பாடல் எண் :3145
கோயிலுட் படமே லோங்குங் கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட, மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின வொளியா னீடு பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞால முய்ய வழியினை யருளிச் செய்வார்,
1247
(இ-ள்) கோயிலுட்பட...காட்ட - திருக்கோயில் தன்னகத்துட்பட மேலே விரிந்து பெருகி எழும் அந்தச் சோதியினுள்ளே ஒரு திருவாயிலினையும் வகுத்துக் காட்டியருள; மன்னுசீர்...போற்றி - நிலைபெற்ற சிறப்பினையுடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார், பரவிய பேரொளியினாலே நீண்டு விளங்கும் பரஞ்சுடராகிய இறைவரைத் தொழுது துதித்து; மாயிரு...செய்வார் - மிகப் பெரிய உலகத்தின்கண் உள்ள ஆன்மாக்கள் உய்யும் வழியினை அருளிச்செய்வாராகி;
(வி-ரை) கோயிலுட்பட...சோதி - முன்கூறிய முழுச்சுடர்த் தாணுவானது கோயில் தன்னுட்பட ஓங்கியபடியாக விளங்கும் சோதியாய் நின்றதென்க.
வாயிலை வகுத்துக் காட்ட - ஒளி பெருகும் சோதியளவில் அமைந்துபட்டால் யாவரும் அதனுட் புக அஞ்சி ஒதுங்குவராதல்ன் சாதியின் உள்ளே புகும் வாயிலினையும் இறைவரே வகுத்துக் காட்டி யருளினர். எங்கும் எல்லாம் சிவஞான நிறைவே யாயினும் இறைவர் வேத முதலியவற்றால் நெறிவகுத்துக் காட்டி யருளினல்லது உயிர்கள் உணர்ந்து நன்னெறி செல்லுதல் இயலாதவாறு போல, ஈண்டு இறைவரே சோதியாகிய தம்பால் பக்குவான்மாக்கள் வந்தடையும் வாயிலினையும் வகுத்துக் காட்டியருளினர்.
புகலி மன்னர் - உய்ய வழியினை அருளிச் செய்வார் - வாயில் வகுத்துக் காட்டப்படினும் அதுவே வாயில் என அறிதலும், அதில் செல்லும் வழியும் தகுதியும் அறிதலும் காரணகுரு கைகாட்டி னல்லது கூடாதாதலின் புகலி மன்னர் அதனுட் புகும் வழியினைக் காட்டி உபதேசித் தருளுவாராகி என்க. இது மேல்வரும் "காதலாகிக் கசிந்து" என்ற திருப்பதிகத்தின் கருத்தும் உட்குறிப்பும் பொருளுமாம்.
கோயிலுட்பட மேலோங்கும் கொள்கையால் - சோதி வாயில் - கோயில் வாயில் வேறு - சோதிவாயில் வேறு. கோயில் முழுதும் சோதியினுட்பட்டு வெளிக் காணப்படாதாயிற்று; இப்போது காணப்பட்டது சோதிவாயில் ஒன்றுதான். கோயில் வாயிலானது சாதனவகை யளவில் நிற்பது. "ஆலயந் தானும் அரனெனத் தொழுமே"(போதம். 12); இச் சோதிவாயில் அவ்வாறன்றிச் சாத்தியப் பொருளாகிய அரனேயாக நிற்பது. கோயில் வாயிலினுட் புகும் வழியில் வேதாகம புராணங்களுட் பேசப்படும். ஆனால் அரனேயாகிய பேரொளிச் சோதி வாயிலினுட் புகும் வழியினை முன்னர் உயிர்கள் அறியாவாதலின் எடுத்து அருளிச் செய்வாராயினர் பிள்ளையார் என்க. இவ்விரண்டும் வெவ்வேறென்பது "பெருங்கூத்தர் கொள்ளநீ டியசோதிக் குறிநிலை யவ் வழிகரப்ப, வள்ளலார் தம்பழய மணக்கோயில் தோன்றுதலும், தெள்ளுநீ ருலகத்துப் பெற்றிலார் தெருமந்தார்" (3152) என்று பின்னர் எடுத்துக் கூறுமாற்றால் இனிது விளங்கும்.
பாயின ஒளி; மூவுலகும் தனது ஒளியால் விம்ம முழுச்சுடர்த் தாணுவாகிப் பரந்த பெருஞ் சிவவொளி; பாயின - பரவின.
பரம் சுடர் - எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சுடர்.
பரஞ்சுடர்த் தொழுது போற்றி - ஞாலம் உய்ய வழியினை யருளிச்செய்வார் - பக்குவ ஆன்மாக்களுக்குத் தீக்கை செய்து முத்திக்கு வழிகாட்டும் ஆசாரியர் முதலில் சிவனைத் தியானித்துத் துதித்து, இறைவரே! பக்குவமுடைய இம்மாணவனுக்குத் தீக்கை செய்து வழிப்படுத்த எனக்கு அருள் செய்வீராக என்று போற்றிப் பின்னரே அதனிற்றுணிக என்ற சிவாகம விதி இங்கு நினைவு கூர்தற்பாலது.
மாயிரு ஞாலம் - மா - இரு - ஒருபொருட் பன்மொழி; மிகப் பெரிய என்க. யகர வுடம்படுமெய் புறனடையாற் கொள்க. "மாயிரு ஞாலமெல் லாம்" (தேவா) என்புழிப்போல. மாயிருண் ஞாலம் என்பது பாடமாயின் பெரிய வலிமையுடைய இருண்மலம் என்னும் மூலமலமாகிய ஆணவமலத்தாற் கட்டுண்ட உலகத்துயிர்கள் என்க. முத்தியினும் அறாது வலியிழந்து நிற்கும் மூலமலத்தின் வலிமை குறித்தபடி; மாய் இருள் - முத்தியில் வலிகெட்டு மாயும் இருள் என்றலுமாம்.
வழி - வாயிலை இறைவர் காட்ட அதனுட் புகும் வழியினைப் பிள்ளையார் அருளினர் என்பது. வழியாவது புகும் தகுதி நிலைகள். பின்னர் "நெறி" (3146) என்பது காண்க. வழி பதிகத்துட் காண்க.
அருளிச் செய்வார் - பாவனை - பார்வை - உபதேசச் சொல் என்ற தீக்கை வகைகளை எல்லாம் அருள்வாராகி என்க; முற்றெச்சம். அருளிச் செய்வார் - அருள் செய்து - என்ன - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.