அருப்புமென் முலையி னார்த மணிமலர்க் கைப்பி டித்தங் கொருப்படு முடைய பிள்ளை யார்திரு வுள்ளந் தன்னில் "விருப்புறு மங்கி யாவார் விடையுயர்த் தவரே" யென்று திருப்பெரு மணத்தை மேவுஞ் சிந்தையிற் றெளிந்து செல்வார், | 1241
| (இ-ள்) அருப்பு...பிள்ளையார் - அரும்புபோன்ற மெல்லிய தனங்களையுடைய அம்மையாரது அழகிய மலர்போன்ற கையினைப் பிடித்துக் கொண்டு அங்கு ஒருப்பட்ட பிள்ளையார்; திருவுள்ளந்தன்னில்...தெளிந்து - தமது திருவுள்ளத்தின் கண் "விருப்பம் பொருந்தும் அக்கினியாவார் இடபக் கொடியை உயர்த்திய சிவபெருமானேயாவர்" என்று திருநல்லூர்ப் பெருமணத்தினைப் பொருந்திய மனத்திலே தெளிந்தமையினாலே; செல்வார் - செல்வாராய், (வி-ரை) அருப்பு - அரும்பு போன்ற; அரும்பு என்பது அருப்பு என நின்றது. அரும்பு போன்ற முலை என்றது மணமகளின் பன்னிரண்டு வயதாகிய இளம்பருவங் குறித்தது; "பொடிக்கின் றிலமுலை" (திருக்கோவை) என்ற கருத்துக் காண்க. அருப்பு மென்முலையினார் - மணமகளாராகிய அம்மையார். ஒருப்படும் - எண்ணத்துட் கொண்டு அதற்கேற்ப முயலும். ஒருப்படும் - உள்ளந்தன்னில் - தெளிந்து - என்று கூட்டுக; இதுவரையில் தாம் இசைந்திருந்து செய்த மணவேள்விச் சடங்கினையே பற்றி எரிவலங்கொள்ளுதலையும் மேற்கொண்டு எண்ணி ஒருப்பட்டு அதற்காகத் தேவியாரது கையினைப் பற்றிய பிள்ளையாரது திருவுள்ளத்தில் அந்நிலையில் - அக்கணத்தில் - திருவருளால் ஒரு கருத்துத் தோன்றித் தெளிதல் நிகழ்ந்தது என்பதாம். அக் கருத்தாவது "இங்கு எரிவலம் வர ஒருப்பட்டு எழுந்து கைப்பற்றியது மந்திர வேள்வித் தீயாகி யிங்கு முன் காணப்பட்ட எரி; ஆனால் அதற்கேற்ப விருப்புறும் எரியாவார் சிவபெருமானே யாவர் என்றதாம்; மேல்வரும் பாட்டுப் பார்க்க. விருப்புறும் அங்கி ஆவார் விடையுயர்த்தவரே - "எரியலா லுருவ மில்லை யேறலா லேற லில்லை" (தேவா) என்றபடி அங்கி - எரி - இறைவரது திருமேனி (மண் - நீர் - தீ - கால் - வான் - ஞாயிறு - மதி - உயிர்); "நிலநீர் நெருப்புயிர் நீள் விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்" (திருவா) என்றவாறு மண் முதலிய எட்டும் அட்டமூர்த்தம் எனப்பட்டு இறைவரது திருமேனிகளாம். ஆனால் அவற்றுள் எரி சிறந்தது; என்னை? மண்ணும் நீரும் தாழ்ந்தவை; காற்றும் விசும்பும் கண்ணாற் காணப்படாதவை; ஞாயிறு - மதி இவற்றுள் இறைவரது உருவம் உள்ளுறையாய் நிலவுவதன்றி வெளிப்படக் காணப்படுதலில்லை; எரியிலே சிறப்புறக் காணப்படும். அக்கினி சொரூபன் உருத்திரன்; அவரே சங்காரகர்த்தாவும் மீளச் சிருட்டிகர்த்தாவுமாவர். விருப்புறு - இனி, இங்கு எரி இறைவரது திருமேனியேயாவது. இறைவர் இத்திருமேனியினுள்ளே பாலி னெய்போல விளங்காது மறைந்து நிற்பர்; விரும்பி வெளிப்பட நிற்குமிடம் குருவடிவும் சிவாலயமும் திருவேடமும் ஆகிய இவைகளேயாம் என்ற உண்மைநூற் கருத்தின் குறிப்பும் காண்க; தாம் விரும்பும் என்றும், உலக முய்வதனையே விரும்பும் என்று உரைக்கவும் நின்றது. திருப்பெருமணத்தை மேவும் சிந்தையிற் றெளிந்து - திருப்பெருமணத் திருக்கோயிலினை மேவுஞ் செயலைத் தெளிந்து என்பது; மேவும் - மேவும் செயல்; செயல் என்பது சொல்லெச்சம். தெளிந்து - தமது திருவுள்ளத்தில் தெளிவு கொள்ளப்பெற்று; இது திருவருட்குறிப்பினா லாகியது. திருப்பெருமணத்தை மேவும் - இறைவர் எங்குமுள்ளவர்; எரியினிற் காண வேண்டில் இங்குத் தியானம் மந்திரம் கிரியை மூலமாக வரச்செய்து வளர்க்கப்பட்ட மணவேள்வித் தீயினிடத்திலும் உள்ளார்; எனின் பிள்ளையார் "அங்கியாவார் விடை யுயர்த்தவரே" என்று