மறையொலி பொங்கி யோங்க, மங்கல வாழ்த்து மல்க, நிறைவளைச் செங்கை பற்ற நேரிழை யவர்மு னந்தப் பொறையணி முந்நூன் மார்பர் புகரில்வண் பொரிகை யட்டி இறைவரை யேத்தும் வேலை யெரிவலங் கொள்ள வேண்டி, | 1240
| (இ-ள்) மறையொலி...மல்க - வேத ஒலிகள் மேன்மேலும் பெருகி ஓங்கவும் மங்கல வாழ்த்தொலிகள் மிகுந்து பெருகவும்; நிறைவளை..நேரிழையவர் முன் - நிறைந்த வளையல்களை அணிந்த அம்மையாரது செங்கையினைப் பிள்ளையார் பற்றும்பொருட்டு நேரிய அணிகளை அணிந்த அந்த அம்மையாரின் முன்னே; பொறை...வேலை - பொறையினை அணிகலனாகப் பூண்ட முந்நூலணிந்த மார்பினராகிய திருநீலநக்க நாயனார் குற்றமில்லாத வெள்ளிய நெற்பொரியைக் கையில் எடுத்து வேள்வித் தீயில் ஆகுதியாகப் பெய்து சிவபெருமானைத் துதிக்கும்பொழுது; எரிவலங்கொள்ள வேண்டி - எரியை வலமாக வருவதற்காக எண்ணி; (வி-ரை) மறையொலி பொங்கி ஓங்க - இவ்வொலி மறையவர்களும் கிளைஞரும் செய்தது; மங்கல வாழ்த்து - மறையவர் மகளிரும் ஏனையோரும் செய்தது. நிறைவளைச் செங்கை பற்ற - செங்கை - அம்மையாரது கையினை; பற்ற - பற்றும் பொருட்டு; பற்றும் நிலை கூடும்பொருட்டு; காரணப்பொருளில் வந்தது. பற்ற - பொரி - அட்டி - ஏத்தும் - வேலை - என்று கூட்டிக்கொள்க. நேரிழை யவர்முன் - பொரிகை அட்டி - ஏத்தும் வேலை - வெண்பொரியை வேள்வித் தீயினிலிட்டு ஆகுதி செய்து உரிய மந்திரம் பாவனைகளுடன் இறைவரை ஏத்தும் இச்சடங்கு மணமகள் முன்பு கைப்பற்றுதல் (= பாணிக்கிரகணம்) என்னும் அந்நிலை கூடுதல் குறித்துச் செய்யப்படுவது. அந்தப் பொறை அணி முந்நூல் மார்பர் - திருநீலநக்கர். புகரில் வெண்பொரி - புதிய செந்நெல்லைப் புதிய தூய மட்பாண்டத்தில் புனித வதிகளாகிய பெண்களால் தூய்மையாக இல்லத்தில் பொரிக்கப்படல் வேண்டும் என்பது முதலிய விதிகளின்படி அமைத்த பொரியாதலின் புகரில் என்றார். புகர் - குற்றம்; பொரி - அமுதுக்கு மேலாக ஆகுதிக்குச் சிறந்த சாதனம் என்பர். கை அட்டி - பொரியினைக் கருவிகளினாலன்றிக் கையினால் மேல்எடுத்து எரியிலிடுவது விதி; அட்டுதல் - அளவுபட வீழ்த்தி யிடுதல். இறைவரை ஏத்தும் - இச்சடங்கினை ஏற்று அதற்குரிய பயனாகிய கைப்பற்றற்குத் தகுதியுடையவராந் தன்மையினை அருளும்படி துதிக்கும்; இது அந்த உரிய மந்திரங்களின் கருத்து. எரிவலங் கொள்ள வேண்டிக் - கைப்பிடித்து - ஒருப்படும் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டுக. எரிவலங் கொள்ளுதல் - எரியிற் பொரிகை அட்டி, மணமகன் மணமகளைக் கைப்பிடித்து வேள்வித் தீயினை ஏழுமுறை வலம் வருதல் மணச் சடங்குகளுட் சிறந்த பகுதி; இதனுடன் மணம் நிறைவாகுதல் மரபு. செங்கை பற்றி நேரிழை யவர்முன் வந்த என்று பாடங் கண்டு பொறையணி முந்நூன் மார்பர் என்றது பிள்ளையாரைச் சுட்டியதாக உரைத்து, அதற்கேற்றவாறு உரை முடிபு கொண்டது இராமநாத செட்டியார் குறிப்பு. பொறையணி - பொறை - சாந்தம்; பொறையினையே அணிகலமாக மேற்கொடொழுகுதல் முனிவர்களின் தன்மை.
|
|
|