தேவர்க டேவர் தாமுந் திருவருள் புரிந்து "நீயும் பூவையன் னாளு மிங்குன் புண்ணிய மணத்தில் வந்தார் யாவரு மெம்பாற் சோதி யிதனுள்வந் தெய்து" மென்னு மூவுல கொளியால் விம்ம முழுச்சுடர்த் தாணு வாகி, | 1246
| (இ-ள்) தேவர்கள்...புரிந்து - தேவர்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரும் திருவருள் செய்து; "நீயும்...எய்தும்" என்று - "நீயும் பூவைபோன்றவளாகிய உனது மனைவியும், இங்கு உனது புண்ணியத் திருமணத்தில் வந்தவர்கள் எல்லாரும் எம்மிடத்தில் இந்தச் சோதியினுள்ளதாக வந்து அடையுங்கள்" என்று கட்டனை யிட்டருளி; மூவுலகு.,..தாணுவாகி - மூன்றுலகங்களும் தம் ஒளியினாலே மேலிட்டு விளங்கும்படி முழுமையாகிய சுடர்விட்டெழும் சோதிலிங்கமாக நிமிர்ந்து எழுந்து; (வி-ரை) திருவருள் புரிந்து - முன்பாட்டிற் கூறியபடி பிள்ளையார் செய்த முத்தி விண்ணப்பத்திற்குத் திருவருள் செய்து. "நீயும்...எய்தும்" என்று - இஃது இறைவர் அவ்விண்ணப்பத்தின்படி கைகூடுமாறு அருளிய திருவாக்கு; "எமைப்போக் கருளீரே" என்று வேண்டிய பிள்ளையாரது வேண்டுதலை இறைவர் ஏற்றுக் கொண்டு "எமது பாதநீழல் சேரும்படி தரும்பரிசு இது" என்றபடியாம். பூவையன்னாள் - பிள்ளையாரது தேவியார்; பூவை - நாகணவாய்ப் புள்; இது பேச்சு, அழகு, இயல் முதலியவற்றால் பெண்களுக்கு உவமிக்கப்படும். இங்கு உன்...யாவரும் - வந்தார் - வரும் பேறு பெற்றார்; புண்ணிய மணம் - உலகில் ஏனையோர்களது மணம்போலப் பாசத் தொடங்குக் கேதுவாகாது சிவபுண்ணியப் பயன் பயக்கும் மணம்; யாவரும் - மேல் திருநீலநக்கர் முதலாக (3148) வீடு பெற வந்தாரும் (3150) என்றவரை விரித்து எல்லாரும் என்று முடித்த நிலை காண்க; உம்மை முற்றும்மை. சோதி யிதனுள் வந்து - எம்பால் - எய்தும் என்று கூட்டுக. சோதியிதனுள் - யாம் இனி இங்குக் காட்டும் இந்த சோதியின் உள்ளே; சோதியின் வாயிலின்மூலமாக. எம்பால் எய்தும் என்றது விண்ணப்பித்தபடி பாதமெய்ந் நீழலில் வந்தடைக என்றதாம். எய்தும் - எய்துவீராக; முன்னிலைப் பன்மையேவல். என்று - என்று அசரீரிவாக்கினால் அருளிச் செய்து. மூவுலகு - மேல் - நடு - கீழ் என்ற மூன்றுலகங்களும்; முற்றும்மை தொக்கது. ஒளியால் விம்முதல் - சிவஞான வொளியின் பெரிய பிழம்பினாலே ஒளிபெற்று மேலோங்கி விளங்குதல். முழுச்சுடர்த் தாணு - முற்றிய சுடர் விளங்கும் தூண்; "சோதியே சுடரே சூழொளி விளக்கே"(திருவா); தாணு - நிலைபெறத் தாங்கும் தூண்போல்பவர்; "மாசொன் றில்லாப் பொற்றூண்காண்"(தேவா).
|
|
|