பாடல் எண் :3142
சிவனமர்ந் தருளுஞ் செல்வத் திருப்பெரு மணத்தை யெய்தித்
தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
"பலமற வென்னை முன்னா ளாண்டவப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டு" மென்னுநல் லுணர்வு நண்ண,
1244
(இ-ள்) சிவனமர்ந் தருளும்...எய்தி - சிவபெருமான் விரும்பி வீற்றிருந்து உயிர்கட் கருள்புரியும் செல்வ நிறைந்த திருப்பெருமணக் கோயிலினுள் சென்று சேர்ந்து; தவநெறி..நோக்கி - தவநெறியினை வளர்ப்பதற்கென்றே திருவவதரித்தவராகிய பிள்ளையார் உலகக் காட்சி நீங்கிய முத்தி நிலையிலே சார்வதற்குக் காரணமாகிய திருவருட் குறிப்பினைக் கண்டு; பவமற...கூட - பிறவியில் வாராது என்னை முன்னைநாளில் தமது திருவடியில் ஆளாகக் கொண்ட அத்தன்மைக்குப் பொருந்த; நவமலர்...நண்ண - புதிதின் அலர்ந்த தாமரைமலர் போன்ற திருவடியை அடைவிக்கும் என்னும் மெய்யுணர்வானது திருவுள்ளத்தில் பொருந்த; (வி-ரை) வந்தார் - எய்தி - நோக்கி - நண்ண (1244) - எடுத்துக் - கொண்டு - பாட (2545) - தேவர் - அருள் புரிந்து - என்று - ஆகி(1246) - காட்ட - மன்னர் - போற்றி - அருளிச் செய்வார்(1247) - அருள் செய்து - என்ன (1248) - மயங்குவார்கள் - புக்கார் (1249) என்று இந்த ஆறு திருப்பாட்டுக்களையும் கூட்டி முடித்துக் கொள்க.
திருப்பெருமணம் - கோயிலின் திருப்பெயர். நல்லூர்ப் பெருமணம் - நல்லூரில் உள்ள பெருமணம் என்ற கோயில்; சாந்தை அயவந்தி - கருவூர் ஆனிலை என்பன போலாம்; நல்லூர் - ஊர்ப் பெயர்.
தவநெறி வளர்க்க வந்தார் - பிள்ளையார்; அவரது திருவவதார உள்ளுறையாவதிது என்றவாறு; தவநெறி - சிவநெறி; இதனால் மணஞ் செய்துகொண்டு உலகில் வாழ்தல் அவர் வந்த காரியமன்று என்பது குறிப்பு.
தலைப்படும் சார்வு நோக்கி - அவ்வுள்ளுறை முற்றுப்பெற்று முத்தி நிலையினைக் கூடும் பருவம் சார்ந்ததனை உள்ளுற உணர்வினில் சிவனுணர்த்தக் கண்டு; நோக்குதல் - உள்ளுறக் கருத்தில் ஊன்றிக் காணுதல்; தலைப்படுதல் - சேர்தல்; "தலைப்பட்டார் தீரத் துறந்தார்" (குறள்); "தலைப்பட்டா ணங்கை தலைவன்றாளே"(தேவா). சார்வு - சாரும் இடமும் காலமும்; "சார்புணர்ந்து" (குறள்).
பவமற...கூட - பவம் - பிறவி. முன்னாள் ஆண்ட - முன்னை நிலையில் ஆட்கொண்டருளிய; பிரமதீர்த்தக் கரையில் மூன்றாம் வயதில் ஆண்டருளிய என்று உரைப்பாருமுளர். அப்பண்பு - அந்த நிலை; கூட - பொருந்த; இதனால் பிள்ளையாரது முன்னை நிலையின் தன்மை விளங்குவதும், முருகப் பெருமானே பிள்ளையாராய் வந்தார் என்பார் கூற்றுச் சிறிதும் பொருந்தா தொழிவதும் கண்டுகொள்க. முன்னாளாண்ட அப் பண்பின்நிலை - "பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர்" (1953); என்றவிடத்தும், பிறாண்டும் உரைக்கப்பட்டது கடைப்பிடிக்க. "மறக்குமா றிலாத வென்னை"(தேவா) என்ற பிள்ளையார் திருவாக்கும் நினைவுகூர்க; அப்பண்பு கூட - இடையில் இவ்வுலகில் வந்து அவதரித்தது முதல் இதுகாறும் நின்ற இப்பண்பு நீங்க; வேறொன்றும் காணாது சிவனையே நினைந்து ஒன்றியிருக்கும் பண்பே வந்து பொருந்த என்க. கூட - கூடும்படி; பவமற - மையல் செய்திம் மண்ணின் மேற் "பிறக்கு மாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட், டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்கு கின்ற தென்னையே!"(தேவா).
நவமலர்ப் பாதம் - நவம் - புதிது; அனுபவிக்குந்தோறும் புதிது புதிதாயிருக்கும் தன்மை; இது சிவானந்தத்தின் பண்பு.
கூடக் - கூட்டும் - கூடும்படி கூட்டும் என்பது கூட்டினாலன்றிக் கூடலரிது என்பதாம்.
நல்லுணர்வு நண்ண - சார்வு நோக்கியதனால் இவ்வுணர்வு நண்ணிற் றென்பது; நல்லுணர்வு - நன்மைகட் கெல்லாம் பெரு நன்மையாகிய வீடுபேறு பற்றிய உணர்வு.
முன்னை நாளில் ஆட்கொண்டு பிறவியில் வாராது அருளிய பண்புபோல, அதனின் மேலாய் இனிப் பிறவியில் என்றும் வாராத நிலை பொருந்த என்பது கூட - என்றும், நவமலர்ப் பாதம் என்றும் வரும் சொல்லாற்றற் குறிப்பு. இதன் முன்னும் அப்பாதத்தையே சீவன் முத்தி நிலையிற் கூடியிருந்தா ராயினும் அது திருமேனி தாங்கிப் பிறர்க்கருள உலகில் நின்ற நிலை. இனி அப்பண்பு கூடப் - பாதங் கூட்டும் என்றதனால் அந்நிலையினின்றும் மாறாத சிவா நுபவமே மருவிக்கொண்டிருக்கும் பண்பு குறிக்கப்பட்டது. நல்க - என்பதும் பாடம்.