விண்ணவர் மலரிங்ன மாரி விசும்பொளி தழைப்ப வீச, மண்ணக நிறைந்த கந்த மந்தமா ருதமும் வீசக், கண்ணொளி விளக்க மிக்க காமர்தோ ரணங்க ளூடு, புண்ணிய விளைவு போல்வார் பூம்பந்தர் முன்பு சார்ந்தார். | 1225
| இ-ள்) விண்ணவர்...தழைப்ப வீச - விண்ணுலகத்தவர்கள் தேவப் பூமாரியினை வானத்தில் ஒளி மிகும்படி வீச; மண்ணகம்...மாருதமும் வீச - நிலஉலகம் நிறைந்த மணத்தையுடைய தென்றற் காற்றினையும் வீச; கண்ணொளி...முன்பு சார்ந்தார் - நெருங்கிய ஒளி மிகுந்த அழகிய தோரணங்களினிடையே சென்று புண்ணியத்தின் பயன் போல்வாராகிய பிள்ளையார் பூம்பந்தரின் முன்பு சார்ந்தருளினர். (வி-ரை) விசும்பு ஒளி தழைப்ப - வானில் ஒளி மிகும்படி; மாரி - வீச என்க; மலர் - மந்தாரம் முதலிய தேவ தருக்களின் மலர்கள். விசும்பொளி தழைப்ப - என்பதனை மந்தமாருதத்துடனும் கூட்டுக. மந்தமாருதமும் விசும்பு ஒளி தழைப்ப வீச என்க. மந்தமாருதம் - தென்றற் காற்று. உம்மை - விண்ணவர் வீசியதன்றி என இறந்தது தழுவிய எச்சவும்மை; மந்தமாருதம் - வீசுதல் - தென்றற் காற்று மெல்லிதாய் அசைதல்; கந்தம் - மலர்களின் மணத்தைத் தாங்கிக்கொண்ட நிலை. கண் - கண்ணுதலால்; நெருங்குதலால். கண்ணுதல் - நெருங்குதல். கண்ணுத(லால்) காமர் தோரணங்கள் ஒளி விளக்கம் மிக்கஎன்க. பலப்பல வகைகளால் அழகிய தோரணங்கள் நெருங்குதலால் நிறம் பலகொண்ட ஒளி மிகுந்தது என்பது. தோரணங்களூடு - தோரணங்களினிடையே சென்று. புண்ணிய விளைவு போல்வார் - பிள்ளையார்; புண்ணியம் - சிவ புண்ணியம். விளைவு - பயன்; இனி முத்தி பெறும் பக்குவமுடைய கூட்டத்தினர்களினிடையே எழுந்தருளுகின்றா ராதலின் அவர்கள் செய்த சிவ புண்ணியங்களின் விளைவு என்றார். பூம்பந்தர் - மணமனையின் முன்பு மணமகள் வருதற்கமைக்கும் பூக்களா லலங்கரிக்கப்பட்ட பந்தர். மிக்கார் - என்பது பாடமாயின், மிக்கு -ஆர் - நிறைந்த, காமர் - அழகுடைய என்று உரைத்துக் கொள்க. இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
|
|
|