காதன்மெய்ப் பதிகங் "கல்லூர்ப் பெருமண" மெடுத்துக் கண்டோர் தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு "நாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்ப னே!யுன் பாதமெய்ந் நீழல் சேரும் பருவமீ" தென்று பாட, | 1245
| (இ-ள்) காதல்...எடுத்து - பெருவிருப்பு மேற்கொண்ட மெய்த் திருவாக்காகிய திருப்பதிகத்தினைக் "கல்லூர்ப் பெருமணம்" என்று தொடங்கி; கண்டோர்...கொண்டு - அங்கு அத் திருமணத்தைக் கண்டவர்களது தீங்குடைய பிறவிக் கேதுவாகிய மலமாயை கன்மங்களைத் தீர்ப்பதனைச் செம்மைப் பொருளாகத் திருவுளம் பற்றி; "நாதனே..ஈது" என்று பாட - "இறைவரே! திருநல்லூரில் பொருந்திய திருப்பெருமணக் கோயிலின்கண் எழுந்தருளிய நம்பரே! உமது திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய நீழலினை அடையும் பருவம் இதுவேயாம்" என்று பாடியருள, (வி-ரை) காதல் மெய்ப் பதிகம் - காதல் மிக மேற்கொண்டு எடுத்து என்க; விருப்பம் இறைவர் நவமலர்ப் பாதங் கூட்டும் என்ற நல்லுணர்வு பெற்றமையால் மிகுந்து வந்தது; மெய்ப் பதிகம் - மெய் - சத்து; இறைவரது திருவாக்காகிக் குறித்த பயனைத் தரும் தன்மை. கல்லூர்ப் பெருமணம் - இது பதிகத் தொடக்கம். கண்டோர் - திருமணத்தைக் கண்டு தெரிசித்தோர்; இறைவரது அருட்கண்ணின் குறிப்பினாற் காணப்பட்டோர் என்ற குறிப்புமாம். தீதுறு பிறவிப் பாசம் - தீதுறு - பாசம் என்றும் கூட்ட நின்றது; தீதுறு பிறவி - பிறவியானது மையிற் செலுத்தி மேலும் மேலும் பிறவிகளிற் செலுத்துதல் குறிப்பு. "மையன் மானுடமாய் மயங்கும்" என்றது காண்க. கண்டோர் பாசந் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு - செம்பொருள் - செம்மையாகிய - செப்பமாகிய - பொருள்; உட்கருத்து. தாம் சிவன்றாள் சேர்தலாகிய கருத்து முற்பட்டெழுந்த தாயினும், தாம் தமது தேவியுடனும் கிளைஞர் தொண்டர் இவர்கள் சூழ உடன் அணைதல் அதனுடன் உள்ளூற எழுந்த கருத்து; தம்மைப் பவமற முன்னா ளாண்டமையினாலும், சிவஞானம் பெற்றமையினாலும், பாசமற்றிலராதலின் தம் பொருட்டுத் தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் பொருளாகக் கொண்டு திருப்பதிகம் விண்ணப்பித்தல் அத்துணை வேண்டப்படாது, மணங் கண்ட ஏனையோர் பொருட்டுத் தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தலே மிகவும் வேண்டப்படுவதாயிற்று"; "சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்"; "எமைப் போக்கருளீரே"; "நல்லூர்ப் பெருமணத் தானை, யுறும்பொருளாற் சொன்னவொண் டமிழ்" என்ற பதிகக் கருத்துக்கள் காண்க. நாதனே...நம்பனே! - நாதன் - இறைவன். இறைமைத் தன்மையினால் ஆட்கொள்ளுதல் கடன் என்பது; "தம்மை யடைந்தார் வினைதீர்ப்ப தன்றோ தலையாயவர்தங் கடனா வதுதான்" (தேவா); நல்லூர் மேவும் பெருமண நம்பனே! - "நல்லூர்ப் பெருமண மேயநம் பானே" என்ற பதிகப் பொருளும் சொல்லும் போற்றப்பட்டது காண்க. நம்பன் - நம்பி அடையத் தக்கவர். உன்பாத மெய்ந்நீழல் சேரும் பருவம் ஈது- பாதம் அடைந்தாரது பிறவி வெப்பத்தை மாற்றுதலின் நீழல் என்றுபசரிக்கப்படும். மெய் - நித்தியமாவது; சத்தாகி என்றும் அழிவில்லாதது; பருவம் ஈது - பக்குவ முதிர்ச்சி பெற்ற உரிய காலம் இது; பதிகக் கருத்தும் குறிப்பும் காண்க. திருமணங் காண வந்த அத்துணை மக்களுக்கும் ஒருசேரத் திருவடி நீழல் சேரும் பருவம் கூடுமோ? எனில், கூடும் என்க; "பயில்வித் தெல்லாம், காரிட மதனிற் காட்டு மங்குரங் கழியும் வேனில்"(சித்தி - 1-9); இங்குச் சிவஞான குருமூர்த்திகளின் பாவனை - பார்வை - அருண்மொழி - முதலிய தீக்கைகளாற் பாச நீங்கப் பெற்று முத்தி பெறும் பக்குவமுடைய உயிர்களே திருமணங் காண வந்து கூடினர் என்க. இக்குறிப்புப் பின்னர்த் "தெள்ளுநீ ருலகத்துப் பெற்றிலார் தெருமந்தார்"(3152) என்று மேலும் வற்புறுத்தப்பெறுதல் காண்க."கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ - அடைவுறுங் குறிப்பால்" (3141) என்றபடி பிள்ளையார் இவ்வாறுள்ள பக்குவம் அவர் அனைவர்க்கும் கூடிய நிலையினைத் திருவருட் குறிப்பினாலறிந் தருளினர் என்க. பருவம் - "காலமுங் கடவு ளேவலாற் றுணைக்காரணங் காண்"(சித்தி - 1) என்றபடி இறைவனாணையின் வழியே உயிர்கள் வீடு பெறுதற்கு உரிய கால தத்துவமும் துணையாதல்பற்றிய குறிப்பு. அதற்குரிய கடவுளேவல் மேற்பாட்டிற் கூறுவார். பாட - அருள் புரிந்து என்று மேற்பாட்டுடன் கூட்டுக. அருள் புரிந்த வகையாலும் பிள்ளையார் ஏனையோரது பிறவிப் பாச நீக்கங் கருதி விண்ணப்பித்துப் பாடினர் என்பது தெளியப்படும். பதமிதுவென்று பாட - என்பதும் பாடம்.
|
|
|