பாடல் எண் :3146
"ஞானமெய்ந் நெறிதான் யார்க்கு நமச்சிவா யச்சொ லா"மென்
றானசீர் நமச்சி வாயத் திருப்பதி கத்தை யங்கண்
வானமு நிலனுங் கேட்க வருள்செய்"திம் மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக!" வென்ன,
1248
(இ-ள்) "ஞான....சொலாம்" என்று - மெய்யினையுடைய ஞானநெறி தான் எல்லாருக்கும் "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தாகிய மொழியேயாகும் என்று; ஆனசீர்..அருள் செய்து - ஆக்கம் பொருந்திய சிறப்பினையுடைய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அவ்விடத்திலே விண்ணவரும் மண்ணவரும் கேட்கும்படி அருளிச்செய்து; "இம்மணத்தில்...புகுக" என்ன - "இந்த மணத்தில் வந்தவர்கள் எல்லாரும் இழிவுபடுத்தும் பிறவி நீங்க இதனுள் புகுவீர்களாக" என்று ஆணையிட்டருள,
(வி-ரை) "ஞான மெய்...சொலாம்" என்று - இது பதிகக் கருத்தும் குறிப்புமாம். ஞான மெய்ந்நெறி - சிவஞானத்தினாலன்றி அடையவொண்ணாத வீட்டுநெறி; "ஞாலமுய்ய வழியினை அருளிச் செய்வார்"(1247) என்றமையால் இங்குக் கூறிய மெய்ந்நெறி உயிர்கள் உய்யும் வழி என்பதாயிற்று.
மெய் - மெய்ப்பொருள்; சத்து; அழிவில்லாதது; இறைவர். மெய்ந்நெறி - மெய்யினை அடைதற்குரிய வழி. தான்- என்றது இதுவேயன்றிப் பிறிதில்லை என்ற பொருள் தந்தது.
யார்க்கும் - எல்லாச் சமயத்தாருக்கும்; எல்லாப் பக்குவபேத முடையவர்க்கும்; எக்காலத்தும் எவ்விடத்து உள்ளவர்க்கும்; எல்லா ஞானநூல்களினும் முடிந்த நிச்சயம் என்பது.
நமச்சிவாயச் சொல்லே மெய்ஞ்ஞான நெறியாம் என்க. உயிர் பாசத்தின் நீங்கிச் சிவத்தையடைவது என்பது திருவைந்தெழுத்தின் உள்ளீடாகும்; ஆதலின் சோதி வாயிலினுட் புகுந்து இறைவரை அடையும் இந்நிலையில் சீபஞ்சாக்கரத்தின் உள்ளீடு சிந்தித் துணரற்பாலதென்பது பதிகக் கருத்து. திருவருட் சிறப்பினாலும், ஞானாசாரியரது அருணோக்கம் பாவனைகளின் அருட்சிறப்பினாலும் இதுவே சிகாராதியாகிய பஞ்சாக்கரப்பயன் தந்தது என்பது.
ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக
ஓசைகொ ளதனி னம்மே லொழித்தரு ளோங்கு மீள
வாசியை யருளு மாய மற்றது பற்றா வுற்றங்
கீசனி லேக மாகு மிதுதிரு வெழுத்தி னீடே. - (சிவப் - 92)
அந்தமா திகளி லாத வஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே. - (சிவப் - 90)
என்பன முதலியவை காண்க. இதுபற்றி முன்னர் (1391-ன் கீழும், பிறாண்டும்) உரைத்தவை யெல்லாம் ஈண்டுக் கருதுக (III - பக்கம் 162 - 163).
மெய்ஞ்ஞான நெறி - சொல் ஆம் - ஞானத்தாலன்றி வீட்டுநெறி யடைதல் இயலாதென்பதும், அந்த ஞானமாவது திருவைந்தெழுத்தாகிய ஒருசொல்லின் உள்ளீட்டினை உணர்ந்து நிற்றலேயாம் என்பதும் கருத்து.
என்று - நமச்சிவாயத் திருப்பதிகத்தை - அருள்செய்து - பஞ்சாக்கர உபதேசத்தால் ஞான நெறியினை உணரச்செய்து என்க. "தம்முதல் குருவுமாய்த் தவத்தினிலுணர்த்தவிட்டு, அன்னிய மின்மையில் அரன்கழல் செலுமே" என்ற சிவஞான போதம் எட்டாஞ் சூத்திரக் கருத்து முழுதும் ஈண்டுவைத்துக் கண்டுகொள்க. அங்குத் தவத்தினில் என்றதற்கேற்ப, ஈண்டு, முன்னைத் தவம் செய்து பக்குவமுற்ற உயிர்களே இங்குத் திருமணத்திற் சார்ந்த மக்கள் என்பதும், அவர்கள் அவ்வாறு பக்குவ முதிர்ந்து வீடுபெறத் தகுதியான பருவடைந்தவர் என்பதை இறைவனுணர்த்த உணர்ந்தமையாலே பிள்ளையார் "பாதமெய்ந் நீழல்சேரும் பருவமீது" என்று பாட அதன்படி இறைவ ராணைதந்தனர் என்பதும் அறியத் தக்கன. "மேற்சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடாவாகலான்" என்று மெய்கண்டதேவர் "ஞான மெய்ந்நெறி...சொலாம்" என்றதனையே அச்சூத்திரத்தின் கீழ் விரிவு செய்தருளினர் என்பதும் கண்டுகொள்க; ஞான நெறி - "நன்மை யெனப்படுவன வெல்லாவற்றினுஞ் சிறந்த நன்மையாவது வீடுபேறென்பது; அதனைத் தலைப்படுதற் கேதுவாய்ச் சிறந்த நெறியாகலின் ஞானம் நன்னெறி யெனப்பட்டது. வீட்டிற்கு நெறியென அவ்வச் சமயத்தாராற் கூறப்படுவன வனைத்துந் தன்கண்ணே வந்து கூட நின்ற பெருநெறி யாகலானும் அது நன்னெறிஎனப்பட்டது. நன்னெறி சன்மார்க்கம் என்பன ஒருபொருட் கிளவி...." (சிற்றுரை - போதம் - 8 - முதலதிகரணம்).
