| அல்லா ஒளி எலாம் வந்து வெந்து அற - ஈண்டு அல்லா ஒளி என்றது சிவனை யல்லாத எல்லாப் பொருள்களின் ஒளி. ஒளி - ஒளியுடைப் பொருள் - சக்தி - என்ற பொருளில் வந்தது. வந்து - சிருட்டியின்கண்ணே பட்டுத் தோன்றி. வெந்துஅற - சங்கரிக்கப்பட்டு ஒழிய. |
| மற்று அப்பொடி - மற்ற அந்தச் சாம்பர்; மற்று - தாமல்லாத ஏனையவை. |
| அணி சந்தம் - அணியும் சாந்து; கொண்ட - ஏற்றுக் கொண்ட. |
| வண்ணம் - தன்மை; திருமேனி வண்ணம் என்றலுமாம். |
| தமது அந்தமில் ஒளி அல்லா ஒளி எல்லாம் - வெந்தற - என்றதனால் இங்குக் கூறியது நிவிர்த்திகலை முதலிய பஞ்சகலைகளுட்பட்ட ஐவகைச் சங்காரத்துள் இறுதிக் கண்ணதாகிய மாசங்காரத்தை; அந்தமில் ஒளி - சிவசத்தி; அல்லா ஒளியெல்லாம் - அவ்வச் சங்காரத்துட்பட்டு ஒடுங்கும் தத்துவ புவனங்களின் அதிதெய்வங்களும் அவற்றின் சத்திகளும்; மாசங்காரத்தில் ஐவகைக் கலைகளுள் இறுதிக்கண்ணதாகிய சாந்தியதீத கலையிலடங்கிய தத்துவ புவனங்களும் தெய்வங்களும் எல்லாம் சிவனது அந்தமில் ஒளியினுள் ஒடுங்குவனவாதலின் எல்லாம் என்றதனால் ஈண்டுக் கூறியது சுத்தமாயா புவனாந்தஞ் சங்கரிக்கும் சங்கார காரணனாகிய பரமசிவனை; அயன்மா லொடுங்கூடக் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதி புவனாந்தஞ் சங்கரிக்கும் குணிருத்திரனை யன்றென உணர்க;....இவ்வேறுபா டுணர்த்தற்கன்றே பொதுப்படச் சாங்கார காரணனையென் றொழியாது சங்காரணனாயுள்ள முதலையே என விதந்தோதியதும் என்க என்ற சிவஞானபோத முதற்சூத்திர மாபாடிய உரை கருதுக. |
| வந்து வெந்தற - தோற்றப்பட்ட அம்முறையே சங்காரக்கிரமத்தில் ஒடுங்கி. |
| பொடியணிதல் - பொடி சந்தமாக் கொள்ளுதல் புனருற்பவம் குறித்தது; மறு பயிர்க்குரிய விதைமுதலைக் கோட்டை செய்து சேமித்தல் போல மீளச் சிருட்டித்தற் பொருட்டுத் தாங்குதல் என்க. |
| மேல்வரும் பாட்டில் "அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ, திமைத்த சோதி யடக்கிப்பின் னீதலால்"(2728) என்று இக்கருத்தை விரித்தல் காண்க. "ஒடுங்கி மலத்துளதாம்" என்ற சிவஞானபோத முதற் சூத்திரமுங் காண்க; "வீந்த சுடலை விபூதி தரித்திருவர், கூர்ந்த தலைமாலை கொண்டவரார்" என்ற இரட்டையர் திருவேகம்ப ரம்மானை இதனைப் போற்றுதல் காண்க; "அவர்தமை விழியாற் றொல்லை நாளினீ றாக்கியும் புனைந்திடுந் தூயோன்" எனவரும் (ததீசியுத்தரப் படலம் - 13) கந்த புராணமும், "எலும்புங் கபாலமு மேந்தில னாகில், எலும்புங் கபாலமு மிற்றுமண் ணாமே" (2 - தந் - 371) என்ற திருமந்திரமும் காண்க. |
| 829 |
| 2728. (வி-ரை) தமக்குத் தந்தையார் தாயிலர் - "தந்தையா ரொடுதாயிலர்" என்ற பதிகப்பாட்டுப் பகுதி. என்பதும் - இது முன்சொன்ன கருத்தைத் தொடர்ந்து கொண்டு விரித்தலால் உம்மை இறந்தது தழுவியது. |
| இங்கு அமைத்து - என்க. இங்கு என்ற சுட்டு தம்மிடத் தொடுங்கிய நிலையினின்றும் வருவிக்கும் சிருட்டிநிலை குறித்தது. "இங்கு மங்கு மென்பதும்" (திருவா). |
| யாவையும் - ஐந்து கலைகளினுட்பட்ட எல்லாப் புவனங்களும் புவனாதிபதிகளும். "ஒளியெலாம்" என முன்பாட்டிற் கூறியதைத் தொடர்ந்து கொண்டார். |
| ஆங்கு - சிருட்டிமுறையில் தோற்றிய அவ்வாறே; வீந்தபோது - சங்கரிக்கப்பட்டபோது. |
| இமைத்த சோதி - வெளிப்பட்டு ஒடுங்கித் தொழிலற்றிருக்கும் சிவசக்தி; சங்காரஞ் செய்த தமது நெற்றி நாட்டத் தொரு சிறுபொறி என்ற குறிப்பும் தருவது. |