பாடல் எண் :3125
மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்க ணிரைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை நறுஞ்சுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி உடனெதி ரேற்று நின்றார்.
1227
(இ-ள்) மறைக்குல...எல்லாம் - மறையவர் குலத்னிராய் இல்வாழ்க்கை நிலையின் வாழும் மங்கலம் பொருந்திய பெண்கள் எல்லாம்; நிறைத்த நீர்...ஏந்தி - நிறைத்த நீரினையுடைய பொற்குடங்களையும், வரிசையாகிய அழகிய விளக்களையும், தூபங்களையும், தேன் பொருந்திய நல்ல மலர்களாலான மாலைகளையும், நல்ல ஒளி பொருந்திய முளைப் பாலிகைகளை வைத்த பொற்றட்டுகளையும், உறைத்தலினால் அழகு பொருந்திய கலவைச் சாந்தினையும் ஏந்திக் கொண்டு; உடன்...நின்றார் - ஒருங்குடனாக மணமகனாராகிய பிள்ளையாரை நல்வர வெதிர்கொண்டு நின்றார்கள்.
(வி-ரை) மங்கல மகளிர் எல்லாம் - ஏந்தி - உடன் எதிர் ஏற்று நின்றார் - என்க. இது சுமங்கலிகளான மறையோர் மகளிர் மணமகனாரை மணமனையில் எதிர் வரவேற்ற நிலை கூறியது; மறைக்குல மைந்தர்களும் மறையவரும் மனையின் முன்பு பந்தரின் முன் சென்று வரவேற்ற நிலை முன் 3122-ல் கூறப்பட்டது. அதன்பின் பூம்பந்தரிற் சார்ந்து பாவாடைமீது மணமனையில் வந்தபோது மங்கல மகளிர் நிறைகுடம் முதலிய மங்கலப் பொருள்களை ஏந்தி வரவேற்பது மரபு வழக்குமாம்.
நிறை குடம் - விளக்கு - தூபம் - மலர்மாலை - முளைப் பாண்டில் - கலவை - இவற்றைப் பெண்கள் ஏந்தி வருதல் வழக்கு; இவை மங்கலப் பொருள்கள்.
நறைக்குல மலர்சூழ் மாலை - நறை - தேன்; குலமலர் - நல்லவகை மலர்கள்; சாதி - மல்லிகை - முல்லை முதலியன. சூழ்மாலை - மலர்களைச் சுற்றி வைத்துக் கட்டிய இண்டை பிணையல் முதலிய மாலைகள். நறுஞ்சுடர் முளைப் பொற்பாண்டில் - சுடர்முளை - முளைப் பாலிகைகள்; மணத்திருநாளுக்கு முன் ஏழாநாளில் முளை பூரித்தாராதலின் (3071) முளைகள் வளம்பெற வோங்கி வளர்ந்து விளங்கின; இவற்றின் வளமும் விளக்கமும் நற்குறிகளாக எண்ணப்படுதலின் நறும் - சுடர் முளை என்ற அடைகொடுத்துச் சிறப்பித்து ஓதினார். பொற்பாண்டில் - பொற்றட்டு. நகுசுடர் - என்பதும் பாடம். நகு - மகிழும்.
உறைப்பொலி கலவை - புனுகு, கத்தூரி முதலிய வாசனைப் பண்டங்களை நன்கு உறைத்துக் கூட்டிய கலவைச் சாந்து. பொலி - நயமும் மணமும் நிறமுமுடைய.
உடன் - ஒழுங்குபட; மணமகனார் வந்தவுடனே என்றலுமாம்; மைந்தர்கள் வரவேற்ற நிலையினுடனே மகளிரும் ஏற்றவாறு என்ற குறிப்புமாம்.