பாடல் எண் :3974

மண்ணுக் குயிரா மெனுமன் னவனார்
எண்ணிற் பெருகுந் தலையா வையினும்
நண்ணிக் கொணருந் தலையொன் றினடுக்
கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.
33
(இ-ள்) மண்ணுக்கு......மன்னவனார் - மண்ணுலகத்தினுக்கு உயிரே போன்றவர் என்று சொல்லத்தக்க அம்மன்னவனார்; எண்ணில்....யாவையினும் - எண்ணினால் பெருகிய தலைகள் யாவையுள்ளும்; நண்ணி...ஒன்றின் நடு - சென்று கொண்டு வரும் தலை ஒன்றின் நடுவிலே - (உச்சியிலே); கண்...கண்டனரே - எண்ணப்படுகின்றதாகிய ஒரு சிறு சடையினைக் கண்டனர்.
(வி-ரை) மண்ணுக்கு உயிராம் எனும் - “மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங், கண்ணு மாவியு மாம்பெருங் காவலான்Ó (99) என்றதும், ஆண்டுரைத்தவையும் காண்க. “நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்Ó (புறம் - 386); எண்ணில் - எண் (இலக்கம்)ணினால்; அளவினால்.
நண்ணிக் கொணரும் - காணும் பொருட்டு குவியலினின்றும் எடுத்துக் கொணரும் (3975)
கண்ணுற்ற - கண்ணுதல் - நினைத்தல்; சிவனது சிறந்த அடையாளமென்று எண்ணப்படுதல்; “சடையான்Ó “கபர்த்தன்Ó என்பன சிவனுக்கே யுரிய பெயர்கள். நடுக்கண் - நடுவிடத்திலே என்றலுமாம்.
நடுக்கண்ணுற்றதொர் புன்சடை - நடுக்கண் - சிவனது தீக்கண்; ஆகுபெயராய் நடுக்கண்ணினையுடைய சிவன் என்று கொண்டு அவனது அடையாளமாய்ப் பொருந்திய என்றலுமாம். நடுக்கண் - இப்பொருளில் சிவனையுணர்த்திப் பின் அவனது அடையாளமான என இருமடியாகுபெயர். சிவனுக்குப் பொருந்திய சடை என்றலுமாம். புன்சடை - சிறுசடை; ஓர் - ஒன்று.