பாடல் எண் :3136
புனிதமெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங் கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதி னல்லமங் கலங்கள் கூறி
மனிதருந் தேவ ரானார் கண்ணிமை யாது வாழ்த்தி.
1238
(இ-ள்) புனித மெய்க்கோலம்....தம்மை - தூய்மை செய்யும் மெய்க்கோலம் நீடிய சீகாழித் தலைவராகிய பிள்ளையாரை; குனிசிலை... கண்டபோதில் - வளைந்த வில்லைப்போன்ற புருவங்களையுடைய மெல்லிய பூங்கொம்பு போன்ற தேவியாருடனே கூட மிக்க ஆர்வத்துடன் கண்டபோதில்; நல்ல...கூறி - நல்ல மங்கலவாழ்த்துக்களைச் சொல்லி; மனிதரும்...வாழ்த்தி - கண்ணிமைக்காமல் பார்த்து வாழ்த்திய வகையினாலே மனிதர்களும் தேவர்களாயினார்கள்.
(வி-ரை) புனித மெய்க்கோலம் - புனிதம் - தூய்மையாகிய தன்மையுமாம். மெய் - அழிவில்லாத - நித்தியமான; புனிதம் - முத்தணி - தாமரை மாலை என்றிவற்றையும், மெய் - திருநீறு கண்டிகைகளையும் குறித்து நின்றதும் காண்க.
குனிசிலைப் புருவம் - வில், வளைந்த அளவும் பயன்றருவதுபோல ஈண்டு அம்மையாரின் கண்ணும் புருவமும் வளைந்துகாட்டிய நிலையின் அருட்பார்வை செய்து யாவர்க்கும் முத்திப் பயனளிக்கும் தன்மை வாய்ந்தது என்பதனைக் குறிப்பாலுணர்த்துவார் குனிசிலை போன்றதென்ற உவமைமுகத்தாற் கூறினார்.
வேந்தர் தம்மைக் - கொம்பனா ருடனேகூடக் கண்டபோதின் - வாழ்த்தித் - தேவரானார் என்க. மணமக்கள் ஒருசேர வீற்றிருக்க முதலிற் காணும் மங்கலக்காட்சியாதலின் அதனைக் கண்டோர் வாழ்த்துவது மரபு. இங்குக் கண்டவர்கள் அக்காட்சியிலே ஈடுபட்டு இலயித்துக் கண்ணிமையாது வாழ்த்தினார்கள் என்றது அதன் மேன்மை குறித்தது.
கண்ணிமையாது வாழ்த்தி மனிதருத் தேவரானார் - கண்ணிமையாத தன்மை தேவர்களுக்குத்தான் உண்டு; அத்தன்மை இங்கு மனிதரும் பெற்றமையால் அவ்வளவில் தேவரானார் என்றார். மனிதர் - தேவர் என்றவை பிறப்பு வகை குறித்து நின்றன. கண் இமையாது வாழ்த்தியதனால் தாம்தாம் உயர்வு பெற்றனர் என்பது குறிப்பு. இறைவரை வாழ்த்துகின்றோர் தாம்தாம் உயர்ச்சியாகிய வாழ்வு பெறுதற் பொருட்டே வாழ்த்துவர் என்பதன்றி அதனால் இறைவருக்கு ஓர் வாழ்வு தருவாரல்லர். "வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனநின்பாற், றாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழுவேண்டி"(திருவா) என்றபடி இங்குக் கண்டோர் தாம் தாம் வாழ்வடைந்தார்கள் என்பதைக் காட்சிப்படக் கண்ணிமையாது வாழ்த்தி என்று காரணங் காட்டிச் சுவைபடக் கூறியவாறு காண்க. இவ்வாறு காணப்பெற்று வாழ்த்தியதனால் அவர்கள் எல்லாம் அழியாத சிவனுலக வாழ்வுபெறும் சரித விளைவுக் குறிப்பும் காண்க.
நனிமிகக்கண்ட - நனிமிக - ஒருபொருட் பன்மொழி; ஊன்றிக் கண்ட காட்சி மிகுதி குறித்தது. வேந்தரும் கொம்பனாருமாக இருவரையும் ஆர்வமிகக் கண்டாராதலின் இருசொல் புணர்த்தி ஓதினார் என்றலுமாம்.
நல்ல மங்கலங்கள் - உலகில் அழியும் தன்மையுடைய ஏனையோர்க்குக் கூறும் மங்கல வாழ்த்துக்கள் உபசாரமாத்திரையாய் நின்று ஒருகாலத்து ஒழிவன. ஆனால் இங்குப் பிள்ளையாரையும் தேவியாரையும் வாழ்த்திக் கூறிய மங்கலங்கள் அவ்வாறன்றி என்றும் அழிவுறாத நித்திய சிவமங்கலமாய் நிறைவுறுதலின் நல்ல என்று பிறிதினியைபு நீக்கிய அடை தந்து அருளினார்.