வானமும் நிலனும் கேட்க அருள் செய்து - விண்ணவரும் மண்வரும் கேட்க என்றது உச்சமாகிய நிடாதசுரத்தில் அருளினார் என்ற குறிப்பு. அங்கு நின்ற எல்லாரும் பக்குவமுற்று வீடடையும் பக்குவமணைந்தா ராதலின் எல்லாரும் கேட்க அருளினார். மாணவகன் மட்டும் கேட்கவும் ஏனையோர் கேட்க இயலாமலும் உள்ள வகையில் மந்திரம் அந்தரங்கத்தில் உபதேசிக்கக் கடவது என்னும் விதி ஈண்டுச் செல்லாமையறிக. வானிலுள்ளோர் ஒலியலைகளின் பரம்பரைமூலம் கேட்கலுற்றனர் என்பது இந்நாளின் "வானொலிக் கேள்வி" (Radio) என்று காணப்படும் கலைஞானப் பகுதியினால் விளங்கும். அவ்வாறு கேட்பினும் இங்குக் கேட்ட நிலத்தவர்போல விண்ணவர் பயன் பெறாததென்னை? எனின், பசுபுண்ணிய மிகுதியினால் மேலுலகத் திருக்கப்பெறினும், வானவர் அவ் வினைக்கழிவில் புவனியில் வந்து பிறந்து சிவபுண்ணியஞ் செய்து ஞானம் பெற்ற பின்னரே காலாந்தரத்தில் வீடுபெறுந் தகுதி வாய்க்கப் பெறுவர் என்பது ஞானநூன் முடிபு. அப்பருவம் இன்னும் வாய்க்கப்பெறாமையின் அவர்களும் இங்குத் திருமணங் கண்ட நிலத்தவர்போல வீடுபேறு பெற்றாரிலர் என்பது "தூரத்தே கண்டு, நணுகப்பெறா விண்ணவரு முனிவர்களும் விரிஞ்சனே முதலோரும், எண்ணிலவ ரேசறவு தீரவெடுத் தேத்தினார்" (3153) என்று பின்னர் ஆசிரியர் காட்டியருளுமாற்றால் அறிக. "இம்மணத்தில் வந்தோர்" என்ற குறிப்புமது. இங்கு வானுலகரும் மணங் காண வரினும் அவரெல்லாம் "மஞ்சுறை விசும்பின் மீது மணவணி காணச் சென்றார்" (3102); "மணமேற் செல்லும் பொற்பமை மணத்தின் சாயை போன்றுமுன் பொலியச் சென்றார்" (3103); "தூரத்தே கண்டு நணுகப் பெறா"(3153) என்று வருவனவற்றால் நிலத்தவர்போல "மணத்தில் வந்தோ" ராகார் என்பதாம்.
ஈனமாம் பிறவி தீர - "தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு"(3143) பாடியதற்கேற்ப இங்கு இறைவராணையின் வழிப் பதிகம் பாடியருளி அங்குற்றா ரனைவரையும் வீடு பேற்றுக்குத் தகுதி பெற்றாராக ஆக்கியமை குறிப்பு. "ஈனமாம் பிறவி" மேற்பாட்டில் விரிக்கப்படுவது.
இம்மணத்தில் வந்தோர் யாவரும் புகுக - "இங்கு உன் புண்ணிய மணத்தில் வந்தோர் யாவரும்" (3144) என்று இறைவர் அருளியமையாலே ஒருவரும் ஒழியாது எல்லாரும் என்றருளினர். வந்தோர் யாவரும் - "மாதொடும் புக்குறும் போதுவந்தார், ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லாலவ் வரும்பதமே" (ஆளுடைய பிள் - திருவந் - 60) என்ற நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கு இதற்காதரவாதல் காண்க.
"புகுக" என்ன - இஃது "யாவதும் வந்தெய்தும்" (3144) என்று இறைவர் தந்த ஆணையின்படியே பிள்ளையார் தம்மால் தகுதியாக்கப்பட்ட மக்களுக்கு ஆணை தந்தமையாம்.
என்ன - (அது கேட்டுப்) புக்கார் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.