மங்கலம் பொலிய வேந்தி மாதரார் முன்பு செல்லக் கங்கையின் கொழுந்து செம்பொ னிமவரை கலந்த தென்ன அங்கவர் செம்பொன் மாடத் தாதிபூ மியினுட் புக்கார் எங்களை வாழ முன்னா ளேடுவை கையினி லிட்டார். | 1230
| (இ-ள்) மங்கலம்...செல்ல - மங்கலப் பொருள்களை ஏந்திக்கொண்டு (பார்ப்பனப்) பெண்கள் முன்னே செல்ல; கங்கையின்...என்ன - கங்கையின் கொழுந்துபோன்ற வெள்ள ஒழுக்கு சிவந்த பொன்மலை என்னம் இமயமலையினைக் கலந்ததுபோல; அங்கவர்...புக்கார் - அங்கு நம்பாண்டார் நம்பிகளது அழகிய பொன்மாடத்தின்கண் ஆதி பூமி என்னும் மணவறையினுள்ளே புகுந்தருளினர்; எங்களை...இட்டார் - எங்களை வாழ்வித்தற்பொருட்டு முன்னாள் ஏட்டினை வைகையினில் இட்டருளிய பிள்ளையார். (வி-ரை) மங்கலம் - நிறைகுடம், விளக்கு, முளைப்பாண்டில் முதலிய மங்கலப் பொருள்கள்; அட்டமங்கலம் எனப்படும். கங்கையின் கொழுந்து - பெரிதாய் விரைவாய்ப் பேரோசையுடன் வருதலின்றி மென்மையாய்ச் சிறிய அளவில் மெல்ல முன்னேறிச் செல்லுதலின் கொழுந்தென்றார்; உருவகம். கங்கை வெண்மை நிறமுடையதாதலும் குறிப்பு. "புனல் வெண்மை" (உண்மை விளக்கம்) என்ற பொதுவியல்போ டன்றிக் கங்கை நீருக்குச் சிறப்பாகிய வெண்மைநிறமு முண்டு; "கங்கையுந் தெண்ணர் யமுனையுமே கூடிய, கோப்பொத்த தாலுமை பாகமெங் கொற்றவற்கே" (பொன்வண்ணத்தந்தாதி - 90) என்ற திருவாக்கில் வெண்ணீறிட்டு வெள்ளியதாய் விளங்கும் திருமேனியைக் கங்கைக்கு உவமித்தது காண்க. இங்குப் பிள்ளையார் திருமேனியும் முழுதும் முத்தணி புனைந்து நீறிட்டு வெண்ணிறமாய் விளங்குதலும் குறிப்பு; "வெள்ளை மேகம்" (3135) எனப் பின்னர்க் கூறுதலும் காண்க. செம்பொன் இமவரை - பொன்மலை என்னும் இமயமலை; பொன்மலை இமயத்தின் ஒரு பகுதி. பொன்மாடத் தாதிபூமி - "பொன்னின் வெண்டிருநீறு புனைந்தென"(11). கங்கையின் கொழுந்து பிள்ளையாருக்கும், பொன் இமவரை - ஆதிபூமிக்கும், பிள்ளையார் சென்று சேர்தல் கங்கைக் கொழுந்து மெல்ல இமயத்திற் படர்தலுக்கும், மெய்யும் வினையும்பற்றி எழுந்த உவமம். கலந்தது - மெல்லச் சேரும் நிலை குறித்தது. அங்கவர் - அங்கு அந் நம்பாண்டார் நம்பிகளுடைய; ஆறனுருபு விரிக்க. எங்களை வாழ....இட்டார் - "வாழ்க வந்தணர்" என்ற திருப்பாசுரத் திருப்பதிகத்தினை எழுதிய ஏட்டினை வைகையாற்றில் இட்டுப் புனல் வாதம் வென்ற வரலாறு குறித்தது. எங்களை வாழ என்றது அதனில் "ஆழ்க தீயது; எல்லா மரனாமமே சூழ்க; வையகமும துயர் தீர்கவே" என்ற பகுதியினாற் பூதபரம்பரையில் பின்வரும் எங்களை வாழ்வித்த நிலை குறித்தது. ஆழ்க - சூழ்க - தீர்க என்ற வியங்கோள் வினைமுற்றுக்கள் "இயலு மிடம்பா லெங்கு மென்ப" ஆதலின் எதிர்காலத்து வரும் எங்களையும் ஈடேற்றும் தன்மையுடையன; ஆதலின் அன்று ஏடிட்டருளியமையால் இன்று யாங்களும் வாழ்கின்றோம்; இனிவரும் பரம்பரையும் வாழும் என்பதாம். வாழ - வாழ்விக்கும் பொருட்டு; ஏடிட்டமையால் புனல்வாத வெற்றியும், அதனால் அமணச் சார்பு அழிவும், அதனால் சைவத் திருநீற்றினாக்கமும் பெறப்பட்டமையும் எங்களுக்கு வாழ்வருளியதாம் என்ற குறிப்பும் காண்க. வாழ - வாழ்விக்க. எங்களை வாழ முன்னாள் - இட்டார் ஈண்டு "ஆதி பூமியினுட் புக்க" பிள்ளையார், அவ்வாறே திருமணச் சடங்கினூடே ஆதிபூமியாகிய சிவன்றிருக்கோயிலுக்குச் சென்று அன்று அங்கு வந்தார்க்கெல்லாம் பேரானந்தப் பெருவாழ்வாகிய முத்தியருள்வாராகப் பின்வரும் எங்களுக்கு அவர் அருள் செய்தவாறென்னை? என்பார்க்கு எங்களை வாழ முன்னாள் ஆற்றில் ஏடிட்டமையால் அருள் புரிந்த வாழ்வருளினர் என்பதாம்; இது பற்றியே ஈண்டு இவ்வாற்றாற் கூறியருளினர் ஆசிரியர். முன்னாள் - முன் - முன்னிய - நினைந்த என்ற குறிப்புமாம். "எங்களையு நினைந்தருளிற்று" (3280 = ஏயர் - புரா - 126) என்புழிப்போலக் கொள்க. ஆதி பூமி - சிவனகர் என்ற -குறிப்புமாம்.
|
|
|