பாடல் எண் :3141
மலர்பெருங் கிளையுந் தொண்டர் கூட்டமு மல்கிச் சூழ
அலகின்மெய்ஞ் ஞானத் தெல்லை யடைவுறுங் குறிப்பா லங்கண்
உலகினெம் மருங்கு நீங்க வுடனணைந் தருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தங் கோயிலை நோக்கி வந்தார்.
1243
(இ-ள்) மலர்பெரும்...சூழ - மலர்ச்சி பொருந்திய பெருங் கிளைஞரும் திருத்தொண்டர் கூட்டமும் ஆகிய இவர்களுடனே கூட; அலகில்...குறிப்பால் - அளவில்லாத மெய்ஞ்ஞானத்தின் எல்லையினை யடையவேண்டும் என்ற உட்குறிப்பினாலே; அங்கண்...நீங்க - அவ்விடத்து உலகின் எப்பக்கங்களும் தம்மைச் சாராது நீங்க; உடன் அணைந்தருள வேண்டி - இறைவருடனே அணைந்தருள விரும்பி; குலமணம்...வந்தார் - மறையவர் குலத்துக்குரிய மணத்தினைச் செய்வித்தருளிய இறைவரது திருப்பெருமணம் என்னும் திருக்கோயிலினை நோக்கி எழுந்தருளி வந்தனர்.
(வி-ரை) மலர்...சூழ - அடைவுறும் குறிப்பால் - என்று கூட்டுக; சுற்றத்தாரும் தொண்டர்களும் ஆகிய இவர்களெல்லாருடனே கூட எல்லையினைச்சேர்தல் வேண்டுமென்ற திருவுள்ளக் குறிப்பினாலே என்க; மலர்தல் - மன மகிழ்தல்.
அலகில் மெய்ஞ்ஞானத் தெல்லை அடைவுறும் - அளவுபடாத மெய்ஞ்ஞானமாவது சிவஞானம்; அதன் எல்லையாவது அதன்மேல் விளங்கும் சிவானந்த நிறைவு. சிவனுலகம். "உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்" (1075); "அலகில் கலையின்பொருட் கெல்லையாடுங் கழலே"(1220) என்றவை காண்க. குறிப்பால் - திருவருட் குறிப்பினாலே தோன்றிய தமதுள்ளக் குறிப்புக் காரணமாக.
உலகின் எம்மருங்கும் நீங்க உடனணைந் தருள - தாம் ஒரு பற்றுமின்றிச் சீவன் முத்தநிலையிலிருந்தாரேனும் உலகைத் தீமை நீக்கி நன்னெறி காட்டி உய்வித்தற் பொருட்டுத் திருவருளால் வந்தாராதலின் அந்த அளவில் கொண்ட உலகத் தொடர்புகள் எல்லாமும் நீங்கிச் சிவனடியே மறவாத நிலையில் சிவனுடன் அணைய விரும்பி. கிளையும் - கூட்டமுஞ் - சூழ - நீங்க - உடனணைந்தருள வேண்டி என்று கூட்டியுரைத்தலுமாம்.
குலமணம் புரிவித்தார் - அந்தணரது மறையொழுக்கத்தை உலகிற் காட்டும் பொருட்டு அக் குலத்துக்கேற்ற மண ஒழுக்கத்தை மேற்கொள்ளும் இசைவு வரக் கூட்டுவித்தருளிய இறைவர் என்பது; தம் செயல் என்ப தொன்றுமின்றி எல்லாம் இறைவர் செயலேயாகக் காண்பது பிள்ளையாரது நிலையாதலின் தாம் மண இசைவு கொண்டதனை இறைவர் தந்த செயலேயாகக் கொண்டனர் என்க; "அவனே தானேயாகிய வந்நெறி, ஏக னாகி யிறைபணி நிற்க"(போதம்) என்ற ஞானநூற் றுணிபின்வழிக் கண்டுகொள்க.
இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.