காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலங் கொண்டருளித் தீதகற்ற வந்தருளுந் திருஞான சம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணியத னுட்புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனானார். | 1253
| (இ-ள்) காதலியை...வலங்கொண்டருளி - தேவியாரைக் கைப்பிடித்துக் கொண்டவாறே அப்பெருஞ் சோதியினை வலமாக வந்தருளி; தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் - உலகில் தீமையைப் போக்கிச் சைவம் விளங்கவென்றே வந்தருளிய திருஞான சம்பந்தப் பிள்ளையார்; நாதன்...புகுவார் - இறைவரது அழகியதாகிய வளர்ந்தெழுகின்ற சிவச் சோதியினை அணைந்து அதனுள்ளே புகுவாராய்; போத நிலை...உடனானார் - போதம் தழுவும்நிலை முடிந்தமையினாலே உள்புகுந்து ஒன்றாகச் சேர்ந்தது சிவானந்தாத்துவிதமாகிய உடனாற் தன்மையிற் பரமுத்தியைத் தலைக்கூடியருளினார். (வி-ரை) காதலி - தேவியார் - மனைவியார். பாச சம்பந்தமான காதலின் சார்பு பற்றிய காரணத்தாலே காதலி என உலகியலில் வழங்கும் காரணப்பெயர் ஈண்டு இடுகுறியளவாய் நின்றது, இங்குக் காதல் என்னும் பாசப் பற்றுப் பிள்ளையார்பால் விளைநிலம் இல்லாமையால் என்க; மறைவழக்கம் உலகியலில் நின்று நிலவுதல் காட்டுமளவில் நாடகம்போல் இங்கு இத்திருமணம் நிகழ்ந்தது என்பது முன் உரைத்தவாற்றால் அறியவுள்ளது(3140); திருவருள் ஆணைவழிப் பிள்ளையார் காதலியைக் கைப்பற்றிக் கொண்டு - இவ்வுலகைவிட்டு நீங்கினாரேயன்றிப் பெண்ணுடன் வாழ்தலை வெறுத்து நீங்கினாரில்லை என்று இங்கு விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு. அத்தகைய உலகியல் ஆராய்ச்சிகள் எழுவதற்கு இங்கு இடமே யில்லை என்க. பெண்ணுடன் உலகர் வாழ்ந்து இல்லறநிலை நின்று தாம் எடுத்த பிறவியில் எஞ்சிய கருமப் பகுதிகளை அனுபவித்துக் கழிவு செய்து சிவபுண்ணிய மேலீட்டினால் இறைவனை யடைவது உலகியல் நியதி; இவையெல்லாம் பாசமுடைய ஏனையோர்பால் செல்லுமேயன்றிப் பாசம் மற்று இலாராகிய பிள்ளையாரிடத்தும், இப்புராணத்துள் வரும் பெரியோர்பாலும் செல்லத்தக்கன வல்ல. பிள்ளையார் பெண்ணை வெறுத்தாரிலர் என்பதுண்மை; ஆயின் விரும்பினாருமல்லர் என்பது கண்கூடு. உலகர்க்கு மனைவியுடன் வாழும் இல்லறவாழ்வு இறைவனூல்களுள் விதிக்கப்பட்டது. அது மக்கட்குப் பாசநீக்கத்தின் பொருட்டு வேண்டுப்படுவன என்பதனைப் பிள்ளையார் முன்னர் திருமருகலில் வணிகப் பெண்ணுக்கு, "நானிலத்தி லின்புற்று வாழும்வண்ணம்...மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்ட" அருளிப்பாட்டினாலும் அறியலாம்(2381); பார்வதியம்மையார் திருமணம், தெய்வயானை யம்மையார் திருமணம் என்பனவற்றின் உள்ளுறைபோல இங்கும் உலகினர்க்கருளும் அளவுமட்டும் கருத்துட் கொள்ளத்தக்கது; அன்றி மேற்செல்வதெல்லாம் பொருந்தாவென்க. இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே என்றதனால் உலகியலில் வரும் இல்லறத்தைப் பிள்ளையார் சார்தலை வெறுத்தொதுக்கினர் என்றது அறியப்படும். வலங்கொண்டருளி - திருமணத்தில் எரிவலங்கொள்ளும் சடங்கு