பாடல் எண் :3134
நற்றவர்க் கன்னி யார்கை ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பிற் பழுதினற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார், பெருமணப் பிணைய னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக் கொண்டுமுன் றுன்னி னார்கள்.
1236
(இ-ள்) நற்றவக் கன்னியார் கை...நண்ண - நல்ல தவத்தையுடைய கன்னியாரது கையினைத் திருஞான சம்பந்தர் தமது செங்கையால் பிடித்தற்கு உரிய பண்புடைய குற்றமற்ற நல்ல வேளை வந்து பொருந்த; பெற்றவருடன் பிறந்தார் - கன்னிகையைப் பெற்ற தாய் தந்தையரும், உடன்பிறந்த சகோதரர்களும்; பெருமணப் பிணை அன்னாரை...துன்னினார்கள் - பெருமை தங்கும் மணப்பெண்ணாகிய மான் போன்ற கன்னிகையாரைச் சுற்றத்தார்கள் முன் சூழ்ந்து போற்ற அழைத்துக்கொண்டு மண மகனாராகிய பிள்ளையார் முன்னே கொண்டுவந்து சேர்ந்தனர்.
(வி-ரை) நற்றவக் கன்னியார் - முன் "நற்பெருந் தவத்தி னீர்மை நலம் படைத் தெழுந்த"(3120) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
கன்னியார் கை ஞானசம்பந்தர் செங்கை பற்றுதற்குரிய பண்பிற் பழுதினற் பொழுது - "பாணிக்கிரகண முகூர்த்தம்" என்பது வடமொழி வழக்கு; "நிறைவளைச் செங்கை பற்ற" (3138); "அணிமலர்க் கைப்பிடித்து"(3139); "காதலியைக் கைப்பற்றிக் கொண்டு"(3150) என்று இதனையே மேலுங் கூறுதல் காண்க; திருமங்கல்யதாரணம் என்னும் தாலியணிதலாகிய சடங்கு பின்னாளில் தொடங்கியதென்றும், "கரணம்" எனப்படும் வேள்விச் சடங்குடனே கூடக் கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கொள்ளும் நிலை, மாலைசூட்டலும் (பாணிக்கிரகணம்) கைப்பிடித்தலும் பொரியட்டி எரிவலம் வருதலுமாகிய இவற்றுடன் நிறைவாகுமென்றும் கூறுவர். மச்ச புராணத்தில் முதலில் மங்கலநா ணணிதல் காணப்பட்டதென்றும் கூறுவர். "கற்றநான் முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்த வாற்றான், முற்றமங் கலநாண் சாத்தி முழுதுல கீன்றாள் செங்கை, பற்றினன் பற்றி லார்க்கே வீடருள் பரம யோகி" (திருவிளை. புரா - திருமண - 185) என்றும், "செங்கம லத்திறை சிந்தையி னாற்றி, யங்கையி னீந்திட வாண்டகை கொண்ட, மங்கல நாணை மணிக்கள மார்த்து, நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான்" (கந்தபு - தெய்வ. திருமணம் - 247) என்றும், இவ்வாறு வருவன பிற்காலத்தில் "ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்ற நிலையில் கற்பியல்வழி நிற்கும் பொருட்டு உலகை வழிப்படுத்தியவை. வள்ளியம்மை திருமணத்தில் "குறவர் கோமான், கந்தவேள் பாணி தன்னிற் கன்னிகை கரத்தை நல்கி, நந்தவமாகி வந்த நங்கையை நயப்பாலின்று, தந்தனன் கொள்க வென்று தண்புனற் றாரை யுய்த்தான்" (வள்ளி. திருமண - 199); "நாரதன்...அங்கியோடு, மற்றுள கலனுந்தந்து வதுவையின் சடங்கு நாடி, அற்றம தடையா வண்ண மருமறை விதியாற் செய்தான்" (200) என்றும் வருவனவற்றுள் தாரையுய்த்தலும் அங்கி வேள்வியுடன் வேதச் சடங்குமே பேசப்பட்டவை. வள்ளியம்மையார் திருமணம் களவியலின் பின் நிகழ்ந்த கற்பியல் நெறி ஒழுக்கங் காட்டுவது போலும். இக்கரணங்களும், கற்பியல் மண ஒழுக்க முறைகளும் காலந்தோறும் தேயந்தோறும் வருணந்தோறும் மாறுபட்டும் நிகழ்வன என்பது தொல்காப்பியத்துள் நச்சினார்க்கினிய ருரைத்தவாற்றானும் பிறவாற்றானும் விளங்கும்; இதுபற்றிய ஆராய்ச்சிகள் பெரிதும் மாறுபாட்டிற்கும் பூசலுக்கும் இடமாய் விளைதலின் முன்கூறிய குறிப்புக்களை மனங்கொண்டு துணிபும் அமைதியும் கொள்ளத் தக்கன என்பது.
கை பற்றுதற்குரிய பண்பிற் பழுதி னற்பொழுது நண்ண - இந்நாளில் மங்கலநாணணிதலுக்கு நல்லவேளை பார்ப்பதுபோல, முன் கூறியவாற்றால் காணும் அந்நெறி முறையில் கைப்பிடித்தலுக்கு (பாணிக்கிரகணத்துக்கு) நல்வேளை பார்த்தல் வழக்கு; பழுதில் நற்பொழுது - சோதிட நூல்வழி வேளையில் வரும் குற்றங்கள் இலவாகிய நல்ல நேரம்; நன்முகூர்த்தம் என்ப. "அருக்கன்முதற் கோளனைத்து மழகியவுச் சங்களிலே, பெருக்கவலி யுடனிற்கப் பேணியநல் லோரையெழ" (1920) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. பழுதில் - உயிர்களின் பழுதாகிய மலக் குற்றத்தை இல்லையாகச் செய்தற்குக் காரணமாகிய என்று பிற்சரித விளைவுபற்றிய குறிப்பும் காண உரைத்தலுமாம்; கை பற்றுதற்குரிய பண்பில் என்றது திருமணத்தின் நிலை பற்றியும், பழுதில் என்றது உயிர்களின் நன்மைபற்றியும் உரைத்தலுமாம்.
பெற்றவர்....துன்னினார்கள் - குறித்த நல்வேளையில் மணமகளைப் பெற்றவரும் உடன் பிறந்தாரும் அழைத்து மணவறையினுள் மணமகனாரது வலப்பக்கத்தில் அமர வைத்தல் மரபு; உரிமைபற்றி இச்செயல் பெற்றவர் - உடன் பிறந்தார்களின்மேல் நின்றது; உடன்பிறந்தார் என்றதனால் ஈண்டுப் பிள்ளையாரின் தேவியாருக்கு உடன் பிறந்தார் உளராயினர் என்பது கருதப்படும்.
பெருமணம் - வந்தணைந்தார்க்கெலாம் முத்திப்பேறு தரும் பெருமை குறித்தது; தலப்பெயர்க் குறிப்புமாம்.
சுற்ற முன் சூழ்ந்து - பெற்றவர் உடன்பிறந்தார்களே யன்றி மணமகளாரின் சுற்றத்தார் முன்சூழ்ந்து போற்ற அணைந்தனர்.
முன் துன்னினார்கள் - முன் - மணவறையாகிய ஆதிபூமியின் முன்பு.
பிணை - பெண்மான்.