| துயர் மன்னி வாழ் உலகத்தவர் மாற்றிட - பிறவித் துன்பமே பொருந்தி வாழும் உரிர்கள், அதனை மாற்றிப் பிறவாத தன்மையுடைய சிவநெறி யடைந்திடும் பொருட்டு. |
| மொழிந்தனர் - துயர் தீர்க என்று ஆசி மொழிந்தனர். |
| இகத்துத் துயர் - பிணி சாக்காடு முதலியவற்றாலும், பரத்துத் துயர் - அலகை முதலியவற்றாலும் காணப்படும். |
| முன்னர் - தொடக்கத்தில்; ஞானோபதேசமாகிய இவ்விருளிப் பாட்டின் மங்கல வாழ்த்தாகிய இம் முதற்பாட்டில். |
| ஞானசம்பந்தர் மொழிந்தனர் - முதற்பாட்டின் உரை முடிந்தமை எழுவாயும் பயனிலையுமாகப் பிள்ளையாரது திருப்பெயருடன் வினைமுற்றுத் தந்து முடித்துக்காட்டினர். இவ்வாறே ஏனைய திருப்பாட்டுக்களினும் கண்டுகொள்க. இப்பதிகம் ஞானாசிரியராந் தன்மையில் வரும் உபதேசம் என்று குறிக்க இப்பெயராற் கூறினார். |
| திருப்பாசுரம்முதற்றிருப்பாட்டின் தொகைப்பொருள் - ஆசிரியர் காட்டியருளியவாறு :- இத் திருப்பாசுரமாகிய மெய்ம்மொழிப் பயன் உலகுயிர் யாவையும் துன்ப நீங்கி இன்பவாழ்வடைதலேயாம்; அது சங்கரர்க்குச் சந்த கேள்விகள் முதல் அர்ச்சனை வழிபாடுகள் மன்னுதலாலன்றி நிகழாது; அவை மன்னுதலின் பொருட்டு, அந்தணர்களும் தேவர்களும் ஆனினங்களும் வாழ்க; அவ்வேள்வி யர்ச்சனை வழிபாடுகளின் பயனாய் விளைந்து அவற்றிற்குரிய நல்லுறுப்பாகிய மழையும் வீழ்ந்து பெருகுக; அவற்றைக் காக்கும் மன்னவன் ஓங்குக; அவற்றால் வரும் நலங்களை அடையவொட்டாது கேடுவிளைக்கும் அயனெறிகளின் தீமை ஆழ்ந்து அவை தத்தமக்குரிய நிலைகளில் அமைந்தொழிக; உயிர்கள் யாவும் சிவனாமமோதி வளர்க; இவ்வாறு உலகுயிர்கள் துயர் நீங்குக என்றதாம். |
| தமக்கெனவன்றி உலகமின்புறும்படி வேள்வி யர்ச்சனை வழிபாடுகள் சங்கரர்க்கு இயற்றுவோர் அந்தணர்களாதலின் அவர்கள் முன்னும், அவ்வாழிபாடுகளைச் சிவனியதிப்படி ஏற்றுச் செலுத்துவோர் வானவராதலின் அவர்கள் அதன் பின்னும், வேள்வி வழிபாட்டுக்குரிய சிறந்த சௌவியங்களையும் திருநீற்றினையும் அளித்தலால் ஆனினம் அதன் பின்னும், வேள்வி வழிபாட்டின் பயனாய் வந்து அவற்றிற்குரிய இன்றியமையாதஉறுப்பாகிய நீரினையும் உலக சாதனங்களையும் தருதலால்(மழை) தண்புனல் அதன் பின்பும், இவ்வெல்லாவற்றையும் காத்தற்கடன் பூணுதலால் வேந்தன் அதன் பின்னும், கேட்டில் வீழாமை முதற்கண் வேண்டப்படுதலின் தீயது ஆழதல் அதன் பின்னும்,தீமை ஒழிந்தபோது இன்பம் பெறும் சாதனமாகிய அரன்பெயர் சூழ்தல் அதன்பின்னும், துயர்தீர்தலாகிய பயயன் அதன்பின்னும் ஓதப்பட்ட வைப்பு முறை கண்டுகொள்க. |
| இப்பாட்டுப் பின்வரும் ஞானோபதேசத்துக்கு முதற்கண் வைக்கப்பட்ட மங்கல வாழ்த்து எனக் காண்க. திருக்கயிலாயபதி நேரே குருவாய் எழுந்தருளி ஞானவமுதூட்ட உண்டு எண்ணரிய சிவஞானமுணர்ந்த கயிலாய பரம்பரையில் வந்த முதல்வராகிய பிள்ளையாரே இங்கு ஞானாசாரியார்; வைகைக்கரையே தீட்சாமண்டபம்; பாண்டியனே பக்குவமுற்ற நன்மாணவகர்; உரைத்தறிவுறுத்திய பொருள் மெய்ஞ்ஞானம்; "ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல், ஊனத் திரளை நீக்கு மதுவும் உண்மைப் பொருள்போலும்" (அண்ணாமலை - பிள் - தேவா); "மன்ற, பாண்டியன் கேட்பக் கிளக்குமெய்ஞ் ஞானத்தின்" (இருபாவிருபஃது - 2); "எல்லா மரனாமமே சூழ்க" என்றதனால் வணக்கமும், வாழ்க அந்தணர் என்றதனால் வாழ்த்தும், அரனாமமே என்றதனால் சாதனமும், துயர் தீர்கவே என்றதனாற் பயனும், கூறிய திறமும்; |