அருந்தமிழா கரர்சரிதை யடியேனுக் கவர்பாதந் தரும்பரிசா லறிந்தபடி துதிசெய்தேன்; றாரணிமேற் பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால் வருந்தகைமைக் கலிக்காம னார்செய்கை வழுத்துவேன். | 1256
| (இ-ள்) அருந்தமிழாகரர்...துதி செய்தேன் - அரிய தமிழாகரராகிய ஆளுடைய பிள்ளையாரது திருச்சரிதத்தினை அடியேனுக்கு அவருடைய திருவடிகள் அறிவித்துத் தந்தருளிய பன்பினளவு அறிந்தவாறே துதி செய்து கூறினேன்; பெருங் கோடையும்...வழுத்துவேன் - இனிப் பெரிய கொடையும், உறுதிப்பாடாகிய வலிமையும், பேருணர்வும் திருத்தொண்டு செய்த காரணத்தால் பெற்ற பண்புடைய ஏயர்கோன் கலிக்காம நாயனார் செய்த திருத்தொண்டின் திறங்களைத் துதிக்கத் தொடங்குவேன். (வி-ரை) இதனால் ஆசிரியர் தமது நியமப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக் காட்டி, இனி மேல்வரும் சரிதத்துக்குத் தோற்றுவரய் செய்தருளுகின்றார். அருந் தமிழாகரர் - ஆகரம் - உறைவிடம்; பிறப்பிடம் என்றலுமாம். தமிழுாகரர் - தமிழுக்குறைவிட மாவனர்; அருந்தமிழ் - பிறவிப்பிணி நீக்கி வீடுபேறளிக்கும் சிறப்பு அருமைப்பாட்டினைத் தனதுரிமையாகக் கொண்ட தமிழ். "இருதாளின் புணை"(1981) என்றவிடத்தும், பிறாண்டும் உரைத்தவை எல்லாம் இங்கு நினைவு கூர்தற்பாலன. அருந் தமிழாகரர் என்றதொரு தன்மையினாலே முன் கூறியபடி பிள்ளையாரது சரித முழுமையும் குறிப்பிற் பெறவைத்த தெய்வக் கவிநலம் காண்க. என்னை? பிள்ளையாரது தமிழ் அவர் சிவஞானம் பெற்றமையால் போந்து "ஞானத் தமிழ்" என்றும் அடைந்தோரது பிறவி நீக்கும் தன்மை வாய்ந்ததென்றும் பேசப்படுவது; "எனதுரை தனதுரையாக"(தேவா) என்றபடி அஃது இறைவர் திருவாக்காகிய வேத சிவாகமங்களோ டொப்பாகிச், சைவத்தின் முடிந்த பயன்களாகப் பேசப்படும் பாசநீக்கமும் சிவப் பேறுமாகிய இருபெரும் பயன்களையும் தர ஏதுவாய் விளங்குவதற்கேற்பப் பரசமய நிராகரிப்பும் திருநீற்றி னாக்கமும் அருளியது; பிள்ளையாரது சரிதத்தினுள் வரும் வரலாறுகள் எல்லாம் இவ்வகையினுள் அடங்குதல் காண்க. அடியேனுக்கு - அறிவித்தாலன்றி அறியும் ஆற்றலில்லாத அடியேனுக்கு என்பது; தொடக்கத்திற் "பாதமலர் தலைக்கொண்டு" (1899) என்றபடியே, ஈண்டு முடிவிலும், அவரது திருவடிகளைத் தலைமேற் சூடிய புண்ணியத் துணை காரணமாக என்று காரணக் குறிப்புப் பெற அடியேனுக்கு என்று ஓதினார். அவர் பாதம் தரும் பரிசால் - "பாதமலர் தலைக்கொண்டு" என்று மேற்கொண்ட அத்திருப்பாதம் என அகரச்சுட்டு வருவிக்க. பாதமே அறியாமையை நீக்கி அடியார்க்கு ஞானத்தை அருளுவது என்றலுமாம்; "உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்"(முருகு). தரும் பரிசால் அறிந்தபடி - தருதல் - அறியத் தருதல்; அறியும்படி செய்தல். தரும் பரிசால் - முற்றும் அறிதல் எனது ஆற்றலுக்கு மேற்பட்டதாதலின் எனது குறைவுடைய சிறு பண்புக்கேற்ப அறிவிக்க அறிந்தவாறே; அறிந்த பொருளை அறிந்த அளவில். துதி செய்தேன் - வழுத்துவேன் - துதி செய்தேன் என்ற இறந்தகாலத்தினால் இதுவரை கூறிய சரிதம் என்றும், வழுத்துவேன் என்ற எதிர்காலத்தினால் இனிக் கூறும் சரிதம் என்றும் உணர்த்தியவாறு. இப்புராணத்துள் சரிதங் கூறுதல் என்பது துதி செய்தலே யன்றி மற்றில்லை என்றபடி. தாரணிமேல்.....வருந்தகைமை - என்று தோற்றுவாய் செய்த தன்மையினால் ஏயர்கோன் கலிக்காம நாயனாரது சரிதக் குறிப்பு உணர்த்தியவாறு; சரித நிகழ்ச்சிகள் காண்க. இவ்வாறே பிள்ளையாரது சரிதத் தோற்றுவாயினுள் "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப், பூதபரம பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத"(1899) என்று அவர்தம் பெருஞ்சரித உள்ளுறை யெல்லாங் காணவைத்த திறமும் கண்டுகொள்க. திண்ணனவும் - உறுதிப்பாடு பெற்ற மனவலிமையும் தோள்வலிமையும் குறித்தது. திருத்தொண்டால் வரும் - திருத்தொண்டின் காரணமாகப் பெறவரும். இவர், "திருப்புனகூர்க் கதிகமாயின திருப்பணி யனெகமுஞ் செய்"தமையும், இருபத்துநான்கு வேலி நிலம் தந்தமையும், "எம்பிரா னெந்தை தந்தை தந்தையெங் கூட்ட மெல்லாந், தம்பிரா னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழு, மிம்பரின் மிக்க வாழ்க்கை" (ஏயர் - புரா - 392 = 1899) என்று கூறும் திருத்தொண்டின் வைத்த பெருமிதமும், பிறவும் காண்க. செய்கை - வரலாறு; உடைவாளினால் வயிற்றினைக் கீறிக்கொண்ட செயலும் குறிப்பு. தண்ணளியும் - என்பதும் பாடம். |
|
|