காட்டவேண்டி எழுந்த பிள்ளையார் "விருப்புறு மங்கி யாவார் விடையுயர்த் தவரே யென்று"(3139) கோயிலை நோக்கி வந்தாராதலின் இங்குப் பெரிய சோதியாய் நின்ற இறைவரது எரியுருவத்தினை வலங்கொண்ட ருளினர்: அச் சடங்கினை நிறைவேற்றிக் காட்டியருளிய படியும், இறைவரை வலங்கொண்டு ஏத்திச் சோதியினுள்ளே புகும் விதியின்படியும் காண்க. இதனாலும் இத்திருமணம் உலகியல் நிலையினின்று ஆயப்படுவதொன்றன்று என்பது. தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் - தீதகற்றல் - "பரசமய நிராகரித்தல்"; பரசமய நிராகரிப்பும்திருநீற்றின் ஆக்கமும் ஆகிய இரண்டுமே பிள்ளையாரின் திருவவதார உள்ளுறையாவன (1917-1921-1924 முதலியவை பார்க்க); இங்கு த்தீகற்றுதல் ஒன்றுமே கூறப்பட்டதென்னை? எனின், நோய் நீங்கினவழிச் சுகம் இயல்பிலே பின்பற்றி வரும் என்னுமுறைப்படி சைவத் திருநீற்று நெறிக்குப் பரசமயங்களால்ம நேர்ந்த இடையூருகள் அகற்றப்பட்டபோது நீற்றின் விளக்கம் இயல்பின் விளைவதாம் என்க. சைவநெறி என்பது இறைவரது மெய்ஞ்ஞான நெறியாதலின் அஃது அழிக்கலாகாப் பொருளாம். விளக்கினைக் குடத்தை யிட்டு மறைத்தல்போலச் சைவநெறி விளங்காமை மாத்திரையே பரசமயங்க ளியற்றிய தீங்கு மறைவுபடுத்திய குடத்தை அகற்றியபோது விளக்கத்தானே விளங்குதல் போலவும், மேகம் நீங்கிய போது சூரியன் ஒளி விரிதல் போலவும் காண்க; ஆயின் முன்னர் இரண்டினையும் கூறியது உலகினருக்கு விளக்கமும், மனவெழுச்சியும், ஊக்கமும் விளைத்தற்பொருட்டுத் தூண்டியறிவுறுத்தல் குறிக்க என்க. தீதகற்ற வந்தருளும் - வருதல் - திருவவதரித்தல்; ஏனை மக்கள் வருதல்போலக் கரும வயத்தாலன்று என்பது வற்புறுத்தப்பட்டது. திருஞான சம்பந்தர் - என்ற பெயராற் கூறியவாற்றானும் அந்நிலை விளக்கப்பட்டது. முழுதும் சிவஞாதனமேநிறைவாயின மூர்த்திக்கு உலகியலில் ஒருபற்றும் பற்றாமையும் உணர்த்தப்படாமை காண்க. ஈண்டுச் சரித நிறைவாதலின் அத்திருப்பெயராகிய "நாம மந்திர"த்தைக் கூறித்துதித்து அருச்சித்து நிறைவாக்கிய குறிப்புமாம். "ஞானசம் பந்த ரெனு நாமமந் திரமும் சொல்ல"(2619). நாதனெழில் வளர்சோதி - நாதன் - இறைவர் -முழுமுதல்வர்;தனக்கேயுரிய இறைமைக் குணத்தால் இவ்வாறு இவர்களை ஆட்கொண்டு திருவடிக்கீழ்க்கொள்ள இவ்வொழியுருவெடுத்தார் என்பது;"நாதனே" (3143); "நாதனாமம்" (தேவா). எழில் வளர் சோதி - எழில் -காட்சியானம் பயனாலும் வரும் அழகு;"செந்தீயின் உருவாளன்" என்பதன்றிச் சுடுதல் முதலியசெயலானன்று என்க; "தண்ணிழலாம் பதி","திருவடி நீழல்" என்பன காண்க வளர் - வளர்கின்ற - என்றும் அழிதலில்லாத; "ஈறில் பெருஞ்சோதி"(3150). நண்ணி - சோதியினை அணுகி; அணைந்து; அதனுள் - சோதி வாயிலினுள்ளே. புகுவார் - புகுவாராகி; புகும் செயலை மேற்கொண்டு; முற்றெச்சம். புகுவார் - புக்கொண்றி உடனனார் என்று கூட்டுக. போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடன் ஆனார் - போதநிலை முடிந்தவழி என்றது காண்பான் காட்சி - காட்சிப்பொருள் என்ற மூன்றுணர்வுள் முன்னைய விரண்டும் தோன்றாமல் ஞேயமொன்றே தோன்றநிற்கும் நிலையில் நிற்கும் என்பதாம்; திருவடி மறவாது அதனுற்றே அடங்கித் தானற்று நிற்கும் நிலை; சிவானந்த நிறைவு. ஒன்றி -இரண்டற்று; உடன் ஆதல் - ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றுமிரண்டு மின்றாகாமல்பிரிவறியாது நிற்கும் நிலை.