திருப்பெருமணக் கோயிலுக்குச் சென்றதென்னையோ? எனின், பகுப்பின்றிச் சடசித்துக்கள் எங்கணும் பரமேசுரனெனக் காண்டல் மெய்யுணர்வுடையார்க்குப் பொருத்தமுடைத்தாயினும் அவ்விறைவன் குரு இலிங்கம் சங்கமம் என்ற மூன்றிடங்களில் பிரகாசமாய் விளங்கி நின்றே மற்று அல்லாத இடத்து அப்பிரகாசமாய் நிற்றலால் திருக்கோயிலினுள் திருமேனியைப் பற்றி வழிபடல் சிறப்புடைத்தாம். "அகண்டமுந் தைவமே, (யாயினும்) அத்துவிதி! அன்பிற்றொழு"(போதம் - 12-4) (சடசித்துக்கண் முழுவதும் அத் தேவனது வடிவேயாயினும் அவற்றுள் அன்பு விளையுமிடத்தில் வழிபடுவாயாக; அவ் வத்துவித சித்தாந்தத்தைப் பெற்றுடையோய்! - மாபாடியம்) என்று ஆணையிட்டமை கருதுக; பசுவின் உடல் முழுதினும் பால் நிறைவுற்றிருப்பினும் முலையினிடத்து விம்மி ஒழுகுவதுபோலத் திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேயினன்றி வெளிப்பட அருளுமாறில்லை யாதலின் அடிப்பட்டுவரும் அன்பு மற்றிடத்து விளையாது என்ற உண்மை காண்க. இனி, ஈண்டு மந்திரமுறையா லுய்த்த வேள்வித் தீயில் இறைவன் அந்நிலையில் வெளிப்பட்டது உண்மையே யாயினும், விறகில் உள்ள தீயானது கடைந்தபோது விளங்குவதாய் அல்லுழி விளங்குவதன்று; அதுபோல, அதுவேதானாய்க் காணும் ஆற்றலில்லாதவர்க்குத் தம்மால் அறியப்பட்டதொரு மந்திர சாந்நித்திய மில்லாதவழி ஆண்டு விளங்காதுநின்று அம்மந்திர சாந்நியத்தால் விளங்கித் தோன்றும் பொருளாம். அவ்வாறன்றி அதுவேதானாய்க் காணப்பெறும் உண்மைத் தவமுடையார்க்கு எப்போதும் அப்படியே விளங்கித் தோன்றுவான் இறைவன். இங்குப் பிள்ளையார் அவ்வாறு உண்மை முன்னைத்தவ முடையாரன்றோ? எனின், அஃதுண்மையே! பிள்ளையார் உலகில் வந்து செய்தருளியவை யெல்லாம் அத் தவவலிமை பெறாத உலகினர்பொருட்டே யன்றித் தம்பொருட்டன்று என்பது நினைவு கூர்தற்பாலது. அன்றியும், இங்கு வளர்த்த வேள்வித்தீயானது இத்திருமணத்தின் பொருட்டுச் சங்கற்பித்து ஆவாகன முறையால் "வெளிப்பட வருக" என்று அழைத்துக் கொணரப்பட்டும், பின்னர் உத்தியாபன முறையால் "மறைந்து நிற்க" என ஒடுக்கம் செய்து எழுந்தருளச் செய்யப்பட்டும் நிகழ்வது; திருக்கோயிலில் அவ்வா றன்றி நித்திய சாந்நித்ய விளக்கமாய் இறை வெளிப்பட வீற்றிருத்தலும் கருதுக. பிள்ளையார் இப்போது மேற்கொண்ட செயல் ஈண்டுச் சங்கற்பித்த மணநிறைவாதலன்று; நித்திய மங்கலமாக சிவ நிறைவினுள் அனைவரையும் புகச் செய்து தாமும் எழுந்தருளும் செயலாதலின் அதற்கேற்ற இடம் மணத்தின் பொருட்டு வளர்த்த தீயினன்றித் திருப்பெருமணக் கோயிலேயாம் என்பதுமாம். அன்றியும், "எண்ணிறந்த கடவுளருக் கிடுமுணவு கொண்டூட்டும், வண்ண வெரி வாயின்கண் வைத்ததென"(796) என்றபடி இங்கு மந்திர முறையால் உய்த்த வேள்வித் தீயானது தன்பால் உய்த்த ஆகுதிகளை உரிய தெய்வங்களிடம் கொண்டு செலுத்தும் வழியாவதன்றி மற்றில்லை என்பதும், இது பிள்ளையார் பணியில் நிற்கும் தகுதியுடைய தென்பதும் கருதுக. "சுடர், பைய வேசென்று பாண்டியற் காகவே" என்ற பதிகக் குறிப்பினையும் இங்கு வைத்து நினைவுகூர்க. இக்குறிப்புக்க ளெல்லாம் பெற, மேல்வரும் பாட்டுக்களில் "மந்திர முறையாலுய்த்த வெரிவல மாக...கை, பற்றும் செங்கை யாளர்..."(3140); "ஞானத்தெல்லை யடைவுறுங் குறிப்பால்...கிடையும் கூட்டமும் சூழ - உடன்அணைந் தருள வேண்டிக் கோயிலை நோக்கி வந்தார்"(3141) என்று வருவனவும், பிறவும் காண்க. தெளிந்து - இத்தெளிவு முன் ஆரும் பெறாத அறிவினால் ஆகியது என்க. தெளிந்த வழிச் செயல் நிகழ்ந்தமையும் காண்க. செல்வார் - செல்வாராகிக் - கோயிலை நோக்கி வந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க (3141).
|
|
|