலியவற்றைப் புனைதல். அம்பொன் செய்...வைத்தார் - அழகுக் கழகுசெய்தல் போல் இயல்பால் அழகுடையாரை மேலும் அலங்கரித்தனர் என்பதாம். அம்பொன்செய் தீபம் என்ன - தீபம் - தானே ஒளிதரும் பொருள்; அதனைப் பொன்னா லமைத்ததுபோல; பொன்னா லமையினும் விளக்கே ஒளிதருவதுபோல இங்கு அம்மையாரின் அழகே பொற்பணிகளை விளக்கியதென்பதாம். இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்கநின்றன.
|
|
|