முன் கூறியவர் எல்லாரும் புக்கார் -புக்கொடுங்கினார் - என்ற ஆசிரியர், இங்குப் பிள்ளையார் போதநிலை முடிந்த வழிப் புக்கொன்றி உடனானார் என்றதென்னை? எனின், பிள்ளையார் முன்னை நிலையில் (பண்டு)திருவடி மறவாப் பான்மையோராய் முத்த நிலையில் இருந்தவர்; அப்போது அவருக்குப் போதநிலை - அஃதாவது சிவனையன்றி வேறு நிலைகளும், யானறிந்தேன் அறிகின்றேன் என்பது முதலாகிய நிலைகளும், ஏனை உலக பதார்த்தங்களும், உலகமும் போதப்படா - உணர்ச்சிக்கு வாரா; அதன்பின் வினையாலன்றித் திருவருளால் வந்தபோது மூவாண்டு வரை ஒரோர்கால் முன்னைநிலை நினைவுக்கு வந்தபோது வெருக்கொண்டாற் போலக் குறிப்பு அயலாய் அழுதருளினர். மூவாண்டில் ஞானமுண்டருளிய பின் தாம், பரமே பார்த்திருந்தபடி முன்னையிற்போலவே சீவன்முத்த நிலையிற் சரித்தனர். ஆனால் உலகரின் பொருட்டுத் திருவருளால் வந்தமையின் உலகமும் உலகர் நிலைகளும் புலப்பட்டன; ஆயினும் வாசனாமலமும் அற்ற பெருமானாதலில் அவ்வுலகத் தோற்றங்கள் பிள்ளையார்பாற் சாராது வினைக்கு முளையாகாதபடி யொழிந்தன. "ஐயனேயஞ்ச லென்றருள் செய்யெனை"; "ஈவ தொன்றெமக் கில்லையேல்" முதலிய விண்ணப்பங்க ளெல்லாம் பிள்ளையாருக்கு உலக பந்தம் விளையாது பிறர்பொருட்டே நிகழ்ந்தொழிந்தன. "உடையாய் தகுமோ விவளுண் மெலிவே", "மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்பே", "அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்", "எமைத்தீண் டப்பெறா திருநீல கண்டம்", "காசு நல்குவீர்", "கதவந் திருக்காப்புக் கொளும்" என்பன முதலாக வந்தனவெல்லாம் பிறர் துன்பங் கண்டிரங்கிய நிலையில் உலகின் பொருட்டு எழுந்தனவேயன்றித் தம்பொருட்டன் றாதலின் பற்றுக்களாக விளையாதொழிந்தன. இப்போது இவ்வாறு தாம் வந்தருளிய உள்ளுறை நிலைவாகியதனால், அவ்வாறு உலகமும், அதன்பொருட்டுத் தாமும் இறைவரும் பிரித்து அறியவரும் நிலையும் இன்றாதல் குறிக்கப் போதநிலை முடிந்தவழி என்றார். போதம் - சிவபோதம் என்பாருமுண்டு. புக்கு ஒன்றாதல் - முன்னைய திருவடி மறவாத ஒன்றுபட்ட நிலையடைதல்; இடையில் உலகர் பொருட்ப பூதமுதல் நாதம் வரையில் தோன்றிய உலகத் தோற்றமாகிய பிரித்தறியு முணர்வு தோன்றாதொழிய முன்போலவே உள்ள நிலையடைந்தனர் என்க. இது பிள்ளையார் சோதியிற் புகுந்து பெற்ற நிலைக்கும், ஏனையோர் பெற்ற நிலைக்கும் உள்ள வேறுபாடு. எல்லாரும் புக்கதற்பின் தாமும் தேவியாரும் புக்கது பிள்ளையாரது திருவருளின் பெருமையினை மேலும் விளக்குவதாகும். காதலி - இவ்வம்மையார் பெயர் சொக்கியார் என்பது கல்வெட்டுக்களிற் காண்பதென்றும் கூறுவர். வலஞ் செய்தருளி - என்பதும் பாடம். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
|
|
|