பிள்ளையா ரெழுந்தருளிப் புக்கதற்பின் பெருங்கூத்தர் கொள்ளுநீ டியசோதிக் குறிநிலையவ் வழிகரப்ப வள்ளலார் தம்பழைய மணக்கோயி றோன்றுதலுந் தெள்ளுநீ ருலகத்துப் பெற்றிலார் தெருமந்தார். | 1254
| (இ-ள்) பிள்ளையார்....பின் - பிள்ளையார் சென்றருளி உட்புகுந் துடனாகிய பின்னர்; பெருங்கூத்தர்....கரப்ப - பேரானந்தக் கூத்தராகிய இறைவர் இவ்வாறு மணத்தில் வந்தோரையும் பிள்ளையாரையும் முத்தியில் உடனாகக்கொள்ளும் அளவும் நீடியிருந்த சோதிக் குறிநிலையும், அதன் உட்புகக் காட்டிய அநத் வழியாகிய வாயிலினையும் மறையும்படி செய்ய; வள்ளலார்....தோன்றுதலும் - சிவலோகத் தியாகேசரது பழய பெருமணக் கோயில் தோற்றப்படுதலும்; தெள்ளுநீர்...தெருமந்தார் -தெளிந்த நீருடைய உலகத்தில் இந்தப் பேற்றினைப் பெறாதவர்கள் மயங்கி வருந்தினார்கள். (வி-ரை) எழுந்தருளி- சோதி கண்டு, தாம் நின்று, நமச்சிவாயத் திருப்பதிகம் பாடிய நிலையினின்றும் சோதியை நண்ணி. கொள்ள - தமக்குள் சேர்த்து ஒடுக்கிக் கொள்ள. சோதிக் குறிநிலை அவ்வழி - சோதியாகிய இறைவரது குறிநிலையும், அதனுள் பக்குவான்மாக்கள் யாவரும் வந்தடையும்படி காட்டிய அவ்வழியும். வழி - வாயில்; சோதியின்கண் தோன்றும் குறிநிலையாகிய வழி என்றலுமாம். கூத்தர்...கரப்ப - கூத்தர் - இறைவர்; "முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு" என்றபடி இங்கு முத்தி தத்ருளியது இறைவரது தூக்கிய திருவடியே எனப்படும். திருவடி தூக்கலே கூத்தாகும், ஆதலின் ஈண்டுப் பெருங்கூத்தர் என்றார். வள்ளலார் - இங்கு, இச்சரித நிகழ்ச்சியினாலே - சிவலோக பதவியினைத் திறந்து யாவரும் கொள்ளும்படி அள்ளியிட்டதனால் இவருக்கு சிவலோகத் தியாகர் எனப் பெயர் வழங்கும். சிவலோகத்தினை வரையாது கொடுப்பவர். பழய மணக்கோயில் - பழய - சோதியும் வாயிலும் காட்டுதற்கு முன் இருந்த; மணக்கோயில் - பெருமணம் என்னும் கோயில். தெள்ளும் ர் உலகத்து - தெள்ளும் நீர் - தெளியும் நீர்க்கடல் சூழ்ந்த என்க. தெள்ளு நீர் - இதன் உண்மை தெளிந்துகொள்ளும் நீர்மை - பண்பு - உடைய என்றலுமாம். பெற்றிலார் - முன் கூறியபடி பெறும் பேறில்லாத உலகவர். தெருமந்தார் - தெருமருதல் - ஒன்றும் தோன்றாமல் மயங்கி வருந்துதல். கொள்ளநீடிய - பேறில்லார் - என்பனவும் பாடங்கள்.
|
|
|